April 23, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

1 min read

கடையம் விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு…

Kadayam farmer muthu body re-examine- court ordered

வனத்துறையினரின் தாக்குதலில் இறந்ததாக கூறப்படும் விவசாயி அணைகரை முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தென்காசி மாவட்டம் வாகைகுளத்தைச் சேர்ந்த பாலம்மாள் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,” எனது கணவர் அணைக்கரை முத்து வாகைகுளம் பகுதியில் விவசாயம் செய்துவந்தார். இந்த நிலையில் ஜூலை 22ஆம் தேதி இரவு 11 மணி அளவில் வனத்துறை நெல்லை நாயகம் தலைமையில் முருகசாமி, சக்தி முருகன், பசுங்கிளி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி சிவசைலம் பகுதியில் உள்ள பங்களா குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை வனத்துறையினர் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார். அதன் காரணமாகவே, அவரது உடலை இரவோடு இரவாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துள்ளனர். தடய அறிவியல் துறையின் தலைவர் டாக்டர் செல்வமுருகன் இருக்கும் நிலையில், அவரது தலைமையில் இல்லாமல் இந்த உடற்கூறு ஆய்வு நடைபெற்று உள்ளது. ஆகவே கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்யவும், தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” . இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில் அணைக்கரை முத்துவின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுடன், நிலை அறிக்கை, சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மாலை 4 மணிக்கு மேல் உடற்கூராய்வு செய்யக்கூடாது என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கபப்பட்டுள்ள நிலையில், எவ்வாறு உடற்கூராய்வு செய்யப்பட்டது? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு அரசுத்தரப்பில், நீதிமன்றம் உத்தரவாக அல்ல. அறிவுரையாகவே வழங்கியது. அணைக்கரை முத்துவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சட்ட ஒழுங்கு பிரச்சனையை தவிர்க்கும் நோக்கிலேயே விரைவாக உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதுவும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரின் பரிந்துரை பேரிலேயே செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, உடற்கூராய்வு அறிக்கையில் அணைக்கரை முத்துவின் உடலில் 4 இடங்களிலேயே காயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், விவசாயி முத்துவின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர் ஒருவர் அடங்கிய குழு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.