May 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்: மேலும் 3 உயிர்கள் பலி

1 min read
Continued police violations: 3 more killed

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மக்களை பதம் பார்த்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ஊரடங்கு, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. இந்த ஊரடங்கின் நோக்கம் கொரோனா பரவலைத் தடுப்பது தான் என்பதால் பெரும்பாலான மக்கள் அதற்கு கட்டுப்படத்தான் செய்கிறார்கள். என்றாலும், சிலர் ஊரடங்கு விதிகளை மீறி காவல்துறையிடம் சிக்கி படாதபாடுபடுகிறார்கள். 

காவல்துறையில் நல்லுள்ளம் படைத்தோர் மக்களிடம் கனிவாக நடந்து ஊரடங்கை கடைபிடிக்க வைக்கிறார்கள். உள்ளம் இருக்கவேண்டிய இடத்தில் பள்ளம் இருப்போர் மட்டும் கொரோனா வைரசை விட கொடியவர்களாக ஆட்டம் போடுகிறார்கள். அப்படித்தான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையைத் திறந்துவைத்த குற்றத்திற்காக, மரக்கடை உரிமையாளர் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரை பிடித்துச்சென்ற காவலர்கள் ஈவுஇரக்கமின்றித் தாக்கி, பின்பு சிறைக்கு அனுப்பிய நிலையில், இருவருமே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே மக்கள் கொந்தளிப்பான மனநிலையில் உள்ளனர். தந்தை-மகன் உயிர்களைப்பறித்த காவலர்கள், பணியிடை நீக்கம் என்ற “உதவாக்கரை” தண்டனையோடு தலைமறைவாகி விட்டனர்..

மேலும், அந்தக்காவலர்கள் தந்தை-மகனை நீதிமன்றக்காவலுக்கு அனுப்புவதற்கு முன் மருத்துவப்பரிசோதனை நடத்தாமலேயே அரசு மருத்துவரை நிர்ப்பந்தம் செய்து சான்றிதழ் பெற்றது, குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் பார்க்காமலேயே மாஜிஸ்திரேட்டு காவலுக்கு அனுப்பியது, கோவில்பட்டி கிளைச்சிறை பொறுப்பு அலுவலர் காயத்துடன் கொண்டு வரப்பட்ட இருவரையும் சிறையில் அனுமதிக்க தயக்கம் காட்டியது ஆகிய விஷயங்களும் அம்பலமாகி, போலீசின் அராஜகத்தை வெட்டவெளிச்சம் ஆக்கி வருகின்றன. இவ்வளவு குற்றங்களை சுமந்துபொண்டு தலைமறைவாக இருக்கும் காவலர்களை கொலை வழக்குப்போட்டு இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்று மக்கள் எழுப்பிய குரலுக்கு தமிழக அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை  

13 பேரை சுட்டுக்கொன்றதும் இதே மாவட்டத்தில் தான்

 ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அந்தக்கொடுமைக்கும் இதுவரை நீதி கிடைத்தபாடில்லை. அதே மாவட்டத்தில் அடுத்த கொடுமையாக சாத்தான்குளம் சம்பவம் அரங்கேறியவேளையில், அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தினரால் மேலும் ஒரு உயிரும் பறிக்கப்பட்டது அம்பலமாகி இருக்கிறது. 

சாத்தான்குளம் பக்கத்தில் உள்ள பேய்க்குளத்தில் மகேந்திரன் (27) என்ற வாலிபரை கடந்த மாதம் காவலர்கள் கடுமையாகத்தாக்கி இருக்கிறார்கள். படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த 13-ந்தேதி இறந்து விட்டார். இந்தத் தகவல் தாமதமாக இப்போது தான் கசிந்து இருக்கிறது. 

சாத்தான்குளத்தில் தொடர்ந்து வரும் இதுபோன்ற “ஸ்டேஷன் கவனிப்பு”களின் பின்புலத்தில் “பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ்” என்ற போர்வையில் செயல்படுவோர் பயன்படுத்திக்கொள்ளப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் யார்? அவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார் என்ற கேள்வியும் பொதுமக்களிடம் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. 

சாத்தான்குளத்தோடு இந்த கொடுமைகள் முடிந்து விட்டனவா என்றால் இல்லையில்லை என்கிறது, எட்டயபுரம் சம்பவம். இதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகரம் தான். அங்கு பறிபோன ஆத்மாவின்பெயர், கணேசமூர்த்தி (வயது 29).

கட்டிடத்தொழிலாளியான இவர், கடந்த 20-ந்தேதி மோட்டார்சைக்கிளில் சென்றபோது கீழேவிழுந்து காயம் அடைந்தார். அப்போது அந்த வழியாகச்சென்ற சிஜடி போலீசார் 5 பேர், விசாரணை என்ற பெயரில் அவரைப்பிடித்து சரமாரியாகத்தாக்கினர். அவருடைய பெற்றோர் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து வீடு திரும்பிய கணேசமூர்த்தி, போலீஸ் தாக்குதலால் அவமானம் அடைந்து, தன் மகனின் நோட்டுப்புத்தகத்தில், தனது சாவுக்கு சிஐடி போலீசார் தான் காரணம் என்று எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் தெருவுக்கு வந்து போராடினர். அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, சம்பந்தப்பட்ட போலீசாரை பணியிடமாற்றம் செய்ய, அமைச்சர் கடம்பூர் ராஜூ சம்மதித்தார். அதோடு, உயிர் இழந்தவரின் மனைவிக்கு 15 நாளில் அரசு வேலை வழங்கப்படும் என்று உறுதியளித்து, ரூ.4 லட்சம் நிவாரணமும் வழங்க ஏற்பாடு செய்தார். 

இந்த சம்பவத்தில் எழும்கேள்வி என்னவென்றால்,போலீசார் மீது தவறு இல்லையென்றால், அரசு ஏன் நிவாரணத்தொகை வழங்கி, அரசு வேலையும் தருவதாக உறுதி அளித்தது என்பது தான்.

அண்டை மாவட்டத்திலும் சித்ரவதை

தூத்துக்குடி மாவட்டத்தில் இப்படி கொடுமைகள் தொடரும் நிலையில், அதன் அண்டை மாவட்டமான தென்காசியிலும் போலீஸ் கொடுமைக்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிர் இழந்து இருக்கிறார். அவர் பெயர் குமரேசன் (வயது 25). நிலத்தகராறு புகார் காரணமாக கடந்த மாதம் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கு பலமுறை குமரேசன் வரவழைக்கப்பட்டுள்ளார். அவரை விசாரித்த போலீசார், அவருடைய தந்தை நவநீதகிருஷ்ணன் கண்முன்னே  சரமாரியாகத்தாக்கியுள்ளனர். கன்னத்தில் அறை, லத்தியால் அடி, பூட்ஸ் காலால் இருதொடைகளிலும் மிதி என படுகாயம் அடைந்த குமரேசன், வீ.கே. புதூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. எனவே, நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்றையதினம் (ஜூன் 27) இறந்துபோனார். இதனால் அவருடைய உறவினர்களும்,பொதுமக்களும் வீ.கே. புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.  அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் உயர்அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஆலங்குளத்திலும் இதற்காக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல் துறையினரில் நேர்மையானவர்களும், மனிதாபிமானமிக்கவர்களும் தம்முயிரை துச்சமென மதித்து காவல் பணியில்  இரவு-பகலாக ஈடுபட்டு வரும்போது, சுயநலமிக்க சில புல்லுருவிகள்  மிருகத்தனமாக இப்படி மனிதஉயிர்களை காவு வாங்குவது நிறுத்தப்படவேண்டும். மாநிலத்தை ஆளும் அரசுக்கு நடப்பது, நடந்தது எல்லாம் நிச்சயம் தெரியும். அப்படி இருந்தும், தவறுசெய்யும் காவலர்களை பாதுகாக்க நினைத்தால், மக்களைத்தேடி வரும்போது அவர்கள் தக்க பதில் சொல்வார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

சிபிஐ விசாரணை

இந்நிலையில், தலைவாசலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாத்தான்குளம் சம்பவம் பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிவித்தார்.

–மணிராஜ்

                

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.