சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி, ரெய்னா ஓய்வு
1 min read
Tony and Reina retires from international cricket
15-8-2020
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளனர்
டோனி
கிரிக்கெட்டில் பிரபலமானவர் மகேந்திர சிங் டோனி. இவர் 2004 ம் ஆண்டு இந்திய அணியில் சேர்ந்தார். 2007 ம் ஆண்டு முதல் 2016 வரை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார்.
இவரது தலைமையில், ஐ.சி.சி.யால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று விதமான உலகக்கோப்பைகளையும் (50 ஓவர், 20 ஓவர், சாம்பியன்ஸ் டிராபி) இந்திய அணி வென்றது.
இந்த மூன்று கோப்பைகளையும் பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் இவரையே சேரும். மேலும், இவர் ஆசிய கோப்பைகளையும் பெற்று கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் தன் திறமையை நிரூபித்துள்ளார். இதனால், இந்திய அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது.
டோனி இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஓய்வு
இந்த நிலையில் டோனி இன்று( சனிக்கிழமை) ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் வேதனை
இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி தொடங்கி நவம்பர் 8-ந்தேதி முடிவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர் டோனி விளையாடுவார் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். தற்போது இவர் ஓய்வு பெறுவதாக கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
சுரேஷ்ரெய்னா
இதற்கிடையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனியைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.