May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தந்தை-மகன் மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு: எடப்பாடி பழனிசாமி தகவல்

1 min read


father-son death case will sent to CBI: Edappadi Palanisamy

28-7-2020

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை-மகன் மரணம் அடைந்த வழக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கால்நடை பூங்கா

சேலம் அருகே தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா அமையும் இடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.பி.ஐ.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த
ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிஸ் ஆகியோரது கடையை மூடுவது
சம்பந்தமான பிரச்சினையில், அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்துள்ளனர். இது குறித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு
குறித்து சிபிஐ மூலம் விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற
மதுரை கிளைக்கு விசாரணைக்கு வருகின்றபொழுது, இதைத் தெரிவித்து, நீதிமன்றஅனுமதி பெற்று, சிபிஐ-யிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

5 சம்பவங்கள்

கேள்வி: இதுபோன்று இந்த ஒரு வாரத்தில் காவல் துறை தாக்குதல் தொடர்பாக
5 சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன, காவல் துறைக்கு ஏதாவது அறிவுரை
வழங்கியிருக்கிறீர்களா?
பதில்: ஏற்கனவே காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடத்திலும்,
வியாபாரிகளிடத்திலும் அன்பாகப் பழக வேண்டும், அன்பாக நடந்து கொள்ள வேண்டும், ஏதேனும் பிரச்சினை என்றால் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில், தேவையில்லாமல் பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா

கேள்வி: கொரோனா தொற்று பாதிப்பினால் அதிகாரிகள், காவல் துறையினர், மக்கள்
பிரதிநிதிகள் மற்றும் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் எந்த ஆலோசனையையும் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறாரே?
பதில்: பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர், இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸ் தொற்று நோயினால் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும். இது உலகையே அச்சுறுத்தி உலுக்கிக் கொண்டிருக்கிற ஒரு கொடிய வைரஸ் நோய். இதைப்பற்றி ஒவ்வொரு மருத்துவ நிபுணர்களும், வல்லுநர்களும் வெவ்வேறு விதமாக சொல்கின்றார்கள். இது ஒரு புதிய தொற்று நோய். இந்த நோய்த் தொற்று இப்பொழுதுதான் உலகத்திற்கே வந்திருக்கிறது, தமிழகத்திற்கும் பரவியுள்ளது. இதைத் தடுப்பதற்கு அரசு கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏறத்தாழ, மூன்று மாத காலமாக, இதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சித் துறை,
காவல்துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு நோய் பரவலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தியாவிலேயே அதிகமான
பரிசோதனைகளை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினால் இந்த நோயை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்து
கண்டுபிடிக்கப்படவில்லை. அவ்வாறு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த மருந்தை கொடுத்து குணப்படுத்தியிருக்க முடியும்.
ஆனால், இந்த நோயினால் உலகமே இன்றைக்கு அதிர்ந்து போயிருக்கின்ற
சூழ்நிலையில், தமிழகத்தில், உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை,
ஐ.சி.எம்.ஆர்., மருத்துவ வல்லுநர் குழுவைச் சேர்ந்தவர்கள் அளிக்கின்ற ஆலோசனைகளின்படி நம்முடைய மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், சரியான முறையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணத்தினால்தான் நமது மாநிலத்தில் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டிருக்கின்றது. மற்ற மாநிலங்களில் கொரோனா தொற்றினால்
பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்களையும் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுப் பாருங்கள். எந்த அளவிற்கு குறைவாக இருக்கிறது என்று தெரியும். அதற்குக் காரணம் மருத்துவ நிபுணர்கள் அளிக்கின்ற ஆலோசனையின்படி, சரியான முறையில் நம்முடைய மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை அளித்ததன் காரணத்தினால், பெரும்பாலானோர்
குணமடைந்திருக்கின்றனர்.
மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ நிபுணர்கள், உலக சுகாதார அமைப்பு, மத்திய
சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர். இவர்களெல்லாம் குறிப்பிட்டதை வைத்துத்தான் இந்த நோய்ப் பரவலை தடுப்பதற்குண்டான முயற்சிகளை நாம் கடுமையாக எடுத்து வருகிறோம்.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களெல்லாம் இந்த தொற்று நோய் பரவுவதை தடுக்கின்ற பணியில்
ஈடுபட்டிருக்கின்றார்கள். பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களும் செய்தியை
சேகரிக்க செல்லும்பொழுது பாதிக்கப்படுகின்றனர். இது ஒரு வைரஸ் தொற்று நோய். அரசைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும். அதற்காக அரசு
இயந்திரம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களை குணமடையச் செய்வதுதான் எங்களது தலையாய கடமை. அதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டுக்
கொண்டிருக்கிறோம்.

அரசியல்

கேள்வி : கொரோனா தொற்று விஷயத்தில் அரசியல் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் சொல்கிறாரே?
பதில்: ஸ்டாலின் அவர்கள் தினந்தோறும் என்ன அறிக்கை விடுகிறார்? அரசியல்
ரீதியாகத்தான் அறிக்கை விடுகிறார். நோய்த் தொற்று சம்பந்தமாக ஏதாவது அறிக்கை விடுகிறாரா? நோய் பரவலை எப்படி தடுக்க முடியும், நோய் வந்தால் எப்படி குணப்படுத்த முடியும் என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா? தினந்தோறும் அரசைப் பற்றியும், முதலமைச்சரைப் பற்றியும் குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்துக்
கொண்டிருக்கிறார். வீட்டிற்குள் அறையிலேயே இருக்கிறார், இவர் எங்காவது வெளியில் போயிருக்கிறாரா? ஏதோ ஒரு நாள், இரண்டு நாட்கள் சென்று பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது போல் காட்டிவிட்டு வந்துவிட்டார். நாங்கள் அப்படியல்ல. நான், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தங்களால் இயன்ற வரை பாதிக்கப்பட்ட மக்களை குணமடையச் செய்வதில் அக்கறை செலுத்தி, மேலும் நோய் பரவாமல் தடுப்பதற்குண்டான முயற்சிகளை எடுத்து வருகிறோம். இந்த வைரஸ்நோயினால் வல்லரசு நாடுகளே, வளர்ந்த நாடுகள் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்
போன்றவையெல்லாம் திணறிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், நம்முடைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களை வைத்து, மருத்துவ வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் சொல்கின்ற ஆலோசனைகளைப் பின்பற்றி
பாதிக்கப்பட்டவர்களை குணமடையச் செய்து கொண்டிருக்கிறோம்.
பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களான விலையில்லா
அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் மற்றும் ரூ.1000/- கொடுத்திருக்கிறோம்.
சென்னையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டவுடன் எல்லோருக்கும் ரூ.1000 கொடுத்திருக்கிறோம். அதேபோல, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உதவித் தொகை கொடுத்திருக்கிறோம். தமிழகத்தில் தங்கி பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் கொடுத்திருக்கிறோம். வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு அரசாங்கமே முழு செலவும் செய்து ரயில் மூலம் அனுப்பி வைத்திருக்கிறது.
இப்பொழுது, அந்த வெளி மாநிலத் தொழிலாளர்களே மீண்டும் இங்கு வந்து பணிபுரிய தயாராக இருப்பதாகவும், அவர்கள் திரும்ப இங்கு வந்து பணியாற்றுவதற்கு அனுமதி கொடுங்கள் என்று பல நிறுவனங்கள் எங்களிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.
எனவே, அரசைப் பொறுத்தவரை, நோய் தடுப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு
செயல்பட்டுக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

கேள்வி: சென்னை, மதுரை, தேனி ஆகியவற்றைத் தொடர்ந்து, சேலத்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறதே?
பதில்: சேலத்தில் இந்த நோய் தொற்று அதிகமாக இல்லை. சேலம் மாவட்டத்தைச்
சேர்ந்தவர்களில் 310 பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர், வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 213 பேர், வேறு மாவட்டத்திலிருந்து வேலைக்குச் சென்று திரும்பியவர்கள் 214 பேர் என
மொத்தம் 818 பேர் சேலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்கள்
437 பேர், இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 379 பேர்,
இறந்தவர்கள் 2 பேர்.

ஊரடங்கு நீட்டிப்பா?

கேள்வி : ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
பதில் : நாளையதினம் மருத்துவ நிபுணர்கள், வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற உள்ளது. அவர்கள் கூறும் ஆலோசனைகளைப் பொறுத்துத்தான் அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.