சபரிமலையில் 14ம் தேதி முதல் தரிசனத்துக்கு அனுமதி
1 min read
6.6.2020
கேரளாவில் தற்போது ஊரடங்கு சட்டத்தில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வழிபாட்டுத்தலங்களையும் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. ஆனால் 8ம் தேதிக்கு பின்னரே இதுகுறித்து தீர்மானிக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதியாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கேரளாவில் வரும் 8ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத்தலங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என கேரள தலைமை செயலாளர் விஸ்வாஸ் நேத்தா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய அரசும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் வழிபாட்டுத்தலங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்-லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பம்பை, நிலக்கல் மற்றும் சன்னிதானத்தில் ஆகிய இடங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்கள் பரிசோதிக்கப்படுவர். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் சபரிமலை வர அனுமதி இல்லை. நெய்யபிஷேகம் செய்வதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சபரிமலையில் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14ம் தேதி மாலை 5 மணிக்கு ேகாயில் நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ேகாயில் நடை வரும் 19ம் தேதி வரை திறந்திருக்கும். அந்நாட்களில் பக்தர்கள் விதிமுறைகளை கடைபிடித்து தரிசனம் செய்யலாம்.
வெளிமாநில பக்தர்களுக்கு தடையில்லை. தேவசம் ஊழியர்கள் அனைவரும் மாஸ்க் மற்றும் கையுறைகள் அணிந்திருக்க வேண்டும். இதுபோல ஷாப்பிங் மால்களும் வரும் 8ம் தேதி துப்புரவு பணிகளை செய்து, மறுநாள் முதல் திறந்து செயல்படுத்தலாம்.