காதலி வீட்டில் வாலிபர் படுகொலை -4பேர் கைது
1 min read
6.6.2020
4 persons arrested for murdering youth in girlfriend’s houseகடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பூதவராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (43), கொத்தனார். தற்போது சிதம்பரம் ரங்கநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். இவரது மகளும் சிதம்பரம் வ.உ.சி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகனும் (21) கடந்த ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர். இதைப் பார்த்த இருவரின் குடும்பத்தினரும் இவர்களை கண்டித்துள்ளனர். ஆனால் இருவரும் தங்களது வீடுகளுக்கு தெரியாமல் பேசி, பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்பழகன் 5ம் தேதி காலை ரங்கநாதன் நகரில் உள்ள பாபு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அன்றிரவு அங்கு அன்பழகன் காயங்களுடன் இறந்து கிடப்பதாக சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அன்பழகன், பாபு வீட்டுக்குள் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரின் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தது. பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தகராறில் அன்பழகன் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவரது தாயார் ஜானகி அளித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து பாபு, அவரது மனைவி சத்யா, மகன் ஜீவா, அவரது மகள் உள்ளிட்ட 4 பேரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டிருப்பது சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.