June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

அயோத்தி ராமர் கோவில் கட்ட பூமி பூஜை; பிரதமர் மோடி பங்கேற்பு

1 min read
Bhoomi Puja to build Ayodhya Ram Temple; Participation of Prime Minister Modi

5-8-2020

அயோத்தியில் ராமர்கோவில் கட்ட பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

ராமர் கோவில்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அடிக்கல் நாட்டுவிழா

அதன்படி ஆகஸ்டு 5-ம் தேதி ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டதால் முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.

அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரமதர் மோடி விமானம் மூலம் லக்னோ வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி சென்றார்.
பின்னர் மோடி அயோத்தி அனுமன் கார்ஹி கோவிலில் வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து, குழந்தை ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அதன்பின் அங்குள்ள வளாகத்தில் பாரிஜாத மலர் ச் செடியைநட்டார்.

அதன்பின்னரே ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். பூமி பூஜையின்போது மோடி, 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார்.

இதில், முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். துணைத்தலைவர் பையாஜி ஜோஷி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜ.க. தலைவர்கள், சாமியார்கள் பூமி பூஜையில் பங்கேற்றனர்.

மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பேச்சு

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

ராமர் மற்றும் சீதாதேவியை வணங்கி உரையை தொடங்குகிறேன். இன்று இந்தியா முழுவதும் ஜெய் ராம் என்ற கோஷம் தான் கேட்கிறது. உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். வரலாற்று சிறப்பு மிக்க இந்த நாளில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சரயு நதிக்கரையில் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் நிறைவேறியுள்ளது.

உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. இந்த தருணம் வரும் என கோடிக்கணக்கான மக்கள் நம்பவில்லை. பல வருட காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்துள்ளது. குழந்தை ராமர் பல ஆண்டுகளாக குடிசையில் வைக்கப்பட்டிருந்தார். ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது. கோவிலுக்காக பல தலைமுறையினர் தியாகம் செய்துள்ளனர். பலர் தங்களது உயிரை தியாகம் செய்து ராமர் கோவிலுக்காக போராடியுள்ளனர். அவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *