May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

அத்தை மகள் / சிறுகதை / முத்துமணி

1 min read

Aththai magal / Short story by Muthumani

29-7-2020

நாலு பிள்ளைகளையும் கூட்டிகிட்டு, குடும்பத்தோடு
விருந்துக்கு வந்து நாலு நாள் இருந்து, தின்னுட்டுப் போன என் தங்கச்சி செஞ்ச வேலை இது. அவ வாய் சும்மா இருக்காது. குழந்தை உண்டாகிருந்த அண்ணியை பார்க்க வந்த அவள், என் தர்ம பத்தினியின் குணம் தெரியாம, வந்ததுக்குத் தன் அண்ணனப் பெருமையாச் சொல்லுறேன்னு என்னத்தயோ உளறிட்டுப் போயிட்டா. இப்ப நான் கிடந்து இந்தப் பாடு பட்டுக்கிட்டுருக்கேன்.
இன்னும் என்னவெல்லாம் சொல்லிட்டுப் போயிருக்காளோ? இப்பவே நம்மாளு பேயாட்டம் ஆடிக் கிட்டுருக்கா.
கல்யாணமாகி ஒரு வருஷம்தான் ஆகுது. அவளுக்கு அப்படி ஒரு ஆதிக்கம் என்மேல். எதற்கும் யாருக்கும் உங்களை விட்டுக் கொடுக்க மாட்டேன். என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான். என்பது போல ஒரு கொள்கை. இப்படிப் புருஷன் மேல் ஆதிக்க உணர்வு கொண்ட ஒருத்தி மனைவியாக் கிடைப்பது ஒரு அதிர்ஷ்டம்தான். ஆனாலும் சில நேரங்களில் அதுவே கஷ்டமாகி விடுகிறது. பெண்களின் பொதுவான குணமே அதுதான். ஆனாலும் இவள் அதில் ஒரு ஸ்பெஷல்.

கல்யாணம் ஆன ஒரு வாரத்தில், வார இறுதியில் அவள் பிறந்த வீட்டுக்குப் போயிருந்தோம். நாற்காலியில் உட்கார்ந்தேன். ஓடிவந்து என் மடியில் ஆசையோடு அமர்ந்தது ஒரு ஐந்து வயது குழந்தை.
“ஏண்டி ஐசு மாமா மடி இன்னிக்குதாக்கும்?” இவளுடைய அண்ணி என்று கேட்ட பிறகுதான் அந்தக்குழந்தை இவளுடைய அண்ணன் மகள் என்கிற விஷயமே எனக்குத் தெரியும்.
தூரத்திலிருந்து சட்டையின் நுனியை எடுத்து வாயில் கடித்தபடி சிறுவன், மடியில் அமர்ந்திருந்த பாப்பாவுக்குத் தம்பி போல, ஏக்கத்தோடு பார்த்தான். நான் அவனை,” வாடா” என்று அழைத்து அவனையும் மடியில் தூக்கி வைத்துக் கொண்டேன்.
என் மாமியார், மாமனார் உட்பட குடும்பத்தில் எல்லோருக்கும் பயங்கர மகிழ்ச்சி. மாப்பிள்ளை நல்லா குடும்பத்தோடு ஒட்டுதலா இருக்காருன்னு எல்லோரும் என்னை மெச்சிகிட்டாங்க.

அன்று இரவு அவள் ஆடிய ஆட்டம் இருக்கிறதே. “அது என் இடம். அதுல வேற யாருக்கும் இடம் கிடையாது”.
“அடியே பச்சைப் பிள்ளைகள். அதுவும் உன் அண்ணன் பிள்ளைகள். அவர்கள் ஆசையா வந்து உட்கார்ந்தால் என்ன குறைந்து போய்டும்?”.
” யாரா இருந்தாலும் சரி, எனக்கு பிடிக்கல”.
“சரி சரி இனிமேல் உட்கார விடாமல் பார்த்துக்கிறேன்”. என்று நான் சொல்ல,
“அப்படின்னா கல்யாணத்துக்கு முன்னாடி யாரையெல்லாம் மடியில் தூக்கி உட்காரவச்சிக் கொஞ்சுனீங்க?”.இப்படி ஒரு குணம் .
இவளிடம் நம்முடைய அக்கா மகளைத் தூக்கி வளர்த்தது, பள்ளிக்கூட நட்புகள், கல்லூரி நண்பர்கள் எதுபற்றியும் பேசக்கூடாது என்று மிக எச்சரிக்கையாக இருந்தேன்.
வந்த தங்கச்சி இதுக்கெல்லாம் வேட்டு வைச்சுட்டுப் போய்ட்டா.
தங்கச்சி ஊருக்குப் போன அடுத்த நிமிடம் படபடவென வெடிக்க ஆரம்பித்த சரவெடி கடந்த 10 வருஷமா வெடிச்சிக் கிட்டேதான் இருக்கு. கொஞ்சம் விட்டு விட்டு வெடிக்குது அவ்வளவுதான். தங்கச்சி வந்துட்டு போன அன்னைக்கு நடந்த கதைக்கு வருவோம்.
“ஆமா ஊருல உங்க அப்பா கூட பிறந்த அத்தை ஒருத்தங்க இருந்தாங்களா?”.

“ஆமாடி இருந்தாங்க ஆனால் அவங்க இப்ப இல்ல.அஞ்சு வருஷத்துக்கு முன்னாலே இறந்துட்டாங்க டிபி நோயில் கஷ்டப்பட்டாங்க.”.
“அதுசரி என்னிய நீங்க இஷ்டப்பட்டு, புடிச்சுத்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?.”

“இது என்ன கேள்வி?. முட்டாள்தனமா?. பிடிக்காமலா கல்யாணம் பண்ணுவாங்க?. ஏன் உனக்குத் திடீர்னு இந்தச் சந்தேகம்?”.

“உண்மையைச் சொல்லுங்க. சத்தியமா என் தலையில அடிச்சுச் சொல்லுங்க”.
“என்னடி இது? கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு. சந்தோசமா வாழ்ந்துட்டுருக்கோம் . இப்ப எங்க இருந்து இந்தக் கேள்வி திடீர்னு? செத்துப்போன எங்க அத்தையை வேறு வம்புக்கு இழுத்துக்கிட்டு”.
“இல்ல உங்க அத்தைக்கு ஒரே ஒரு பொண்ணு இருந்தாளா?”
“ஆமா. அவ பேரு நிரஞ்சனா”.
“பேரைக் கூட மறக்க லியோ?” என் கன்னத்தை வலிக்கும்படி கிள்ளி விட்டாள் .

“என்னடி இது?. அத்தமக, சின்ன வயசுல இருந்தே தெரியும். அவ பேரு எப்படி மறக்கும்?” கன்னத்தை தடவிக் கொண்டே சொன்னேன்.
“சின்ன வயசுல இருந்தே ஒண்ணா ஓடிப்பிடிச்சு விளையாருப்பீங்க?” இதைச் சொல்லும்போதே அவள் குரல் மாறிவிட்டது.
“அட லூசு பக்கத்து வீடு தான் அத்தை வீடு. எல்லாரும் சேர்ந்து தான் விளையாடுவோம்”.

“எல்லாம் தெரியும். நீங்க எட்டாம் வகுப்புப் படிக்கும்போது அவ ஆறாம் வகுப்பு படித் தாளாம். ரெண்டு பேரும் சேர்ந்துதான் ஸ்கூலுக்குப் போவீங்களாம். சேர்ந்தேதான் வருவீங்களாம்”. இதைச் சொல்லும்போது ஏறத்தாழ அழுது விட்டாள் .

“ஆமா இல்லைன்னு யார் சொன்னா?”.

” இல்ல நீங்க வாத்தியார் வேலைக்கு வந்த புதுசுல அவளும் டீச்சர் வேலைக்குப் படிச்சு முடிச்சிருந்தாளாம்.”.
” ஆமாமா. அதை எல்லாம் விட்டுத்தள்ளு .இப்ப எதுக்கு அது? ஆமா இந்த வாரம் தானே உங்க அம்மா வீட்டுக்குப் போணும்னு சொன்ன?”
“இந்த பாருங்க,பேச்ச மாத்தாதீங்க.”
“சரி சொல்லு. என்ன தெரியணும் உனக்கு?”.
“இல்ல ஒரு பேச்சு உங்க அத்தை மகளையே உங்களுக்கு முடிக்கிறதா.. இருந்துச்சாமில்ல?.”
“ஐயோ என் தங்கச்சி எதையோ உன்கிட்ட உளறிட்டுப் போயிருக்கா. அவ பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துக்காதே.”
“கேட்ட கேள்விக்குப் பதில்?”கொஞ்சம்அரட்டினாள்.
“அதெல்லாம் ஒண்ணும்ல்லடி. எங்க அத்த அப்படி ஒரு ஆசைப் பட்டாங்க. ஆனா எங்கப்பா அதுக்குச் சம்மதிக்கல்ல”.
“ஓஹோ. உங்க அப்பா ஏன் சம்மதிக்கல்லை?. அது எப்படி எனக்குத் தெரியும்?. எங்கப்பாவுக்குச் சொந்த பந்தத்தில் கல்யாணம் பண்றது பிடிக்காது. எங்க வீட்ல பார்த்தியா? யாருக்கும் சொந்தத்துல கல்யாணம் பண்ணல”.
” அது சரிதான். உங்க அப்பாவுக்குப் பிடிக்கலை. நீங்களும் அத்தை மகளைக் கல்யாணம் பண்ணிக்கல அப்படித்தானே?”.
“ஆமா. ஒருவேளை உங்கப்பாவுக்குப் பிடிச்சிருந்தா?” பதில் சொல்ல முடியாமல் திருதிருவென முழித்தேன்.
“நீங்க குடும்பத்தோடு எங்க வீட்டுக்குவந்து, என்னப் பொண்ணு பார்த்துட்டு, போய் இவதான் என் மருமக . எனக்கு அந்தப் பிள்ளையை ரொம்ப பிடிச்சிருக்குன்னு, உங்க அப்பா என்னை ஓகே சொன்னதும் நீங்களும் கோவில் மாடு மாதிரி தலையாட்டிருக்கீங்க அப்படித்தானே?”
“ஆமா அப்படித்தான். இதைத்தான் நான் உன்னிடம் ஏற்கனவே சொல்லி இருக்கேனே”.
“இல்ல இதே மாதிரி ஒருவேளை உங்க அத்தை மகளை உங்கப்பாக்குப் பிடிச்சிருந்தது உங்கிட்ட சொல்லிருந்தா, மண்டைய ஆட்டிக்கிட்டு அவளைக்கட்டிருப்பீங்க அப்படித்தானே?”.
“இதுக்கு என்னை என்ன பதில் சொல்ல சொல்ற?” “உண்மையச் சொல்லுங்க”.
சற்றுத் தயக்கத்துடன் சொன்னேன். “நடக்காததை ஏன் கற்பனை பண்ணுற? ஒருவேளை எங்க அப்பா ஓகே சொல்லிருந்தா, அப்படித்தான் நடந்திருக்கும்”.

இதை நான் சொல்லி முடித்தவுடன் என்ன நடந்தது? எப்படி நடந்தது ? என்பதை எல்லாம் விளக்க இப்போதும் என்னால் முடியல்லை எரிமலை வெடித்ததா? சுனாமி வந்ததா?. அல்லது பிரளயமே வந்து போனதா?. குருச்சேத்திரம் 18 நாள் நீடித்தது. அதற்கப்புறமும் என்னிடம் பேசவே இல்லை. அந்த சமயத்தில் குழந்தை உண்டாகி இருந்தாள். மூணு மாசம்.
பிறகு நான்தான் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை செக்கப்புக்குப் போ ணுமில்ல? என்று பேச்சைச் தொடங்கினேன்.
ஆஸ்பத்திரியில் இருந்து வரும்போது ஆட்டோவில், “ஆமா நமக்குப் பையன் பொறந்தா என்ன பெயர் வைக்கிறதா அன்னிக்குச் சொன்னீங்க?”. அடப்பாவி எதுக்கும் எதுக்கும் முடிச்சுப் போடப் போறான்னு புரிஞ்சு போச்சு. “அது…வந்து.. எங்க அப்பா பேரை வச்சுக்குவோம்”.
“இல்ல போன மாசம் வேறு என்னமோ பெயர் சொன்னீர்களே…?”.
” ஆமா சொன்னேன். அது எங்க வாத்தியார் பேரு. சின்ன வயசுல என் மேல அவ்ளோ அன்பா இருப்பாரு”.
“அவர் பேரு என்ன?”.
“நி..ர.. ஞ்..சன்.” இழுத்தேன்.
“நிப்பாட்டுங்க.. அந்தப் பெயர் வேண்டவே வேண்டாம். அதுக்கு உங்க அப்பா பெயர் காத்தமுத்து பெட்டர். அதையே வச்சிடலாம்.”
“ஆமா உங்க அத்தை மக போட்டோ ஏதாவது இருக்கா?”. “அந்தக் காலத்துல ஏதடி போட்டோ? நம்ம கல்யாணத்துக்குக் கூட கறுப்பு வெள்ளை தான் எடுத்தோம்.”
அன்று இரவு பழைய போட்டோ ஆல்பம் ஒன்றில் அத்தை மகள் எல்லோரும் சேர்ந்து எடுத்த போட்டோவை பத்திரமாக பிரித்து கிழித்து எறிந்து விட்டேன்.

அன்னிக்கு ஆரம்பிச்சது, பத்து வருஷமா வெடிச்சுக்கிட்டே இருக்கு. ஞாயிற்றுக்கிழமை ஆனால் கொஞ்சம் அதிகமா வெடிக்கும். என் வாயைத் திறந்து சோறு நிறைய இருக்குன்னுகூட சொல்ல முடியாது அதிகமா இருக்குன்னு சொல்லணும். அது மட்டுமா? நிறை, நிரஞ்ச ,நிறைய ..இப்படிப் வார்த்தைகளை உச்சரிக்கக் கூட முடியாது. இது என்னைக்குத் தான் தீருமோ?. இப்போ மூணு பிள்ளைகளையும் பெத்தாச்சி.
எங்க அத்த மகளைச் சின்ன வயசுல பார்த்தது. அது நான் வேலைக்கு வந்த புதுசு. அதுக்குப்பிறகு அவளை வெளிநாட்டுலக் கட்டிக்கொடுத்து அங்கேயே இருக்கிறான்ன்ன்னு தெரியும். எனக்கு முந்தியே அவளுக்குக் கல்யாணம் ஆயிருச்சு. அவளைக் கட்டிட்டு படவேண்டிய இம்சையை எல்லாம் அவளைக் கட்டாமலே பட்டுக்கிட்டுருக்கேன்.
இன்னிக்கு சொந்த ஊருல ஒரு கல்யாண வீடு. எல்லா கல்யாணத்துக்கும் போறதில்ல முக்கியமான நல்லது கெட்டதுக்கு மட்டும்தான் ஊருக்குப் போறது வழக்கம். பஸ்ஸை விட்டு இறங்கி கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தோம். சின்னவன் என் தோளில். பாப்பாவையும் மூத்தவனையும் அவள் கைகளில் பிடித்துக்கொண்டு.
அங்கு முதலில் கண்ணில் பட்டது என் தங்கச்சி தான் அவ போட்ட வெடி தான் பத்து வருஷத்துக்கு முன்பு. இன்னும் வெடிச்சு முடியல. ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன். இன்னைக்கு வாய்விட்டு அவளிடமே கேட்டுட்டேன்.
“உங்க அண்ணிட்ட அன்னைக்கு என்ன சொன்ன”.
“அது ஒன்னும் இல்லண்ணே, எங்க அண்ணனுக்கு, நான் பொண்ணு தரேன், நீ பொண்ணு தரேன்ன்னு உள்ளூருக்குக்குள்ளே போட்டி போட்டுக்கிட்டு வந்தாங்க. எங்க அத்தை கூட அவங்க மகளைக் கட்டி வைக்கக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டாங்க. அப்படின்னு பெருமையா சொன்னேன்.”.
” நீ பாட்டுக்குச் சொல்லிட்டுப் போயிட்ட. பத்து வருஷமா நான் படுற பாடு எவனுக்குத் தெரியும்?. எங்க அத்த மகள் யாரு?. என்ன கலரு?. ஆளு எப்படி இருப்பா? ஒண்ணும் என் பொண்டாட்டிக்குத் தெரியாது. ஆனா அவளைத் தனக்கு ஜென்ம விரோதியாவே நினைச்சிட்டா. நல்லவேளை அத்தை மகள் வெளி நாட்டுக்குப் போயிட்டா.இங்கே எங்கேயாவது இருந்தான்னா தேடிப்பிடிச்சுக் கழுத்தை நெருச்சிக் கொன்னுருப்பா.”
“அண்ணே வெளிநாட்டிலிருந்து நிரஞ்சனா வந்திருக்கா.” இந்தக் கூட்டத்தில்தான் எங்கேயோ ஒக்காந்து இருக்கா.” தங்கச்சி ஆசையாச்
சொல்ல ஐயையோ அது வேறயா? என்ன நடக்கப் போகுதோ? தெரியலையே,! அப்படியே திரும்பி ஊருக்குப் போயிடலாமா?.
நினைத்துக் கொண்டிருக்கும்போதே “அத்தான் நல்லா இருக்கீங்களா?” என்று எருமை மாடு கனைப்பது போல ஒரு குரல். திரும்பிப் பார்த்தேன். 5 பேர் அமரும் ஒரு அகலப் பெஞ்சில் ஒரு பெரிய உருவம். தும்பிக்கை மட்டும்தான் இல்லை.

“யாரு?”
“அத்தான் என்னத் தெரியலையா? நான்தான் நிரஞ்சனா”.
நிரஞ்சனாவா? கொஞ்சம் குறன்சா என்ன ?வெளிநாட்டில் போய் என்னத்தத் தின்னாளோ? பாம்பையும் பல்லியும்… தின்னுத் தொலச்சி. முழுசா அவளப் பாக்கனும்னா கோயில் பிரகாரத்தை ரவுண்டு அடிக்கிற மாதிரி சுத்திச் சுத்திப் பார்க்கணும். பேருக்குத் தக்கபடி நிரஞ்சி இருக்கா.
எனக்குச் சந்தோஷம். திரும்பிப் பார்த்தேன். அங்கு யாரோடோ பேசிக் கொண்டிருந்தா நம்ம ஆளு.

“ஜானகி இங்க வா. இது யாருன்னு பாரு?. எங்க அத்தை மக நிரஞ்சனா”.
மறுபடியும் அதே எருமை மாடு, “நல்லா இருக்கீங்களாஅக்கா?” என்று ஒருமுறை உறுமியது.பார்த்தவுடன் பக்கத்தில் உட்கார இடமில்லாமல் எதிர்புறம் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து, அவளோடு பேசத் தொடங்கிட்டா நம்ம ஆளு.
மனசுக்குள்ள புர் புர்… இந்த முகரக்கட்ட தான் நிரஞ்சனா வா?.. என்று நினைத்திருப்பா போலும். அதை அவள் விட்ட பெரு மூச்சு எடுத்து காட்டியது.

“அத்தான் இங்க பாருங்க. உட்காருங்க.உங்க அத்த மக வந்துருக்காங்க. பாக்கலையா? பேசலியா?.. வாங்க வந்து பேசுங்க.” என்றாள் நம்மாளு.

அவள் முகத்தில் ஒரு வகை மலர்ச்சி. சிங்கப்பூரிலிருந்து வந்து நல்ல வேளை என்னக் காப்பாத்திட்டா எங்க அத்த மக.
பத்து வருஷத்துக்கு முன்னாலே என் தங்கச்சி பத்த வச்சி,வெடிக்கத் தொடங்கிய 10000 வாலா சரவெடி சொத்த வெடியாத் தன் வேலையை முடித்துக் கொண்டது.சூத்த் ..பூத்த்…டப்.

===

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.