April 27, 2024

Seithi Saral

Tamil News Channel

விதிக்கு நன்றி/ சிறுகதை/ முத்துமணி

1 min read

Vithikku nantri/ Short story by Muthumani

மூன்று நாள் கழித்து அன்றுதான் பஜார் பக்கம் போனேன். போக வேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லை. கடைக்குப் போகணும்.

 “தம்பி நல்லாருக்கீங்களா? என்ன திருப்பதியா? திருச்செந்தூரா?”என்று கேட்டார் கண்ணில் பட்டவர். அவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை.

     பொதுவாத் தலைக்கு யார் மொட்டை போட்டிருந்தாலும் இப்படிக் கேட்பதுதான் வழக்கம். அதுக்குப் பேர் நாகரிகமாம். இல்லை. அப்படி ஒரு ஆர்வம். நேரடியா,” அம்மாவா? அப்பாவா? யார் போனது?”ன்னு கேட்க மாட்டாங்க. ஆனால் அந்தக் கேள்விக்குப் பதில் வரும் என்று அவர்கள் உள் மனதிற்குத் தெரியும். ஆமா, திருப்பதிக்குத் தான் என்று சொன்னால் ஏமாந்தும் போவார்கள்.

     “இல்லண்ணாச்சி, அப்பா…. தவறிட்டாரு.”.

 எதிர்பார்த்த பதில் என்னிடமிருந்து வந்ததில் அவருக்கு ஒரு திருப்தி ஆனாலும்,”அய்யய்யோ” ரெடிமேடாய் வைத்திருந்த அதிர்ச்சியைக் காட்டிக்கொண்டு, “என்னாச்சு? நமக்கு உங்கப்பாரொம்ப வேண்டியவர். நல்லாத்தானே இருந்தார்? போன மாசம் கூட பார்த்தேனே.”

      “கொஞ்ச நாளா மஞ்சகாமாலை நோயாலக் கஷ்டப்பட்டாரு. நாங்களும் முடிந்த அளவுக்குப் பார்த்தோம். மூணு நாளாச்சு. எல்லாம் முடிஞ்சு போச்சு”

   “மஞ்சக் காமாலையா? தம்பி, என்ன வைத்தியம் பார்த்தீங்க?”. எந்த ஊர்ல பார்த்தீங்க?”என்ன மருந்து கொடுத்தீங்க?”

     “இங்கிலீஷ் வைத்தியம்தான். ஒரு மாசம் மதுரையில வச்சிப் பார்த்தோம். தங்கச்சி வீடும் ,அங்க இருக்கு. பெரிய ஆஸ்பத்திரிதான். ஆனாலும் முடியல”. “அடடா, மஞ்சள் காமாலைக்கு இங்கிலீஷ் வைத்தியம் சரிப்பட்டு வராது. விவரம் தெரியாம வம்பாக் கெடுத்துட்டீங்களே. பாபநாசம் போய் நாட்டு வைத்தியம் பார்த்துருந்தால் ஒரே வேளை மருந்துதான்.கட்டாயம் பிழச்சிருப்பாரு.”

    ஆறுதல் சொல்லிட்டு அவர் போய்ட்டார். அடுத்து ஒருவர் அதே கேள்விகளை மாறாமல் வரிசையாகக் கேட்டார். அதே பதிலை நானும் மாறாமல் சொல்ல,

        “ஓஹோ அதுதான் ஆள் கண்ணில் படவில்லையா? ஆமா, என்ன வைத்தியம் பார்த்தீங்க”. அவரும் கேட்டார். இவங்கிட்ட இங்கிலீஷ் வைத்தியம் பார்த்தோம்ன்னு சொன்னா, கண்டிப்பா மாத்தி ஐடியா சொல்லுவான்.உடனே நான் சுதாரித்துக்கொண்டு,” நாட்டு வைத்தியம் பார்த்தோம். சார் பாபநாசம் போய் மருந்து கொடுத்தோம். ஆனா முடியல.” “ஐயையோ மருத்துவம் உலகம் எங்கேயோ போயிடுச்சு. இன்னுமா நாட்டுமருந்த நம்பிட்டுருக்கீங்க? மதுரைக்குக் கூட்டிட்டுப் போயி பெரிய ஆஸ்பத்திரியில பார்த்துருக்கணும். என்ன கொஞ்சம் செலவு அதிகமாகும் அதுக்குப் பயந்து வம்பா அப்பாவைக் கொன்னுட்டீங்க.”

     அடப்பாவிகளா ! எங்க அப்பாவை நாங்க ஏண்டா கொல்லனும்? செலவுக்குப் பயந்தோமா?. உங்க இஷ்டத்துக்குப் பேசுங்கடா.

        கடையில் கடைக்காரர் அவர் பங்குக்கு ,”வழக்கமா அப்பா கடைக்கு வந்தா, கொஞ்ச நேரம் உட்கார்ந்து என்னோடு பேசாமல் போகமாட்டார் .நல்ல மனுஷன்”பாராட்டிவிட்டு அவரும்.அதே கேள்விகளைக் கேட்டார், அதையே நானும் திரும்ப சொல்ல, அவனும் கேட்டான்.” என்ன வைத்தியம் பார்த்தீங்க?”. இப்போ நான் என்ன சொல்ல?, இதைச் சொல்லவா? அதைச் சொல்லவா சொல்லவா? என்ன சொன்னாலும் குத்தம் கண்டு பிடிப்பான். “ஹோமியோபதி மருத்துவம் பார்த்தோம்”.

“ ஹோமியோபதியா?. இந்த மாதிரி கேசுக் கெல்ல்லாம் அது ஆகுமா? ஆத்திர அவசரத்திற்கு உதவாதே தம்பி. தப்பு செஞ்சுட்டீங்க. படிச்ச… சரி சரிஅம்மா இருக்காங்கல்ல?.” அது வேற அடிஷனல் கேள்வி.

     தலையைக்குனிந்து கொண்டே வந்தேன். எவன் கண்ணிலும் படக்கூடாது.” யாரு சுப்பிரமணி  மவனா?”

“ஆமா தாத்தா”.

“கேள்விப்பட்டேன். வெளியூருக்கு போயிருந்தேன். நேத்து ராத்திரிதான் வந்தேன். ஆமா என்ன வைத்தியம் பார்த்த?”. கிழடு கேட் டிருச்சி.

” எல்லா மருத்துவமும் பார்த்தாச்சு தாத்தா. ஒரு பிரயோஜனமும் இல்லை”.

“அது என்னல எல்லாம் வைத்தியத்தையும் சேர்த்துப் பாத்தியா?கூமுட்டை பயலே மஞ்சள் காமாலைக்குக் கைப்பக்குவம் பார்த்தாலே போதுமே. தென்காசிக்கு போயிருந்தா, கையில் ஒரு சூடு வைப்பான். காமாலை காத்துல பறந்து போயிரும். இப்ப வம்பா உங்க அப்பன் போயிட்டான்.”

என்னங்கடா உலகம் இது? வாயில அவனவன் எதை வச்சி ருப்பான்னே தெரியலையே.

      “அண்ணே”. இந்தமுறை கேள்வி கேட்டது என்னைவிட வயதில் சிறிய ஒரு பெண். நானும் வழக்கம் போல எல்லாத்தையும் வரிசையா அவளிடமும் ஒப்பித்தேன்.

” எங்க வைத்தியம் பார்த்தீங்க?. என்ன வைத்தியம் பார்த்தீங்க?.”எதையாவது சொன்னா இவளும் நொறநாட்டியம் பேசுவா. “எந்த வைத்தியமும் பார்க்கலமமா.அப்பாவே வேண்டாம்னுட்டாரு. அவர் எந்த மருந்தையும் சாப்பிட மாட்டாரு.”

    “ஒரு வைத்தியமும் பாக்காம விட்டீர்களா? அடப்பாவமே. ஏதாவது வைத்தியம் பார்த்துருந்தா நல்லாயிருப்பாரே. ஆளு  கொஞ்சம் கனத்த உடம்பு உங்கள மாதிரியே. வைத்தியமே பாக்கலையா?இப்படிச் செய்து ட்டீர்களே?.படிச்சவங்க இப்படி செய்யலாமா?”புத்திமதி சொல்லிட்டுப் போயிட்டா.

   இனிமேல் எவனாவது கேள்வி கேட்டால்தூக்கிப் போட்டு மிதிச்சிக் கொன்னு, போய் எங்க அப்பாவையே கேளுன்னு அனுப்பிட வேண்டியதுதான். ஆத்திரம் வந்தது. 

           “டேய் பத்மநாதா! இப்பதாண்டா விசயம் தெரியும் .உங்கப்பாசெத்துப் போயிட்டாராமே?”. என் கூட படிச்சவன்.

பரமசிவம்.,நாறவாயன் “என்னடா பண்ணிச்சு?. என் மூளை கொஞ்சம் யோசித்துப் பதில் சொன்னது. “ஒண்ணுமே செய்யலடா. நல்லாத்தான் இருந்தாரு. திடீர்னு தூக்கத்திலேயே உயிர் போயிருச்சு”.

 “அதெல்லாம் இருக்காதுடா. முதலிலேயே ஏதாவது பிரச்சனை இருந்திருக்கும். திடீர்னு சும்மா யாராவது சாவாங்களா?ஹார்ட்ல ப்ராப்ளம் இருந்திருக்கும். லேசா நெஞ்சு வலி, நெஞ்சு எரிச்சல் அப்படி வரும்போது, நீ கூட்டிட்டுப் போயி ஆஸ்பத்திரில காமிக்கணும். செக்கப் பண்ணனும். எங்க அம்மாவுக்குல்லாம் ஆறு மாசத்துக்கு ஒரு தடவை மதுரைக்குப் போய் கம்ப்ளீட் செக்கப் பண்ணிடுவேன். 60 தாண்டிட்டாலே அப்படித்தான். தப்பு செஞ்சுட்டே. இப்பல்லாம் நாற்பது வயசு தாண்டிடாலே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இருக்கும் நீ போய் உனக்கு ஒரு செக்கப் பண்ணு”

      அப்பா அவர் பாட்டுக்குப் போயிட்டார் .இருக்கிறவன்எல்லாம், நம்மைப் போட்டுத் தாளிக்கிறானே. எப்படி சமாளிக்க? ஆளாளுக்குக் கையில் ஒரு ஆயுதம் வச்சுக்கிட்டு நம்மளத் தாக்குறான்.

      கோமதி பாட்டி கைத்தடியை ஊன்றிக்கிட்டு எதிர்த்தாப்புல வந்தா. உத்து பார்த்தா. “ஏண்டா ராமசாமி மகன் தானே ?மூத்தவனா? இளையவனா?. என்னடா? உங்க அப்பன் இப்படி போயிட்டான். எங்க அப்பா பேரு கூட அவளுக்கு தெரியல.  நான் ஒற்றை வரியில் சொன்னேன் “ஒண்ணுமில்ல பாட்டி. அவருக்கு வயசாயிடுச்சுல்ல. அதான் போயிட்டாரு”.

 “ஏண்டா 75 வயசு ஒரு வயசா?. இந்தக் காலத்துல. எனக்கு வயசு 85 ஆகுது.

நடமாடிட்டுத் தான் இருக்கேன். என்னமா போ போ.”

       இவங்களல்லாம் எப்படித்தான் திருப்திப்படுத்துவது?. முதலில் வீட்டுக்குப் போய்விட வேண்டும் இன்னும் கொஞ்ச நாளைக்கு த்தலைய வெளியே காட்டக்கூடாது. யோசித்துக் கொண்டிருக்கும்போதே யாரோ கூப்பிடுவது கேட்டது. எவன்டா அவன்?திரும்பிப் பார்த்தேன்.

“தம்பி கோயிலுக்கு மாலை போட்டுருக்கேன் துஷ்டிக்கு வரக்கூடாது. அப்பாவுக்கு என்ன?” நான் என்ன சொன்னாலும் கேட்கவா போகிறார்கள்! .ஆளாளுக்கு அட்வைஸ் பண்ணப் போகிறார்கள். இப்போது நான் சொன்னேன்,.

         “சாமி, அப்பாவோட விதி முடிஞ்சு போச்சு. போய் சேர்ந்துட்டார்.” “ஆமாமா எல்லாம் தலையெழுத்து .விதியை வெல்ல யாரால் முடியும்? மனசைத் தேத்து அவ்வளவுதான். எல்லாரும் ஒரு நாளைக்குப் போறது தான் .எழுதி வச்சது அவன் . நீ என்ன செய்ய முடியும்? நான் என்ன செய்யமுடியும்? யார்தான் என்ன செய்ய முடியும்?.எல்லாம் அவன் கையில் இருக்கு . அவன் எழுதி வைத்ததை மனுஷன் மாற்றி எழுதவா முடியும்?” புலம்பிக் கொண்டே போய்விட்டார்.

நல்லவேளை என்னை ஒன்றும் சொல்லவில்லை. முதலிலேயே இந்த யோசனை நமக்குத் தோன்றாமல் போச்சே. விதியே உனக்கு நன்றி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.