சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோரை அனுப்ப வேண்டும்- சேரன் கருத்து
1 min read
Let go of hometown- Cheran comment
19-6-2020
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோரை தடையின்றி அனுப்ப வேண்டும் என்று நடிகர்-இயக்குனர் சேரன் கூறுகிறார்.
சேரன் கருத்து
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மிக அதிக அளவில் பரவி வருகிறது. இதனால் பலர் சென்னையை விட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முனைகிறார்கள். ஆனால் அவர்களுக்கு இ-பாஸ் கிடைப்பது இல்லை. எனவே பலர் திருட்டுத்தனமாக செல்கிறார்கள். அவர்களில் பலர் போலீசாரிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகரும் இயக்கனருமான சேரன் முதல்-அமைச்சருக்கு வலைதளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர்வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
15 நாட்களில் முடிந்து விடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தயங்கியவர்கள் நிறைய பேர். இப்போது போக நினைக்கிறார்கள். சுகாதாரமாக இருக்கும் அவர்கள் ஏதோ ஒரு காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டி உள்ளது.
அனுப்ப வேண்டும்
அவர்களுக்கும் அதன் மூலம் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சென்னையில் கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும் விரைவில் சரி செய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.
மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்கள் உயிரோடு வைத்துக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.
இவ்வாறு சேரன் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.