கம்பனின் கவிச் சிறப்பு/ முத்துமணி
1 min read
Kavi chakkaravarthi Kamban By Mutumani
தமிழுக்குக் கதி என இருவரைக் குறிப்பிடுவர். அவர்களுள் ஒருவர் ஐயன் திருவள்ளுவர். மற்றவர் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.
கவிச்சக்கரவர்த்தி யார்? என்று கேட்டால், கம்பர் என்று பதில் உடனே வரும். கவிச்சக்கரவர்த்தி என்னும் பட்டத்தை ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், கம்பர் மூவரும் பெற்றிருந்தாலும் கம்பரை மட்டும்தான் கவிச்சக்கரவர்த்தி என்று இன்றுவரைஅழைக்கிறோம்.
கல்வியில் பெரியவன் கம்பன். பாரதியார் கூட ,”கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று கூறிவிட்டுச் சிந்தித்தார். கல்வியில் சிறந்த தமிழ் நாடாக இருக்க வேண்டுமென்றால் சிறந்த கல்வியாளர் ஒருவரைக் காட்ட வேண்டுமல்லவா?. அப்படிச் சிந்தித்தபோது அடுத்த வரியில் எழுதினார், “புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு”.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்னும் பழமொழி,கம்பன் வீட்டில் கம்பரோடு தொடர்பு கொண்டிருக்கிற, உயிரற்ற பொருளுக்குக்கூட கவிபாடும் ஆற்றல் வந்துவிடும் என்று கம்பன் கவி யாற்றலைச் சிறப்பிக்கிறது.
கட்டுத்தறி என்பது வீடுகளில் யானைகள், மாடுகள் போன்ற விலங்குகளை கட்டி வைக்கும் இடம். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் என்றுதான் பாரதி தொடங்கினார். வார்த்தை தமிழுக்கு வழங்கு தமிழ்வேந்தன் என்று கண்ணதாசன் கம்பனைப் புகழ்ந்தான்.
கம்பன் கவிதை போல கற்றவர்க்கு மனம் களிக்கச் செய்யும் கவிதை வேறில்லை. கம்பன் பாடுபொருள் என்ன? என்பதை விட்டுவிட்டு கம்பன் கவி நயத்தைப் பாருங்கள். கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க முடியாத அளவிற்கு விறுவிறுப்பாக, அனைத்துச் சுவைகளையும் உள்ளடக்கியதாகவும் கம்பன் பாட்டுகள் இருக்கும். கம்பனுடைய எழுத்து நடை… அதை மேடை என்று சொல்வதைவிட ஓட்டம் என்றே சொல்லலாம்.இப்போதுகூட கம்பன் போக்கில் போகிறான் என்று சிலர் கூறக் கேட்கலாம். எதையும் யோசிக்காமல் சுற்றி வளைக்காமல் கடகடவென்று வார்த்தைகளை எங்கிருந்துதான் பிடிப்பாரோ?
தமிழனாகப் பிறந்து விட்டால் கம்பன் தந்த பால் கடலில் சில துளிகளை யாவது அருந்தாமல் செல்வது அழகென்று. கம்பர் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழில் பல்வேறு இராமாயணங்கள் இருந்தன. அவற்றையெல்லாம் கம்பன் கவிநயம் காணாமல் செய்துவிட்டது.
அதே நேரத்தில் கருத்தாழம் மிக்கதாகவும் கம்பன் கவிதை அமையும். எடுத்துக்காட்டுக்காக அமைச்சன் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் கூறும் கம்பன் பாட்டு ஒன்றைப் பார்ப்போம்.
உற்றது கொண்டு மேல் வந்து
உறுபொருள் உணரும் கோளார்
மற்றது வினையின் வந்தது ஆயினும்
மாற்றல் ஆற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மைப்
பெரியவர் அரிய நூல்கள்
கற்றவர் மானம் நோக்கின்
கவரிமா அனைய நீரார்.