May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரியாணி / சிறுகதை / முத்துமணி

1 min read

Biriyani / Short story By Muthumani

பிரியாணி

வீடு முழுக்க மணம். பத்தி சாம்பிராணி, மலர்மாலை. எல்லா விளக்குகளும் எரிந்ததால் பளீரென்ற ஒளி வீடு முழுவதும் பரவியிருந்தது. வீட்டின் தெற்குப் புறச் சுவரில் சிரித்தபடி, படத்தில் தொங்கிக் கொண்டிருந்த அப்பாவின் நெற்றியில் சந்தனம் ,குங்குமம் புதிதாக வைக்கப்பட்டது. பெரிய ரோஜாப் பூ மாலை ஒன்று போடப்பட்டது. படத்தைச் சுற்றிலும் சீரியல் லைட் அலங்காரத்தில் அப்பா சிரித்துக் கொண்டிருந்தார்.
ஐந்து வருடங்கள் ஆயிற்று. அப்பா இறந்து. வீட்டிற்கு மூத்தவன் நான்தான். நான் மதுரையில் ஹைவேஸ் டிபார்ட்மெண்டில் வேலை பார்க்கிறேன். அப்பா போனபின் அம்மா அந்த வீட்டை விட்டு யாரோடும் வந்து இருக்க விரும்ப வில்லை.ஆண்டுதோறும் அப்பா இறந்த நாளில் அனைவரும் வந்துவிடுவது வழக்கம். முதல் ஆண்டு மட்டும் உறவினர்களையும் அழைத்து முறையாக அஞ்சலி செலுத்தி அனைவருக்கும் கறி விருந்து அளித்தது நன்றாக நினைவிருக்கிறது.
அதன் பிறகு ஆண்டுதோறும் அண்ணன் தம்பி, அக்கா தங்கை என்று நாங்களும் எங்கள் பிள்ளைகளும் மட்டும் வந்து அம்மாவோடு சேர்ந்தது தாங்களே சமைத்து அப்பாவுக்கு படைத்து வணங்குவது வழக்கம் ஆகி விட்டது.
இன்று சென்னையில் இருக்கும் தம்பி அப்பாவுக்கு ப் பிடித்தமான மிட்டாய் வகைகளை வாங்கி வந்துவிட்ட்டான். உள்ளூரில் வாழ்க்கைப்பட்ட தங்கை விமலா அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஆரஞ்சுப் பழம் போன்றவற்றை வாங்கி வந்துவிட்டாள். அதிரசம், கருப்பட்டி மிட்டாய், இப்படி அப்பாவுக்கு என்னென்ன பிடிக்குமோ? அத்தனையும் நிறைய வாங்கி வந்து படைப்பதற்குத் தயாராக இருக்கிறது.
அம்மாவுக்கு வயது எண்பதுக்கு மேல் ஆயிற்று. “ஒவ்வொரு வருஷமும் எல்லோரும் லீவு போட்டுட்டு ஒண்ணாக் கூடுறது ரொம்பக் கஷ்டமா இருக்கு.அடுத்த வருஷம் எல்லாம் அவங்கவங்க வீட்டிலேயே அப்பாவை நினைத்துச் சாமி கும்பிட வேண்டியதுதான்”

சென்னையிலிருந்து வந்த தம்பி இப்படிச் சொன்னதும்,”ஆமாமா கஷ்டமாத்தான் இருக்கு. புள்ள குட்டிகளும் பெருசாயிடுச்சு பள்ளிக்கூடம் படிப்பு அப்படி இப்படின்னு லீவு போட முடியல. ட்ரெயினில் பஸ்ஸில டிக்கெட்டும் போட முடியல. ஆனாலும் என்ன செய்ய?” என்று கோவையில் கட்டிக்கொடுத்த தங்கை சொன்னாள். இவற்றைக் கேட்ட அம்மாவின் முகம் கொஞ்சம் வாடித்தான் போனது.
“அம்மா யார் வீட்டுக்கு வரமாடட்டா. இங்கேதான் இருப்பா. அதனால எல்லாரும் சேர்ந்து இங்கு வந்துதான் சாமி கும்பிடணும். கஷ்டமாத்தான் இருக்கு”. இப்பபடிச் சொன்னது, பக்கத்து ஊரில் வேலை பார்க்கும் வாத்தியார் தம்பி.

“அப்படில்லாம் சொல்லக்கூடாதுடா. அம்மா நல்லா இருக்கிற வரைக்கும் நாம எல்லாம் சேர்ந்து ஒண்ணாக்கூடித்தான் அப்பாவுக்குச் சாமி கும்பிடனும்”. குடும்பத்துக்கு மூத்தவன் என்ற முறையில் நான் கொஞ்சம் காட்டமாவே சொன்னேன்.
தம்பி ரெண்டு, பேரு, தங்கச்சி ரெண்டு பேரு, குடும்பம் குட்டின்னு 25 பேர் வீடு நிரம்பி வழிந்தது. பாட்டி வீடு என்று பிள்ளைகள் ஒரே ஆட்டம் பாட்டம் விளையாட்டு.
“ஒரு ஆள் போட்டு சமையல் செய்துடலாம்.” என்று சொன்னேன்.
“வீட்டுல உங்க அம்மாவையும் சேர்த்து ஆறு பொம்பளைக இருக்கோம். எதுக்கு சமையலுக்கு ஆள்?. அதெல்லாம் நாங்களே பார்த்துக்கிறோம்”.ன்னு பிடிவாதமாக சொல்லிட்டா என் மனைவி. தடபுடலா கிச்சனில் வேலை நடக்கு. மட்டன் பிரியாணின்னா அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும். அதற்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொடுத்தாச்சு.
வீட்டைப் பெருக்க சுத்தப்படுத்த, அலங்காரம் செய்ய, வாழை இலை நறுக்க ,வாசலில் கோலமிட, இப்படி சிறுசிறு வேலைகளை எங்கள் பிள்ளைகளே பார்க்கிறார்கள். மதியம் ஒரு மணி ஆயிற்று. அப்பா படத்திற்கு படையல் போட்டு வழிபடும் நேரம். ஒரு இலையை ப் போட்டு அதில், அதிரசம் உட்பட அப்பாவுக்குப் பிடித்த இனிப்புகள், காரங்கள், பழங்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டன. வாழைப்பழத்தில் பத்திகளைக் குத்தி ஏற்றி ஆயிற்று.
அடுத்து, சமையல் செய்த உணவு பொருட்கள் ஒவ்வொன்றாகக் கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்து சேர்ந்தது. “தள்ளுங்க தள்ளுங்க பிரியாணி வருது”. தம்பி மனைவியும் தங்கச்சியும் சேர்ந்து பானையைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். அப்போது அங்கு ஓடி வந்த தம்பி மகன் எட்டு வயசு பிரகாஷ் “ஐ பிரியாணி”என்று சொல்லிக்கொண்டு ஒருகை பிரியாணியை எடுத்துவிட்டான். வாயில் வைக்க போனவனைத் தடுத்து,” சாமி கும்பிடுதற்கு முன்னால எச்சில் பண்ணக்கூடாது. சாமி கண்ணைக் குத்திடும். போடு.”என்றாள் என் மனைவி. “தாத்தாதானே சாமி.தாத்தாக்கு என்ன ரொம்ப பிடிக்கும். என் கண்ணெல்லாம் குத்த மாட்டாங்க” என்று சொல்லியபடியே வாயில் போட்டான். “பெரியம்மா பிரியாணியில் ஏதோ குறையுது. நல்லா இல்ல. மணக்கவே இல்ல.” என்று கமெண்ட் வேறு அடித்து விட்டான். “போடா பெருசா கண்டு பிடிச்சிட்டான்.”என்று என் தம்பி மனைவி சொல்ல.”சரி சரி எல்லாரும் வாங்க முதலில சாமி கும்பிடலாம். அப்புறம் காக்காய்க்குப் பிரியாணி வைச்சு, நாம் சாப்பிடலாம். டைம் ஆகுது”. என்று சொன்னவள் என் தங்கச்சி. சாமி கும்பிட்டாச்சு.ஒரு இலையில் பிரியாணியைப் போட்டு ரோட்டில் வைத்துவிட்டு,” கா கா” என்று கத்தியும் கதறியும் ஏனோ காக்கா ஒன்றும் வரவில்லை. கொஞ்ச நேரத்தில் ஒரே ஒரு காக்கா வந்து கரண்டு கம்பத்தில் இருந்து போகும் கம்பியில் உட்கார்ந்து கொண்டு ஒரு மாதிரியாக தலையைச் சாய்த்து சாய்த்துப் பார்த்தது. ஆனால் இறங்கிச் சாப்பிட வரவில்லை.

“சரி சரி ,கூட்டமா நின்னா வராது. வாங்க. உள்ளே போய் நாம் சாப்பிடலாம். அது தானா வந்து சாப்பிட்டுட்டு போய்டும்”உள்ளூர் தங்கச்சி சொன்னாள்.
ஹால், வராண்டா என்று எல்லா இடத்திலும் போட்டிபோட்டுக்கொண்டு எல்லோரும் அமர, என் தங்கச்சியும் சென்னை தம்பி மனைவியும் பரிமாறினார்கள்.
முதல் வாய் பிரியாணியை வாயில் வைத்ததும் அந்தப் பயல் சொன்னது ரொம்ப சரியா இருக்கு .ஏதோ ஒன்று குறையுதே. பிரியாணிக்குரிய மணமே வரலையே? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. பக்கத்தில் இருந்த மனைவியைப் பார்த்தேன். அவளும் அதே எண்ணத்தோடு என்னை பார்த்தாள். எல்லோர் முகத்திலும் அந்த உணர்வு தெரிந்தது என்று நினைக்கிறேன். “பெரியப்பா ஏன் ஒரு மாதிரி முழுக்கிறீங்க? நான் அப்பவே சொன்னேனே” என்றான் அந்த பொடிப்பயல்.
சமையலுக்குப் பொறுப்பேற்றிருந்த என் மனைவி வாய் திறந்தா. “அது ஒன்னும் இல்லைங்க பலசரக்கு லிஸ்ட் போடும் போது எல்லாத்தையும் யோசித்து யோசித்து எழுதிக் கொடுத்தோம். ஆனா ஏலக்காயை மறந்து போனோம். சரி. அதற்குப் பதிலா, பட்டை, சோம்பு பிரியாணி இலை எல்லாம் இருக்குதேன்னு நினச்சு விட்டுட்டோம். என்றாள்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு பரிதாபமாகக் கட்டிலில் கை கூப்பிய வண்ணம் உட்கார்ந்திருந்த என் அம்மா மெதுவா சொன்னாங்க. “பிரியாணின்னா எல்லாமே இருக்கணும்டா. குடும்பமும் பிரியாணியும் ஒண்ணு. போன வருஷம் பிரியாணியை வைக்கிறதுக்கு முன்னாடி காக்கா வந்து காத்துக்கிடந்து சாப்பிட்டாச்சு இப்ப ஏன்டா கூப்பிட்டும் வரல.?”
ஆறு மாசத்துக்கு முன்னால நடந்தது எல்லாம் என் கண் முன்னால் விரிந்தது. என்னையும் சேர்த்து எங்க அப்பா அம்மாவுக்கு ஆறு பிள்ளைகள். மூன்று ஆண்கள் மூன்று பெண்கள். கடைசித் தங்கச்சி காஞ்சனா. எங்க அப்பாவைப் போலவே நல்ல கலர். எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. அவள் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது அப்பா இறந்து விட்டார். பிஎஸ்சி பிஎட் நாங்க தான் படிக்க வச்சோம். பி எட் படிக்கும்போதே யாரோ ஒரு பையனோடு பழகி இருக்கா. முதலிலேயே தெரியாமப் போச்சு. அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்க்கிற போது தான் வீட்டில் வந்து சொல்றாஅம்மாகிட்ட. அம்மா எனக்கு, தம்பிக்குப் போன் பண்ணிச் சொல்ல. விசாரிக்கும் போது தெரியுது.பையன் வேற ஜாதி பையன். வீட்ல எல்லாரும் தையா தக்கா ன்னு ஒரே குதி. யாருக்குமே அதுல இஷ்டமில்லை. எல்லாரும் சேர்ந்து “அம்மா இத நீங்க அனுமதிச்சா அப்புறம் நாங்க யாரும் வீட்டுக்கு வர மாட்டோம்” . இப்படி எல்லாத் தங்கைகளும் தம்பிகளும் பேச எங்கள் மனைவிமாரும் பேச, அம்மா மௌனமாக இருந்து விட்டார்கள். இவர்களெல்லாம் அந்த திருமணத்தை எதிர்ப்பதற்கு ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு தனி காரணம் இருந்திருக்கலாம்.அவள் பெரிதாகத் தப்பு ஒன்றும் செய்யவில்லை வீட்டில் சொல்லித்தான் பார்த்தாள். யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் அந்தப் பையனோடு சென்று திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்துறா. பக்கத்து ஊர்தான். கஞ்சம்பட்டி. அஞ்சு கிலோமீட்டர் இருக்கும். நல்லாத்தான் இருக்காங்க. அவளுக்கு இன்னும் வேலை கிடைக்கல .ஆனா அந்தப் பையன் வாத்தியார் வேலை பார்க்கிறான். இப்போகூட காஞ்சனா குழந்தை உண்டாயிருக்கான்னு கேள்விப்பட்டோம். ஆனால் யாரும் போய் எட்டிக்கூட பார்க்கல. அன்னிக்குக் கண்டிப்பா சொல்லி விட்டாச்சு .”உனக்கும் இந்த வீட்டுக்கும் இனிமேல் எந்தச் சம்பந்தம் இல்லை. நீ எங்க முகத்துல கூட விழிக்க கூடாது. அம்மா செத்தாக் கூட ,பார்க்க வரக்கூடாது.” அழுதுக்கிட்டே போனவள் இந்த ஆறு மாதத்தில் பலமுறை எனக்குப் போன் பண்ணினாலும் நாங்கள் யாரும் அவளிடம் பேசக்கூடாது, என்று ஒரு சட்டம் போட்டு வைத்துக் கொண்டோம் ஒண்ணு ரெண்டு தடவை அம்மாவப் பார்க்க வர முயற்சி பண்ணும் போதெல்லாம் உள்ளூர் தங்கச்சி, அவளுக்கு மூத்தவள்,” போடி உன்னைத்தான் அறுத்து விட்டாச்சே”ன்னு சொல்லி அவளை விரட்டிருக்கா.
அம்மா பிரியாணி பற்றி சொன்னதன் உட்பொருள்எல்லாமே எனக்கு இப்போது நன்றாகப் புரிந்தது. எனக்கு மட்டும் என்ன… தாயின் மனம் புரியாமல் சமுதாயத்துக்குப் பயந்து, சாதி ,சமயம் என்று படித்த முட்டாள்கள் எல்லோருக்கும் புரிந்திருக்கும். செல்போனை எடுத்தேன்.” காஞ்சனா அண்ணன் பேசுறேண்டா. நல்லா இருக்கியா? மாப்பிள்ளை நல்லா இருக்காரா? அப்பாவுக்குச் சாமி கும்புடுறோம். நீ இல்லாமலா?.நீயும் மாப்பிள்ளையும் ஆட்டோ புடிச்சு உடனே வாங்க. பாத்து வாடா புள்ளத்தாச்சி. நீங்க வந்த பிறகு தான் சாப்பிடணும்”. அவள் அழுகைக் குரல் போனிலேயே கேட்டது. வீட்டில் ஒரே அமைதி .15 நிமிடத்தில் வாசலில் ஆட்டோ வந்து நிற்க, காஞ்சனா அழுதுகொண்டு ஓடிவந்து ஒவ்வொருவராகக் கட்டிப்பிடித்து “அண்ணே அக்கா அண்ணி “என்று கதறி அப்பாப் படத்தைப் போய்த் தொட்டுத் தொட்டுக் கும்பிட்டு அம்மா காலில் போய் விழுந்து எழுந்து அம்மா மடியில் படுத்து முகத்தை புதைத்துக்கொண்டு ஓ வென்று கதறிஅழுதாள். அம்மா அவளை ஆறுதலாக அணைத்துக்கொண்டாள். “வாங்க மாப்பிள்ளை சாப்பிடலாம்.” என்றான் தம்பி கண்ணைக் கசக்கிக்கொண்டே. அவன்தான் அன்னைக்கு அவரை சாதிக் கெட்ட பயல் என்று சொன்னவன்.
இப்போது வெளியே “கா கா” என்று சத்தம். அம்மா சொன்னாள்.” டேய் பாஸ்கர் இப்பப் போய் பாருடா காக்கா வந்துருக்கும்.”உடனே வெளியில் ஓடிப்போய் எட்டிப்பார்த்தேன். கம்பி மேல் உட்கார்ந்து இருந்த காக்கா வேகமா இறங்கி வந்து இலையில் வைத்திருந்த பிரியாணியை ஆசையோடு கொத்தித் தின்ன தொடங்கியது. இப்போது புரிந்தது தங்கையை ஒதுக்கி வைத்தது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. ஒதுக்கி வைத்த தங்கையோடு சேர்ந்து எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டோம். பிரியாணியில் ஏலக்காய் இல்லாத குறை ஏனோ இப்போது தெரியவே இல்லை . நல்லா கம கம’ என்று மணம் வீசியது பிரியாணி. நிமிர்ந்து அப்பா போட்டோவைப் பார்த்தேன். கூடுதலாகச் சிரித்தது போல் தோன்றியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.