April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

வார்த்தைகள்., மனமெனும்…. -முத்துமணி கதைகள்

1 min read

Varthikal and Manamennum.. – SHort stries By Muthumani

1 வார்த்தைகள்
ராமனுக்கும் கல்யாணிக்கும் கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகுது. எத்தனையோ கோவில் குளம் சுத்தியாச்சு. ஆனாலும் ஏனோ இன்னும் கல்யாணிக்கு தாய்மை பாக்கியம் கிடைக்கவில்லை.
இது ரெண்டு பேருக்கும் பெரிய கவலைதான். கேட்கிறவன் கிட்ட பதில் சொல்ல முடியாமல் ஒரு கஷ்டம். இவன் வேலைக்கு போற இடத்துல மனசு நோக மாதிரி யாராவது பேசிட்டா போதும், வீட்டில் வந்து மனைவியை வாய்க்கு வந்தபடி திட்டுவான்.
ஏற்கனவே ராமன் வாய் எதையும் பேசக் கூசாது.
“அஞ்சு வருஷம் ஆச்சு இன்னும் வீட்டுக்காரி சும்மாதான் இருக்காளா?. நல்லது நீ சும்மா இருக்கியா?” இன்று ஒருவன் கேட்டான்.
“எங்க அத்த மகளை, அம்பது பவுன் நகை போட்டுக் கட்டித் தரேன்னு சொன்னாங்க. எங்கப்பா, வேண்டாமுன்னு உன்ன என் தலையில் கட்டிவசிட்டுப் போய்ட்டார். கல்யாணம் முடிச்சு அஞ்சு வருஷம் ஆச்சு.
எங்க அத்தை மகளுக்கு மூணு பிள்ளை. உன் வயித்துல ஒரு புழு பூச்சியும் வைக்கல”. இது அவன் பேசியது.

என்னமோ, அதுக்கு நான் மட்டும்தான் காரணமா?.
குழந்தை இல்லாம இருக்குறதுக்கு ரெண்டு பேர்ல யார் வேணும்னாலும் ரணமாயிருக்கலாம். இப்படி என்னை பேசுரது உங்களுக்கு வேலையாப் போச்சு. இது அவள் சொல்ல நினைத்தது.
“அஞ்சு வருஷம் ஆச்சுடி. இதுக்கு மேலயும் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா?. எங்க மாமா மகள், பத்மாவைக் கட்டிருந்தேன்னா, இதுக்குள்ள மூணு பிள்ளைக்கு அப்பா ஆயிருப்பேன் .அவா கருப்பா இருக்கான்னு அந்தக் காலத்துல வேண்டாமுன்னு சொல்லிட்டேன்.உன் வயித்துல ஒண்ணும் தங்க மாட்டேங்குது. என்ன பார்த்து எல்லா பயலும் சிரிக்கிறான்”.இது அவன் பேசியது.

உன்னை மட்டும்தான் கேலி பேசுராங்களா? என்னைப் பேசுரது உனக்கு த் தெரியுமா?எல்லாக் கோயிலுக்கும் போயிட்டு வந்தாச்சு. அதுக்கு மேல நான் என்ன செய்யமுடியும்? சும்மா எதையாவது பேசிக் கிட்டு இருக்கிறது. வாங்க ஆஸ்பத்திரிக்கு, செக் பண்ணி பார்ப்போம். ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டா வரவே மாட்ட. சும்மா கத்திட்டா பிள்ளை கிடைக்குமா? இது அவள் கேட்க நினைத்தது.

“மாலடிய’ கோவிலுக்குக் கூட்டிட்டு போய் என்ன செய்ய? குளத்துல பிடித்துத் தள்ள வேண்டியதுதான். என் தலை எழுத்து. ரோட்ல போறவன் வரவன் என்ன அசிங்கமா பேசுறான்”. இது அவன் பேசியது.
பொண்டாட்டிய அன்பா வச்சு வாழனும் சந்தோஷபடுத்தனும். நான் என்ன பிறந்த வீட்டிலிருந்து சீதன த்தோடு, சேர்த்து பிள்ளையையும் கொண்டுவரவா முடியும்?. ஆம்பளைன்னா என்ன வேணாலும் பேசுறதா? -கல்யாணி கேட்க நினைத்தது.
“எனக்குப் பிறகு கல்யாணம் முடிச்சு என் கூட்டாளிப் பயலுக, ஆளுக்கு ரெண்டு மூணு பிள்ளைங்க. நான் மட்டும்தான் இப்படி அலைகிறேன். என் கவலை எவளுக்குப் புரியுது?”அவன் பேசியது.

குழந்தை இல்லன்னு கவலை எனக்கு மட்டும் இல்லையா? எனக்கும் அம்மா ஆகணும் என்கிற ஆசை இருக்காதா? சந்தோசமா இருக்கணும். சண்டை போடாமல் இருக்கணும். பிள்ளைய என்ன விலைக்கு வாங்கவா முடியும்? இப்ப என்ன வயசு ஆகிப் போச்சி?. கொஞ்சம் பொறுமையா இருக்கணும். இது அவள் சொல்ல நினைத்தது.

“ஒரு புள்ளையப் பெத்து போட்டா, உன் கூட எவண்டி சண்டைக்கு வர போறான்? நாயே உனக்கு என்ன நோயோ? என்ன எழவோ? நான் என்னத்தக் கண்டேன். ஒண்ணும் தங்க மாட்டேங்குது.உண்கப்பன் ஏமாத்தி என் தலையிலக் கட்டிபுட்டான்… மலடி”. இது ராமன் பேசியது.

திரும்பத் திரும்ப அதே வார்த்தையைச் சொல்லாத. பதிலுக்கு நானும் சொன்னா எப்படி இருக்கும்?கொஞ்சம் யோசிச்சு பாரு.- கல்யாணி மனசுக்குள் நினைத்தது.
“சொன்னா என்னடி செய்வே? கிழிச்சிருவியோ?.ஊருக்குள்ளப் புள்ள பெக்காதவளுக்கு வேற என்ன பேரு மலடிதானே? ஆயிரம் தடவை சொல்லுவேன் மலடி மலடி மலடி”. இது அவன் பேசியது.
ஆஸ்பத்திரிக்கு வந்து செக் பண்ணத்தான் நான் மலடியா? அல்லது நீ பொண்டுகப் பயலான்னுத் தெரியும். வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் வாய்யா. சொல்ல நினைத்தாள்.

“இனிமேல் என்னால பொறுத்துக்கிட முடியாது. பிள்ளை வேணும். அஞ்சு வருஷம் ஆச்சு ஒரு பிரயோஜனமும் இல்லை பேசாம வேற கல்யாணம் பண்ணலாம் முடிவு பண்ணிட்டேன். இதை எந்தக் கொம்பனும் மாத்த முடியாது”

இனிமேலும் பேசாமல் இருக்க முடியாது. அடக்கி வைத்த தெல்லாம் சேர்ந்து பொத்துக்கிட்டு வந்தது. வாயைத் திறந்து கல்யாணி வெடித்தாள்.”வேறு கல்யாணம் செய்வதைப் பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உடனே ஏற்பாடு பண்ணுங்க. எவ்வளவு சீக்கிரமா பார்க்க முடியுமோ பாருங்க. என்ன, பாக்குறதே பாக்குற கொஞ்சம் செவத்த, கண்ணுக்கு லட்சணமா, கொஞ்சம் படிப்பறிவுள்ள, அதைவிட முக்கியமா, நல்ல ஆண்மையுள்ள மாப்பிள்ளையா பாருங்க. உடனே கல்யாணத்த முடிச்சிடலாம். கழுத்தை நீட்ட நான் ரெடி.”

=====

2 மனமெனும்….

ஊர்ல இருக்கிறது ஒரே ஒரு தியேட்டர். வீட்டுல எவ்வளவு பெரிய டிவி இருந்தாலும் தனியா உட்கார்ந்து பார்த்தா நல்லாவா இருக்கு?. இந்த ஊர்ல பொழுது போக்க என்ன பெரிய பீச் இருக்கா? நல்ல பார்க் இருக்கா? ஒண்ணுமே கிடையாது .எல்லாருக்கும் பொழுதுபோக்கு ஒரே இடம் இந்த தியேட்டர் தான். அவனும் புதுப்படம் போடவே மாட்டான். அருதப் பழசு. ஆனால் மூணு நாளைக்கு ஒண்ணு மாற்றி விடுவான்.
ஆட்டோவா? நடந்துதானா? சுகந்தி கேட்டாள். “ஆட்டோ எதுக்கு? சும்மா அப்படி காத்து வாங்கிட்டு ஜாலியா பேசிகிட்டு நடந்து போனா 15 நிமிஷம். போற வழியில பூ வாங்கிட்டுப் போகலாம். படம் போட ஆறு முப்பதுக்கு மேல் ஆகும். திரும்ப வரும்போது ஆட்டோவில் வந்து டலாம்”.
” சரிங்க அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டு வந்துடலாம்”
ரோட்டின் ஓரமாக இணையாகச் சேர்ந்து கொஞ்சம் உரசியபடியே, பேசிக் கொண்டே நடந்தார்கள். தூரத்தில இவர்களைப் போல் ஒரு ஜோடி எதிரில் நடந்து வருவதைப் பார்த்துட்டான் சேகர். இவர்களைப் போலவே அவர்களும் புதிதாகத் திருமணம் ஆனவர்கள் போலத்தான் தெரிந்தது.
கடந்து செல்லும்போது, அந்தப் பெண்ணைக் கூர்ந்துக் கவனித்தான். ஏறத்தாழ இவள் வயது தான் இருக்கும். கலர் கூட இவள் கலர்தான் இருப்பாள். ஆனால் ஆள் எவ்வளவு ஒல்லியா இருக்கா? கொடி மாதிரி இடை. ஒடிந்து விடும் போல, சும்மா சிம்ரன் மாதிரி இருக்கிறா. நமக்கு ஒருத்தி வந்து வாச்சிருக்காளே, பூசணிக்கா மாதிரி குந்தாணி, குண்டம்மா நெல்லு மூட்டை மாதிரி. என்று நினைத்துக் கொண்டான். அதற்குள்,” அங்கு என்ன பார்வை? என்று சுகந்தி கேட்டபின் தான் சுயநினைவுக்குத் திரும்பினான்.

அதே நேரத்தில், இவர்களைக் கடந்து சென்ற ஜோடியில், அவன் வைத்த கண் வாங்காமல் சுகந்தியைப் பார்த்துக் கொண்டே சென்று, மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ஆள் சும்மா கிண்ணுண்ணு குஷ்பு மாதிரி இருக்கா. கொழு கொழு அமுல் பேபி. நமக்கு ஒண்ணு வந்து மாட்டிருக்கு முருங்கைக்காய் மாதிரி.ஒல்லிப் பாச்சா. தீக்குச்சி மாதிரி.
அவன் நினைப்பையும் கலைத்து விட்டது அந்த முருங்கைக்காய். “முன்னால பார்த்து நடங்க. கீழ விழுந்துடாதீங்க”

வழியில் பூக்கடை .பார்த்துவிட்டான் “சுகந்தி பூ. எவ்வளவு வாங்கணும்?”. ஆர்வத்தோடு பர்சை எடுத்தான். சுகந்தி பார்த்தாள் .அங்கே ஒரு இளம் பெண் மும்முரமாய் பூக்கோர்த்துக்கொண்டுருந்தாள். “பூ வேண்டாம். நேரம் ஆயிடுச்சு. பேசாம வாங்க.”
இப்போதும் கடையைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
தியேட்டருக்கு வந்து உட்கார்ந்ததும் “எங்க போனாலும், அடுத்தப் பெண்களைப் பார்த்துகிட்டே தான் வருவீங்களா? இதெல்லாம் என்ன பழக்கம்? ச்சீ” என்றாள் சுகந்தி.
“இல்லம்மா .அந்த பொண்ண எங்கேயோ பார்த்த மாதிரி, எங்க ஊரு புள்ளன்னு நினைக்கிறேன். அவ கட்டியிருந்த சேலை ரொம்ப அழகா இருந்தது. அது மாதிரி உனக்கு வாங்கலாமான்னு யோசித்தேன்? வேற ஒண்ணும் இல்ல.”வழியுது தொடச்சிட்டு வாங்க”.

அதே நேரத்தில் அவர்களைத் தாண்டி போன அந்த ஜோடிகளும் இதைப்போலவே ஒரு வாக்குவாதம் செய்துகிட்டே போனாங்க.”கண்ணு அங்கிட்டு இங்கிட்டு அலையுது நோண்டி எடுக்கணும்”.
“இல்லம்மா அந்த ஆளு தெரிஞ்சவன். கல்யாணத்துக்குக் கூப்பிட்டுருந்தான். தான் நாம் போகல. அதான் பார்த்தேன்.”
“பாத்துப் போங்க சாக்கடை உள்ள விழுந்திட போறீங்க”. சைடுல என்ன பார்வை அது பிச்சைக்காரி”
டிக்கெட் வாங்கும் போது போஸ்டரை உற்றுப்பார்த்தான் சேகர். “அது வெறும் போஸ்டர். மேஞ்சூடா தீங்க. தியேட்டர் பெல் அடித்தது.” படம் போடப் போறான்.”

“பழைய படம் தான் ஆனால் கல்யாணத்துக்கு முன்னால பார்த்தது.”என்றாள் சுகந்தி.

வைகாசி பொறந்தாச்சு படம் தொடங்கியாச்சு. பிரசாந்த், கனகா ரெண்டுபேரும் காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டி நடித்துக் கொண்டிருந்தார்கள். “புதுசா இந்த படத்தில்தான் அறிமுகம் கனகா. பார்க்க அழகா இருக்கா. நல்லாவும் நடிக்கிறா”.என்றாள் சுதந்தி.
“இவ என்னடி பெரிய அழகி? இவ அம்மா யாருன்னு தெரியுமா உனக்கு?. தேவிகா கேள்விப்பட்டிருக்கிறாயா? அந்தக் காலத்துக் கனவுக்கன்னி. சும்மா தளதளன்னு சூப்பரா இருப்பா”.

“அப்படியா எந்த படத்தில் நடித்திருக் கா?. ” சிவாஜி. எம்ஜிஆர்’ கூடல்லாம் நடிச்சிருக்கா. கர்ணன் படம் பாத்தியா? அதுல சிவாஜிக்கு ஜோடி. ஆண்டவன் கட்டளை படம் பார்த்தியா? காலேஜ் ஸ்டூடண்ட்டா வந்து கலக்கியிருப்பா. அழகே வா அருகே வா பாட்டு அவ்வளவு அழகு.”

“ஓஹோ அப்படியா? சினிமா நடிகைகளைப் பற்றி எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்கீங்க.” “ஆமா காந்தியோட அப்பா பெயர் என்ன?”
“அது எவனுக்குடித் தெரியும்?”.
“நீங்க வர்ணிக்கிறத நிறுத்திட்டுப் படத்தைப்பாருங்க.”

“என்னடி எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுகிற. உனக்குத் தெரியாத விவரத்தைச் சொன்னேன். சினிமா என்ன ஒரு ரசனை தானே. உன்னைத் தவிர வேறு யாரையும் எனக்குப் பிடிக்காது. சும்மா சொன்னேன். நீதான் ரியல் பியூட்டி. அதெல்லாம் ஒரு மேக்கப். நீதான்டி என் ஹீரோயின்.” கன்னத்தைக் கிள்ளினான்.
“ம்கூம்.பேசாமப் படத்தைப் பாருங்க”. தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ நடக்கையிலே, பாட்டு சீன்.
“இந்தப் பையன் பிரசாந்த் கூட நல்லாத்தான் நடிக்கிறான்.ஆடுறான். ஆளும் பார்க்க அம்சமா இருக்கான்.”என்று சொன்னான் சேகர்.

இப்போ சுகந்தி சொன்னாள், “பிரசாந்த் என்ன பிரசாந்த்? இவனோட அப்பா தியாகராஜன். நல்ல கட்டு மஸ்தான உடம்பு. ஆளு ஜம்முன்னு இருப்பார். மலையூர் மம்பட்டியான் படம் பாத்திருக்கீங்களா? சூப்பர் படம் நான் நாலு தடவை பார்த்திருக்கேன்”

ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் இருந்த சேகர், “சுகந்தி வயிறு ஒரு மாதிரியா கலக்குதடி. மதியம் சாப்பிட்ட பிரியாணி வேலையக் காட்டுது. தியேட்டர்ல பாத்ரூம் சரிப்படாது. வா வீட்டுக்குப் போயிடலாம். ஆட்டோ புடிச்சு.”

அதன் பிறகு இன்றுவரை தியேட்டருக்குப் போவதுமில்லை. சினிமா நடிகையைப் பற்றிய பேச்சை எடுப்பதே இல்லை சேகர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.