அமுதாவின் ஆசைகள்-2 (நாடகம்/ கடையம் பாலன்)
1 min readAmuthavin Aasaikal – Drama by Kadayam Balan
காட்சி 2
இடம்-நகரசாலை
பங்கேற்பவர்கள்- விமலா, ராஜேஷ், கைசூப்பி கைலாசம்.
==================
ராஜேஷ்: எங்கே நம்ம விமலாவை இன்னும் காணோம். நாம எப்படியாவது ஒரு பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சி பணக்காரனா ஆயிடலாம்ன்னு நினைச்சேன். அது முடியல. வயசும் ஏறிக்கிட்டே போகுது. இப்படியே போனா நாம வாழ்க்கையில கல்யாணமே நடக்காம போயிடும். அதனாலத்தான் போனாப்போகுதுன்னு இந்த விமலாவை காதலிக்க ஆரம்பிச்சோம். அவா அழகுதான். ஆனா பணம்தான் இல்லை. சரி பணக்காரனா ஆயி கல்யாணம் செஞ்சா என்ன? கல்யாணம் ஆயி பணக்காரனா ஆனா என்ன? ரெண்டும் ஒண்ணுதான்
(விமலா வருகிறாள்)
விமலா: என்ன ராஜேஷ் ஏதோ தனியா பேசிக்கிட்டு இருக்கீங்க?
ராஜேஷ்: உன்னை பத்தித்தான் பேசிக்கிட்டு இருந்தேன்.
விமலா: என்ன பத்தியா தனியா பேசிக்கிட்டு இருந்தீங்க? அப்படின்னா நான் உங்கள பைத்தியமாக்கிட்டேனா?
ராஜேஷ்: ஒரு வகையில என்னை நீ பைத்தியமாக்கினது உண்மைதான். இல்லைன்னா என் லட்சியத்தை எல்லாம் விட்டுட்டு உன்னை காதலிப்பேனா?
விமலா: என்ன சொன்னீங்க… உங்க லட்சியமா? அது என்னங்க?
ராஜேஷ்: ஆ.. ஆமா விமலா நீயோ சாதாரண வசதி படைச்சவதான். அதனால நான் உழைச்சி பெரிய பணக்காரனா ஆகி அதுக்கப்புறம் உன்னை கல்யாணம் செஞ்சி உனக்கு கழுத்து பிடிக்காம நகை போடணும்ன்னு ஆசை. ஆனா அது இப்போதைக்கு முடியாது பாரு. அதான் உன்னை கல்யாணம் செஞ்சி எப்படியாவது பணக்காரன் ஆகணும்ன்னு புலம்பிக்கிட்டு இருந்தேன்.
விமலா: ஆமா எனக்கும் பணக்காரியா ஆகணும்ன்னுதான் ஆசை. ஏழையா பிறந்தாலும் என்னை எங்க வீட்ல காலேஜ்ல படிக்க வச்சிட்டாங்க. நானும் ஒரு டிகிரி வாங்கிட்டேன். எத்தனையோ பணக்கார பசங்க என்னை சுத்தி சுத்தி வந்தாலும் எப்படியோ நான் உங்க வலையில விழுந்திட்டேன். இதுதான் காதலுக்கு கண்இல்லன்னு சொல்லுவாங்களோ.
ராஜேஷ்: அப்ப என் மேல உனக்கு அன்பே இல்லியா?
விமலா: உங்க மேலே காதல் இல்லைன்னா இந்த வயசிலேயேயும் உங்கள காதலிப்பேனா? இதோ பாருங்க ஒரு நடுத்தர வயசு ஆம்ளய காதலிக்கிறதுலயும் ஒரு தனி இன்பம் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச உலகம் இந்த சின்ன சின்ன பசங்களுக்கு தெரியுமா?
ராஜேஷ்: ஆமா அவங்களுக்கு தெரியுமா? அதான் எத்தனையோ பசங்க பள்ளிக்கூடம் படிக்கும்போதே பிள்ளைய கூட்டிட்டு போயி சீரழியுறாங்க.
விமலா: டீச்சரையே காதலிச்சி கூட்டியிட்டு போயிடறாங்க.
ராஜேஷ்: ஆமா காலம் எந்த அளவுக்கு கெட்டுப்போச்சி பார்த்தியா? கால்யாணத்துக்கு வயது வைச்சிருக்கிற மாதிரி காதலிக்கதுக்கும் வயசை வச்சி ஒரு சட்டம் போடணும். ஆம்ள 35 வயசுக்கு அப்புறம்தான் காதலிக்கணும்.
விமலா: பெண்ணுக்கு…
ராஜேஷ்: உன் வயசில இருந்தே காதலிக்கலாம்.
விமலா: என்னங்க எனக்கு ஒரு நெக்லஸ் வாங்கித் தர்றதா சொன்னீங்களே?
ராஜேஷ்: அதுக்குத்தான் 50 ஆயிரம் ரூபா அசோக்குமார்கிட்ட கடன் கேட்டேன். தரமாட்டேன்னுட்டான். அவனுக்கு இந்த ராஜேஷ் யாருன்னு போகப்போக காட்டுறேன்.
விமலா: அவன் பொண்டாட்டி அமுதா இருக்காளே. ஒரு அலப்பற… அவா கிட்ட 500 ரூபாய் கடன் கேட்டேன். இல்லைன்னு சாதிச்சிட்டா. 50 லட்சத்துல வீடு கட்டினவங்களுக்கு 500 ரூபாய் தரமுடியாதா?
ராஜேஷ்: அதுக்குத்தான் நேரம் பார்த்துக்கிட்டு இருக்கேன். நேரம் வரட்டும் அவங்கள ஒரு வழி பண்ணுறேன். சரி சரி அங்கபாரு. கைசூப்பி கைலாசம் வாரான். அவனுக்கு நம்ம காதல் தெரிஞ்சா ஏதாவது கிருக்குத்தனமா பேசி கல்யாணத்தை தடுத்துடுவான். நீ போ..
(விமலா போகிறாள்)
ராஜேஷ்: ஏலே கைசூப்பி கைலாசம். என்ன இந்தப்பக்கம்?
கைலாசம்: அண்ணே…. என்ன அண்ணேன். நீங்களே இப்படி கூப்பிடலாமா?
ராஜேஷ்: என்னல எப்படி கூப்பிடணும்ன்னு சொல்ற?
கைலாசம்: என்னை கைகைலாசம்ன்னுதான் கூப்பிடணும். பட்டப்பேரு சொல்லி கூப்பிடாதீங்க அண்ணேன்.
ராஜேஷ்: சரி கைசூப்பி… இல்ல சரி கைலாசம்.
கைலாசம்: இப்பத்தான் நல்ல அண்ணேன்.
ராஜேஷ்: ஆமா எதுக்கு இந்தப்பக்கம் வந்தே?
கைலாசம்: அது அண்ணே… வந்து… அப்படி காத்தாட வந்தேன்.
ராஜேஷ்: அதுக்கு வந்த மாதிரி தெரியலியே…
கைலாசம்: அது அண்ணே உங்களுக்கு தெரியாம என்ன? நான் ஒரு பிள்ளைய விரும்பறேன்.
ராஜேஷ்: அதுக்குத்தான் வந்தியா?
கைலாசம்: நீங்க நம்ம… நம்ம… விமலாகிட்ட பேசிக்கிட்டு இருந்தீங்களே என்ன விசயம்?
ராஜேஷ்: விமலாக்கிட்டேயா? நானா? தற்செயலா வந்தா–? பேசமா இருந்தா தப்பா நினைப்பாளேன்னு பேசினேன். அவ்வளவுதான். வேற ஒண்ணும் பேசல.
கைலாசம்: உங்கள போய் தப்பா நினைப்பேனா? உங்க வயசு என்ன-? அவளுடைய வயசு என்ன? நீங்க அவளுக்கு அப்பா மாதிரி.
ராஜேஷ்: அடப்பாவி அப்பான்னு சொல்றானே
கைலாசம்: என்ன அண்ணேன் சொல்றீங்க?
ராஜேஷ்: ஆமா ஆமா. கைலாசம் என்னையும் அவளையும் பத்தி ஊருல என்ன பேசிக்கிறாங்க?
கைலாசம்: நீங்கத்தான் அவளுக்கு கார்டியனாம். நீங்க அவளுக்கு பாதுகாப்பா இருக்கிறதாலத்தான் அவா எங்க போனாலும் அவங்க அப்பனும் அம்மையும் கவலைப்படாம இருக்காங்களாம்.
ராஜேஷ்: அப்படியா பேசறாங்க.
கைலாசம்: ஆமாண்ணேன். நீங்க பெத்த அப்பா மாதிரி அவளுக்கு நல்ல நல்ல துணி எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கீங்களாமே. நீங்க இல்லைன்னா அவளால கலேஜ் படிப்பெல்லாம் முடிச்சிருக்க முடியாதாமே-.
ராஜேஷ்: அப்டின்னு யாருடா சொன்னா?
கைலாசம்: ஊருல பேசிக்கிறாங்க அண்ணேன். அண்ணேன் உங்க கிட்ட ஒண்ணு சொல்றேன். தப்பா நினைச்சுக்காதீங்க.
ராஜேஷ்: தப்பா நான் ஏண்டா நினைக்கப்போறேன். நமக்குள்ள என்ன இருக்கு. சொல்லு.
கைலாசம்: அண்ணே நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்.
ராஜேஷ்: காதலிக்கிறீயா? யாருடா அந்த கிருக்குப்பய பொண்ணு?
கைலாசம்: என்ன அண்ணே கிருக்குப்பய பொண்ணுன்னு சொல்றீங்க.
ராஜேஷ்: இல்ல நல்லப்பொண்ணு. அது யாருடா?
கைலாசம்: அண்ணேன் நீங்கத்தான் அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கணும்.
ராஜேஷ்: சரிடா. சொல்லு. அண்ணனுக்கு முன்னாடியே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். கருமாதியும் பண்ணி வைக்கிறேன்.
கைலாசம்: என்ன அண்ணே அபசகுணமாக பேசறீங்க.
ராஜேஷ்: தப்பா வந்துட்டுது. சரி சொல்லு எந்த பொண்ண காதலிக்கிற?
கைலாசம்: அது வந்து வந்து, நம்ம விமலாத்தான்.
ராஜேஷ்: அடப்பாவி அப்பா மாதிரின்னு சொன்னவன், இப்ப மாமா ஆக்க பாக்கிறானே.
கைலாசம்: என்ன மாமாவா என்ன அண்ணே சொல்றீங்க.
ராஜேஷ்: இல்லடா அந்த பெண்ணுக்கு நான் அப்பா மாதிரின்னு சொன்னியே. அப்படின்னா உனக்கு மாமா மாதிரின்னு சொன்னேன். அமா அந்தப் பொண்ணு உன்னை காதலிக்குதா?
கைலாசம்: பின்னே அவா என்ன மனசுக்குள்ளே காதலிக்கிறா? என்னை பார்த்தவுடனே தலையை கவிழ்ந்துக்கிட்டு போறா. திடீர்ன்னு என்னை ஏறிட்டு துப்பார்த்து சிரிக்கிறா? ஓரக்கண்ணால என்ன பார்க்கிறா?
ராஜேஷ்: அப்படின்னா காதலிக்கிறதா அர்த்தமா?
கைலாசம்: அது மட்டுமா அன்னிக்கு ஒரு நாள்… அவா வீட்டுப்பக்கமா போனேன். உடனே அவா வெட்கத்தில ஓடிப்போனா. பிறகு கொஞ்ச நேரம் கழிச்சி பக்கத்து வீட்டு குழந்தைய எடுத்துக்கிட்டு வந்து கட்டிபிடிச்சி முத்தம் கொடுத்தா.
ராஜேஷ்: அதுக்கும் காதலுக்கும் என்னடா சம்பந்தம்.
கைலாசம்: என்ன அண்ணேன் எத்தனை சினிமா பார்கிறீங்க. இதக்கூட புரிஞ்சிக்க மாட்டீங்களா?
ராஜேஷ்: உண்மையிலேயே புரியலை.
கைலாசம்: அவா என்னைய கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுக்கிறதா நினைச்சி குழந்தையை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுக்கிறா?
ராஜேஷ்: இதை வச்சி எப்படிடா காதல்ன்னு சொல்ல முடியும்?
கைலாசம்: போங்க அண்ணேன். உங்களுக்கு ஒண்ணுமே தெரிய மாட்டேங்குது. அதனாலத்தான் நீங்க இத்தன வயசு ஆகியும் ஒருத்தியக்கூடா காதலிக்காம, கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க. இன்னொரு சம்பவத்தை சொல்றேன் பாருங்க.
ராஜேஷ்: என்ன சம்பவம்?
கைலாசம்: அவா கையில வைச்சிருந்த குழந்தை திடீர்ன்னு கையை தூக்கி வாயில வச்சிட்டுது.
ராஜேஷ்: கைசூப்பிச்சா?
கைலாசம்: அந்த வார்த்தைய எங்கிட்ட சொல்லாதீங்க. அதைத்தான் செஞ்சுது. ஆனா நீங்க அந்த வார்த்தைய சொல்லாதீங்க.
ராஜேஷ்: சரி சரி அந்த வார்த்தைய சொல்லல்லப்பா… அடுத்து சொல்லு.
கைலாசம்: சூப்பிக்கிட்டு இருந்த கையை வெடுக்கின்னு பிடித்து இழுத்து அந்த கையில அடிச்சா பாருங்க… என்னை பார்த்து பார்த்து அடிச்சா. எனக்கு என் கையபிடித்த அடிக்கிற மாதிரி இருந்துச்சு. இதோ பாருங்க அண்ணேன் எம் மேல எவ்வளவு பாசம் இருந்தா அந்த குழந்தைய அடிப்பா.
ராஜேஷ்: ஆமா ஆமா உன் மேலே கொள்ளப்பிரியம். கைலாசம் நம்ம அசோக்குமார் இருக்காருல்ல. அவருக்கும் அவரு ஒய்ப் அமுதாவுக்கும் ஏதோ தகராறா?
கைலாசம்: இல்லியே அவங்க சந்தோஷமாத்தானே இருக்காங்க.
ராஜேஷ்: இல்லப்பா அவங்களுக்குள்ளே ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறதா பேசிக்கிறாங்க. அதைப்பத்தி விசாரிச்சி எங்கிட்ட சொல்லு.
கைலாசம்: சரி சரி அந்த அமுதா அக்காட்ட கேட்டு சொல்றேன்.
ராஜேஷ்: அடப்பாவி காரியத்தை கெடுத்திடாதே. அவங்கக்கிட்ட நேரடியா கேட்க க்கூடாது. அங்க போயி பார்த்து, சாடமாடய பேசி விவரத்தை தெரிஞ்சிக்கிட்ட வா.
உனக்கு பத்து ரூபா தாரேன்.
கைலாசம்: பத்து ரூபா தாரீயா. அப்போ கண்டிப்பா உனக்கு விவரத்தை சொல்றேன்.