திருப்பதி தேவஸ்தானத்தை அவதூறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது வழக்கு
1 min read
ctor Sivakumar sued for slandering Tirupati Devasthanam
7-5-2020
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை, அவதுாறாக பேசியதாக நடிகர் சிவகுமார் மீது திருமலை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பதி மீது அவதூறு
திருப்பதி திருமலை தேவஸ்தானம் மீது வலை தளங்களில் சிலர் கருத்துவெளிட்டனர். சிலர் அவதூறுகளை பரப்புவதாகவும் கூறப்பட்டது.
“ஜூன் மாதம் 30-ந் தேதி வரை பக்தர்களுக்கு, திருமலையில் தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று, சமூக வளைதளங்களில் 3 பேர் தவறான செய்தி வெளியிட்டனர்.
இதேபோல் மே மாதம் 7-ந் தேதி திருப்பதி கோவில் பற்றி ஒருவர் முகநூலில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில் ” திருப்பதி திருமலை இதற்கு முன், புத்த விகாரமாக இருந்தது. தலைமுடி காணிக்கை என்பது, இந்துக்களின் வழக்கம் அல்ல; பவுத்தர்கள் பழக்கம். ‘திருமலையில் இருந்த புத்தர் சிலையை எடுத்து விட்டு, ஏழுமலையான் சிலை நிறுவப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
போலீசில் புகார்
இதுபற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருமலை இரண்டாவது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தது. அந்த புகாரில், “தேவஸ்தானத்தை விமர்சிக்கும் வகையில், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாவதால், பக்தர்கள் மன வேதனை அடைகின்றனர். எனவே, பக்தர்கள் மன வேதனைப்படும் வகையில், ஏழுமலையான் குறித்தும், தேவஸ்தானம் குறித்தும், அவதுாறாக பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினரான, சுதா நாராயணமூர்த்தி, தன் பதவியை ராஜினாமா செய்ததாக, முகநுாலில் தவறான செய்தி வெளியிட்ட நபர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சிவகுமார்
இந்த நிலையில் நடிகர் சிவகுமார் பேசியதாக வெளியான வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில் திருப்பதி திருமலை தேவஸ்தானம் பற்றி விமர்சித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் மாயன் என்பவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பினார்.
அதன் அடிப்படையில், நடிகர் சிவகுமார் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிவகுமார் பேசியது என்ன?
சிவகுமார் ஒரு வீடியோவில் திருப்பதி பற்றி பேசியபோது.., “திருப்பதி கோவிலுக்கு ஒருவர் கஷ்டப்பட்டு நடந்து செல்கிறார்.அவர் 4 நாட்கள் கழித்துதான் தரிசனம் செய்ய முடிகிறது. ஆனால் பணக்காரர் ஒருவர் ஒரு பெண்ணுடன் அதிகாலையில் கோவிலுக்கு செல்கிறார். அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அவர் குளிக்காமல் செல்கிறார்..” என்று பேசியுள்ளாா.
கடந்த மாதம் சிவகுமாரின் மருமகளும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றி பேசியதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இப்போது சிவகுமார் திருப்பதி கோவில்பற்றி பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.