April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள்- நாடகம் 1 – கடையம் பாலன்

1 min read

Amuthavin Asaikal -Drama By Kadayam Balan

கடையம் பாலன் எழுதிய
அமுதாவின் ஆசைகள்
(நாடகம்)
தினத்தந்தியில் செய்தி ஆசிரியராக பணிபுரிந்து பணி நிறைவு பெற்ற கடையம் பாலன் பல்வேறு சிறுகதைகள், அவள் யாருக்கு? என்ற நாவல் எழுதியுள்ளார். அவர் . பணி நிறைவுக்கு பின் கடையம் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவுக்காக பாலன் எழுதிய நாடகம் அறங்கேறியது. இதில் பாலன் அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடத்தியுள்ளார். அந்த நாடகத்தை அமுதாவின் ஆசைகள் என்ற பெயரில் இந்த செய்தி சாரல் இணைய தளத்தில் மீண்டும் அறங்கேற்றுகிறோம்.
அந்த நாடகத்தை வாசகர்கள் படித்து மகிழ தினம் ஒரு காட்சி மூலம் வெளியிடுகிறோம்… இது நாடகம் என்றாலும் ஒரு நாவலை படிக்கும் சுவை இருக்கும்.
நன்றி.

=====
காட்சி-1
இடம்- அசோக்குமார் வீடு
(பங்கேற்பவர்கள்- அசோக்குமார், அமுதா, ராஜேஷ், பவித்ரா)
…………………………………………
அசோக்குமார்: அமுதா… அமுதா…
அமுதா: (உள்ளே இருந்தபடி) என்னங்க——-?
அசோக்குமார்: அந்த லோன் பைல எங்கடி?
அமுதா: என் பீரோல பட்டுப்புடவை அடுக்கி வைச்சிருக்கேனே அதுல நாலாவது
சேலைக்கு அடியில இருக்குங்க.
அசோக்குமார்: என் பீரோல இருந்த பைல் அங்கே எப்படி போச்சு?
அமுதா: ( சமையல் கரண்டியுடன் வந்து) அப்பப்பா…. எதுக்கோ கொண்டு வைச்சேன்.
இப்போ அதுக்கென்ன? போய் எடுத்துக்கோங்க.
அசோக்குமார்: அது முக்கியமான பைல். அதுல எத்தனையோ பில், லட்டர்ஸ் எல்லாம்
இருக்கு.
அமுதா: அதை எதையும் நான் தொடலப்பா… எல்லாம் பத்திரமாத்தான் இருக்கும்.
அசோக்குமார்: சரி… சரி… அதை எடுத்துட்டு வா…
அமுதா: சமையல் அறையில எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்களே போய் எடுத்துக்கோங்க.
அசோக்குமார்: நான் போய் எடுக்கிறேன். அந்த பைல நான் எடுக்கும்போது நீ அடுக்கி வைச்சிருக்கிற பட்டுப்புடவை எல்லாம் சரிஞ்சி விழுந்திடும். சரிதானா நான்போய் எடுக்கவா?
அமுதா: வேண்டாம்… வேண்டாம்… நானே போய் எடுத்து கொடுக்கிறேன்.
(உள்ளே சென்று பைலை எடுத்து வருகிறாள்)
அசோக்குமார்: (பைலை பிரித்து பார்த்தபடி) ஏன்டி இதுல எதை எதையெல்லாமோ எழுதி வைச்சிருகே
அமுதா: ஆமாங்க போன வாரம் நம்ம வீட்டு கிரகபிரவேஷத்துக்கு வராதவங்க பேரை எழுதி வைச்சிருக்கேன்.
அசோக்குமார்: ஏன் அந்த வீடுகளுக்கெல்லாம்போய் பணத்த வசூல்பண்ணப்போறீயா?
அமுதா: என்ன கிண்டலா? இதோ பாருங்க… நாலாவது தெருவில சோமசுந்தரம் இருக்காரே அவருவீட்டு பொண்ணு சடங்குக்கு நான் போய் 100 ரூபா மொய் எழுதினேன். தெற்கு தெருவுல சரோஜா அக்கா இருக்காளே அவா வீட்டு 200 ரூபாய் மொய் எழுதினேன். அப்படி இப்படின்னு மொத்தம் 11 பேருக்கு நாம செஞ்சும் நம்ம வீட்டுக்கு எட்டிக்கூட பார்க்கல. எங்க பெரியப்பா மகள் கஸ்தூரி வீட்டுக்கு நாம என்னமெல்லாம் செய்திருக்கோம். வரவே இல்லை. நன்றி கெட்டவா. அப்புறம் வெங்கடாசலம் இருக்கானே அவன் கல்யாணத்துக்கு நாம போய் மாப்பிள்ளைக்கு 100, பொண்ணுக்கு 100ன்னு அழுதோம். அவ வெறும் ஐம்பது ரூபாய்தான் கொடுத்திருக்கான். இவங்க வீட்டல என்ன விசேஷம்ன்னாலும் நாம போகக்கூடாது. அதுக்காகத்தான் எழுதி வைச்சிருக்கேன்.
அசோக்குமார்:- அம்மாடி நாம இந்த மொய்காகவா 40 லட்சம் செலவழிச்சி வீடு கட்டியிருக்கோம். எதையும் எதிர்பார்த்து செய்யக்கூடாது. கஷ்டப்படறங்க வீட்டு நிகழ்ச்சிக்கு நாம கூடுதலா செய்யணும். இருக்கிறவங்களுக்கு ஓரளவு செய்ஞ்சா போதும்.
அமுதா: அய்யய்ய… இப்படி எல்லாம் இருந்தா இந்த உலகத்தில வாழவே முடியாதுங்க. பணம் விஷயத்துல கறாராக இருக்கணும்.
அசோக்குமார்: நமக்கு இருக்கிற பணம் போதும்.
அமுதா: இப்ப இருக்கிற பணமா… இன்னும் எவ்வளவோ சம்பாதிக்கணும்.
(கணவரின் பின்னால் நின்றபடி தோள்களில் கையை வைத்தபடி…) இந்த அசோக்குமார் யார்ன்னு இந்த நாடே சொல்லணும். அந்த அளவுக்கு பெரிய பணக்காரங்களா ஆகணும். அதுக்கு வேண்டிய வழிய பார்க்கணும்.
அசோக்குமார்: இப்ப நமக்கு என்னடி குறை. ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு பிஸ்னஸ் பண்றேன். 40 லட்சத்தில வீடு கட்டியிருக்கேன்.
அமுதா: ஆமா ஆமா லோன் போட்டுத்தானே கட்டியிருங்கீங்க.
அசோக்குமார்: எனக்கு 5 கோடிக்கு சொத்து இருக்கு. உனக்கும் உன் தங்கச்சிக்கும் சேர்த்து 5 கோடி சொத்து இருக்கு. ஆனாலும் ஏன் லோன் போட்டிருக்கேன். வருமான வரி பிரச்சினை வரக்கூடாதுன்னுதான். இதோ பாரு வாழ்க்கையில படிப்படியாத்தான் முன்னேறணும். இருக்கிறத விட்டுட்டு பறக்றதுக்கு ஆசப்படாதே.
அமுதா: பறக்குறததுக்குத்தான் ஆசைப்படணும். உங்களால முடிஞ்சா என்கூட பறந்து வாங்க… இல்லாட்டி இப்படியே இருங்க.
அசோக்குமார்: உன்னை திருத்தவே முடியாது.
அமுதா: உங்களை திருத்தவே முடியாது.
அசோக்குமார்: கல்யாணம் ஆகாம உனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா. அவளுக்கு இந்த வருஷத்தோட படிப்பு முடியுது. அம்மா-அப்பா இல்லாத அவளுக்கு நாமத்தான் நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணத்தை நடத்தி வைக்கணும்.
அமுதா: என் தங்கச்சி பவித்ராவுக்கு கல்யாணமா? இப்பவேவா.. நாம இன்னும் பணக்காறங்க ஆகி, நல்ல வசதியான பையனுக்குத்தாங்க கட்டிக் கொடுக்கணும். அப்பத்தான் நம்ம ரேஞ்ச் இன்னும் உயரும்.
அசோக்குமார்: சரி சரி உன் ரேஞ்ச் உயரட்டும்.(பைலை பார்த்தபடி) இன்னிக்கு ஹவுசிங் லோன் கட்டணும். அப்புறம் உன் தங்கச்சிக்கு ஹாஸ்டல் பீஸ் கட்டணும். நான் பேங்க் வரைக்கும்போய் வர்றேன்.
(பைல்லை மனைவியிடம் கொடுத்துவிட்டு அசோக்குமார் செல்கிறான்)
அமுதா(தனிமையில்): என்ன இந்த மனுஷனுக்கு அறிவே இல்லை. வாழ்க்கையில முன்னேறவே தெரியலை. ம்ஹூம் இவரை நம்பி பிரயோஜனம் கிடையாது. நாமளா எதாவது செய்யவேண்டியதுதான்.
( ராஜேஷ் வந்கிறான்)
அமுதா: வாங்க.. எப்படி இருக்கீங்க?
ராஜேஷ்: நல்லா இருக்கிறேன் அமுதா. அசோக்குமார் சார் இருக்கிறாரா?
அமுதா: இப்பத்தான் பேங்குக்கு போறார்.
ராஜேஷ்: அப்படியா.. அவரைத்தான் பார்க்க வந்தேன். சரி எப்படியோ சார் கஷ்டப்பட்டு இந்த வீட்டை கட்டிட்டார்?
அமுதா: என்ன சொன்னீங்க… அவரு கஷ்டப்பட்டு கட்டினாரா?
ராஜேஷ்: பின்னே யாருகட்டினா?
அமுதா: அவரு கிழிச்சாரு, நான் இல்லாட்டி இந்த வீட்டை கட்டியிருக்க மாட்டாரு.
ராஜஷ்: நான் என்னமோ அவருதான் வியர்வைய ரத்தமா சிந்தி இந்த வீட்டை கட்டினாருன்னு நினைச்சேன்.
அமுதா: சரி என்ன விஷயமாக அவரை தேடி வந்தீங்க
ராஜேஷ்: கொஞ்சம் பணம் கடன் கேட்கலாம்ன்னு வந்தேன். உங்கிட்ட இருந்த ஒரு 50 ஆயிரம் கொடுங்களேன்.
அமுதா: பணமா எங்கிட்டயா? நா… நான்… எங்கிட்ட எப்படி பணம் இருக்கும்?
ராஜேஷ்: உங்களாலத்தான் இந்த வீட்டையே கட்ட முடிஞ்சுது. அதனால பணம் இல்லாம இருக்குமா?
அமுதா: ஆமா எங்கிட்ட பணம்… பணம்… இருந்துச்சு. லோன் வாங்கி இந்த வீட்டை கட்டியிருந்தாலும், அதுக்கும் மேலே ஏகப்பட்ட பணம் செலவாயிடுச்சு. கையில இருந்த பணத்தை எல்லாம் இதுல போட்டுட்டேன். அதனால இப்போதைக்கு பணம் இல்லை. அவரு எனக்கு தெரியாம சேர்த்து வைச்சிருந்தாலும் வச்சிருப்பாது. அவருக்கிட்ட வேணும்ன்னா கேட்டுப்பாருங்க.
ராஜேஷ்: சரி அவங்ககிட்டயே கேட்டு வாங்கிக்கிறேன்.
(ராஜேஷ் செல்கிறான்.)
அமுதா: என்னடா கொஞ்சம்கூட தன்னைப்பத்தி கொஞ்சம் பெருமையா பேச விடமாட்டேங்கிறாங்களே. அப்படி பேசினா உடனே பணம் கேட்டு வர்றாங்களே. என்ன உலகம். பிச்சக்கார உலகம்.
(அந்த நேரத்தில் அமுதாவின் தங்கை பவித்ரா வருகிறார்.)
பவித்ரா: அக்கா
அமுதா: ஏய் பவித்ரா… என்ன சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிற?
பவித்ரா: காலேஜ் 3 நாள் லீவு. உங்கிட்ட சொன்னா வீணா அலையாதே. அங்கேயே இருந்து படி படின்னு சொல்லுவே. அதான் சொல்லாம வந்துட்டேன். அப்படியே அடுத்த டேம் பீஸ்ச வாங்கிகிட்டு போகலாம்ன்னு வந்தேன். சரி அத்தானை எங்கே?
அமுதா: இப்பத்தான் உன் அக்கவுண்ட்ல பணம் போடறதுக்காக பேங்க்குக்கு போயிருக்காரு. அதுக்குள்ளே நீ இங்கே வந்து நிக்கிற.
பவித்ரா: கிரகபிரவேஷத்துக்கு அப்புறம் வீட்டு சாமானை எல்லாம் ஒதுங்க வச்சாச்சா?
அமுதா: எப்பா வீடு கட்டறதுகூட அவ்வளவு பெரிசு இல்லை. பழைய வீட்டுல இருந்து சாமாங்களை கொண்டு வந்து ஒதுங்க வைக்கிறதுதான் பெரிய வேலை. உங்க அத்தான் இருக்காரே, ஒண்ணுக்கும் லாயக்கில்லை. எப்ப பார்த்தாலும் பிஸ்னஸ்தான். கூடமாட ஒத்தாசையா ஒரு வேலையும் செய்யமாட்டேங்கிறாரு.
பவித்ரா: என்னக்கா அத்தானுக்கு பிஸ்னசுக்கே நேரம் கிடைக்கல. நீ சொல்லி இருந்தா நானே லீவு போட்டுட்டு வந்திருப்பேன்ல்ல.
அமுதா: அம்மாடியோ நீ நல்லா படிக்கணும். நான்தான் இப்படி கஷ்டப்படுறேன். நீ நல்ல வேலைக்கு போயி, கை நிறைய சம்பளம் வாங்கி…
பவித்ரா: வாங்கி…
அமுதா: யாரையும் எதிர்பார்த்து நிக்கக்கூடாது. உன்காலிலேயே நிக்கணும்.
பவித்ரா: அக்கா உனக்கு என்ன குறை. உனக்கு வேண்டியதை விட அதிகமாகவே அத்தான் செய்யறாரு. பிறகு ஏன் கஷ்டப்படுறேன்னு சொல்லுறே.
அமுதா: அய்யோ நான் படுற கஷ்டம் உனக்கு எங்க தெரியபோகுது.
பவித்ரா: அப்படி என்னதான் கஷ்டப்படுற-?
அமுதா: காலையில ஐந்தரை மணிக்கு எழுந்திருக்கேன். முத்தம் தெளிச்சி, பாத்திரம் விளக்கி, காபி போட்டு, பாத்ரூம் போய் குளிச்சிட்டு, டிபன் செஞ்சி உங்க அத்தானுக்கு கொடுத்துட்டு, அவரு வெளியிலே போனப்பிறகு துணி எல்லாம் துவிச்சிட்டு, சாப்பாடு பொங்கி வைப்பேன். கொஞ்ச நேரம் உட்காரலாம்ன்னு நினைச்சா அவரு வந்திடுவாரு. அவருக்கு சாப்பாடு போட்டு கொடுப்பேன். அதுக்கு அப்புறம் துவைச்ச துணிய எடுத்து வைக்கணும். மறுநாள் அதை எல்லாத்தையும் அயன் பண்ண கொடுக்கணும். நைட் டிபன் ரெடி பண்ணணும்.
பவித்ரா: சரி நீ சாப்பிடுறது எப்போ?
அமுதா: அதுக்கு எங்க நேரம் இருக்கு. நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் வாயில எடுத்து போட்டுக்குவேன்.
பவித்ரா: மதியம் சாப்பிட்டுட்டு போற அத்தான் அப்புறமாக எப்போ வீட்டுக்கு வருவாரு?
அமுதா: நைட் எட்டுமணிக்கு வருவாரு. சில நேரம் பத்துமணியும் ஆகும். அதுக்குள்ள டிபன் செஞ்சி வைக்கணும். இல்லாட்டி குய்யோ குய்யோன்னு குதிப்பாரு. அப்பப்பா, ஒரு நாளைக்கு விடிஞ்சு பொழுது போறதுக்குள்ள போதும் போதும்ன்கு ஆயிடும்.
பவித்ரா: ஏ…யப்பா. எவ்வளவு வேலை. உன்னை மாதிரி யாருமே வேலை செய்ய மாட்டாங்க. பேசாம வேலைசெய்ய ஒரு ஆள வச்சிக்கிட வேண்டியதுதானே.
அமுதா: அதுக்கு ஒருத்தி வருவா. துணி எல்லாத்தையும் துவைப்பா. பாத்திரம் விளக்குவா. முத்தம் தெளிப்பா.
பவித்ரா: இதை எல்லாம் நீ செய்றதா சொன்னே.
அமுதா: வேலைக்காரி வராட்டி நான்தானே செய்யணும்.
பவித்ரா: சரி பகல்ல தூ-ங்கறதுல்லாம் கிடையாதா?
அமுதா: அவரு மதியம் சாப்பிட்டுட்டு போனப்புறம் லேசா தலையை சாய்பேன். நல்லா கண் அயந்து வரும் அதுக்குள்ள அவரு வந்து கதவ தட்டிடுவாரு.
பவித்ரா: ராத்திரி எட்டு மணிக்கு.
அமுதா: ஆமா.
பவித்ரா: கருக்கல்ல லைட்டெல்லாம் போடமாட்டியா?
அமுதா: அது எப்படி போடாம இருக்க முடியும். பால்காரர் வந்து எழுப்புவாரு.
பவித்ரா: வெளியிலத்தான் கதவில ஒரு பைய கட்டிப்போட்டிருக்கியே? பிறகு ஏன் உன்ன எழுப்புறாரு-?
அமுதா: பாலுக்கு கத்திட்டு போவாரு. சில நாள் எழுந்திருச்சிருவேன்.
பவித்ரா: தூ-ங்கிட்டா அத்தான் வந்து எட்டுமணிக்குத்தான் வீட்டு லைட்டையே போடுவாரா?
அமுதா: அய்யய்ய அந்த மனுஷன் எங்க போடுவாரு. நான்தான் அவசரஅவசரமா போடணும்.
பவித்ரா: அம்மாடியோ கருக்கல்ல லைட்ட போடலன்னா மூதேவில்லா வீட்டுக்கு வரும்ன்னு சொல்லுவாங்க.
அமுதா: அதுக்குத்தான் ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன்.
பவித்ரா: மூதேவிய துரத்துறதுக்கா?
அமுதா: இல்லடி. லைட்ட போடறதுக்கு.
பவித்ரா: என்ன கண்டுபிடிச்ச?
அமுதா: மதியம் உங்க அத்தான் சாப்பிட்டுட்டு போவாருல்ல. அப்பவே லைட்ட போட்டுட்டுவேன்.
பவித்ரா: ஆகா எவ்வளவு புத்திசாலி அக்கா. உன்னை கட்டிக்கிட்டதுக்கு அத்தான் கொடுத்து வச்சிருக்கணும்.
அமுதா: ஆமா உனக்கு தெரியுது. அந்த மனுஷனுக்கு தெரிய மாட்டேங்குதே. எப்ப பார்த்தாலும் சண்டைக்குத்தான் வாராரு.
பவித்ரா: (தனியாக மைக் முன்பு நின்று) ஆமா இப்படிப்பட்ட பொம்பளைய கட்டிக்கிட்டு சண்டை போடாம என்ன செய்வாரு?
அமுதா: என்ன சொன்ன?
பவித்ரா: இல்லை. அத்தானை கட்டிக்கிட்டு என்னப்பாடு படுதேன்னு சொன்னேன்.
(அப்போது அசோக்குமார் வருகிறான்)
அசோக்குமார்(வந்து):ஹய் பவித்ரா எப்ப வந்தே? உனக்கா இப்பத்தான் பணத்தை போட்டுட்டு வந்தேன்.
பவித்ரா: மூணு நாள் லீவுல வந்துட்டேன் அத்தான். எனக்காக உங்க பிஸ்னசைக்கூட விட்டுட்டு அலையறீங்களே அத்தான்.
அசோக்குமார்: உனக்காக இதுக்கூட செய்யாட்டி என்னம்மா.
அமுதா: ஆமா எனக்காக ஒரு நாள்கூட நேரம் ஒதுக்க மாட்டாரு.
அசோக்குமார்: ஒரு நாள் இவளுக்காக நேரம் ஒதுக்கி இவளை சினிமாவுக்கு கூட்டிட்டு போனேன். அங்கே என்னை வம்புக்கு இழுத்து ஒரே வாக்குவாதம். படம் பார்க்க வந்தவங்க எங்க படத்தைத்தான் பார்த்தாங்க.
அமுதா: ஆமா நான் சொன்ன படத்துக்கு கூட்டிட்டு போனீங்களா?
அசோக்குமார்: எதோ ஒரு படத்துக்கு கூட்டிட்டு போனேனா இல்லியா?
அமுதா: ஓசிக்கு டிக்கெட் கிடைச்சிருக்கும். கூட்டிட்டு போய் இருப்பாரு–.
அசோக்குமார்: ஆமா ராஜேசை வழியில பார்த்தேன்.
அமுதா: பணம் கேட்டானே, கொடுத்துட்டிங்களா?
அசோக்குமார்: ஏண்டி எங்கிட்ட பணத்தை வாங்கச் சொன்னியாமே?
அமுதா: பணத்தை கொடுத்தீங்களா இல்லியா?
அசோக்குமார்: நம்மட்ட இப்போ ஏதுடி அவ்வளவு பணம்? சரி இந்த வீட்டை நீதான் கட்டினீயாமே?
(இந்த நேரத்தில் பவித்ராவுக்கு போன் வர… அவள் சற்று ஒதுங்கி சத்தம் வெளியே வராமல் போனில் பேசினாள் )
அமுதா: ஆமா நான்தான் கட்டினேன்.
அசோக்குமார்: நீயா பணம் போட்டே.
அமுதா: இல்லை.
அசோக்குமார்: நீயா லோன் வாங்கினே.
அமுதா: இல்லை
அசோக்குமார்: உங்க வீட்டு சொத்தை வித்தா கட்டினே?
அமுதா: இல்லை.
அசோக்குமார்: பின்ன என்னடி நீதான் கட்டினேன்னு சொன்னே?
அமுதா: நான் இல்லாட்டி வீட்டை கட்டியிருக்க முடியாதுன்னு சொன்னேன்.
அசோக்குமார்: அதான் எப்படின்னு கேட்கிறேன்?
அமுதா: வீடு கட்டச் சொன்னதே நான்தான். அதனாலத்தான் கட்டினீங்க.
பவித்ரா: அத்தான் ஆமான்னு சொல்லி தொலையுங்க. இல்லாட்டி வாக்குவாதம் இன்னிக்கு முடியாது.
அசோக்குமார்: பவித்ரா யாருகிட்ட போன்ல கிசுகிசுன்னு பேசின?
பவித்ரா: அது… அது… என் பிரண்டு.
அசோக்குமார்: பாய் பிரண்டா, கேர்ள் பிரண்டா… பிரண்டெல்லாம் சரிதான். ஜாக்கிரதையா பழகு. கொலை&கொள்ளைன்னு உலகத்தை நினைச்சாலே பயமா இருக்கு.
பவித்ரா: சரி அத்தான்.
அசோக்குமார்: நான் ஒரு கஷ்டமரை பார்க்க வேணும். அமுதா… நான் வெளியிலே போயிட்டு வாரேன். உன் தங்கச்சிக்கு ஏதாவது சாப்பாடு செய்து கொடு.
(அசோக்குமார் போகிறான்)
பவித்ரா: (செல்போனை டயல் செய்து) ஹலோ ஆனந்த்… நீங்க அப்ப பேசும்போது எங்க அத்தானும், அக்காளும் பக்கத்திலே இருந்தாங்க. அதான் பேச முடியல….
இப்போ யாரும் பக்கத்தில இல்லை… ஆனந்த் நீங்க என்னிக்கு வாரீங்க. உங்களை இதுவரைக்கு நான் பார்த்ததே இல்லை. மிஸ்டு கால் மூலம் பழக்கமான நீங்க எங்கிட்ட ஒருநாள்கூட மிஸ் பண்ணாம பேசறீங்க. இதுவரைக்கும் உங்களை பார்த்ததே இல்லை…. உடனே உங்க போட்டோவை வாட்ஸ்-அப்ல அனுப்பி வையுங்க. சரி அக்கா வர்ற மாதரி தெரியுது போனை வச்சிடறேன்.
(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.