June 7, 2026

Seithi Saral

Tamil News Channel

கீழடி அகழாய்வில் அடுத்த திருப்பம்:முதுமக்கள் தாழியுடன் மண்டை ஓடு கிடைத்தது

1 min read
Seithi Saral featured Image


Skulls in Muthumakkal thali at Keeladu

6-5-2020

தமிழர்களின் தொன்மையை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் நடந்து வரும் கீழடி அகழாய்வில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கீழடி என்பது, மதுரைக்கு அருகில், சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் வரும் கிராமமாகும். இங்கு 6-வது கட்டமாக நடந்து வரும் அகழாய்வுகள் பூமிக்குள் புதைந்த தமிழர்களின் பழமையான நாகரிகம் பற்றிய அரிய பல தகவல்களை தந்து கொண்டு இருக்கின்றன. 2 நாட்களுக்கு முன் 2 மீட்டர் ஆழ குழிதோண்டியபோது விலங்கு ஒன்றின் முதுகெலும்பு கிடைத்தது. அது மாடாக இருக்கலாம் என்ற கருத்து நிலவினாலும், எந்த விலங்கு என்பதை ஆய்வுக்குப்பிறகே கூறமுடியும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழியின் முதுகெலும்பா?

அந்தக்காலத்தில் யாழி என்ற ஒரு விலங்கு இருந்ததாகச் சொல்வார்கள். சிங்க முகமும், குதிரை உடலும் கொண்ட இதனை கோவில் சிற்பங்களில் காணலாம். அந்த யாழியின் முதுகெலும்பாகக் கூட இது இருக்கலாம் என்று ஒருசிலர் தகவல் வெளியிட்டனர். இதை மறுத்த அதிகாரிகள், அகழாய்வுப்பணியில் கிடைக்கும் தடயங்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்தே எதையும் உறுதியாகக்கூற முடியும் என்றனர்.

இந்நிலையில் அகழாய்வின் அடுத்த கட்ட திருப்பமாக இன்றைய தினம் (ஜூன் 5) முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. கீழடிக்கு அருகே, தென்னந்தோப்பு ஒன்றில் குழிதோண்டியபோது கிடைத்த இந்த முதுமக்கள் தாழிக்குள் மண்டை ஓடு, எலும்புத்துண்டுகள், தண்ணீர் குவளை போன்றவை இருந்தன. அவற்றை பத்திரமாக சேகரித்த தொல்லியல் துறை அலுவலர்கள், இவை எந்தக்காலத்தவை என்பதை அறியும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கீழடியை அடுத்துள்ள கொந்தகையில் ஏற்கனவே “கொரோனா ஊரடங்கு”க்கு முன்னரே நடந்த அகழாய்விலும் முதுமக்கள் தாழியுடன் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கீழடியில் தோண்டத்தோண்ட கிடைக்கும் இதுபோன்ற  தடயங்கள் தொல்லியல்  துறைக்கு உற்சாகத்தை அளித்துள்ளன. இந்தத்தடயங்களை உடனுக்குடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளையும் விரைவாக வெளியிடவேண்டும் என்பது உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் விருப்பமாகும்.

           

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *