பிரணாப் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை
1 min read
Pranab's condition did not improve
16-8-2020
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவருக்கு, ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் ஆஸ்பத்திரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரணாப்முகர்ஜி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, கடந்த 10-ந் தேதி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரை பரிசோதிக்கும்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்பின் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பிரணாப் முகர்ஜியின் மூளையில், ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அறுவை சிகிச்சை மூலம், அந்த ரத்தக்கட்டு அகற்றப்பட்டது.
ஆனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இது குறித்து, ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்” என, கூறப்பட்டுள்ளது.
தேசிய கொடி
இதற்கிடையில், பிரணாப் முகர்ஜியின் மகள், ஷர்மிஷ்டா முகர்ஜி, ‘டுவிட்டரில்’ வெளியிட்ட பதிவில், “சிறு வயதில், என் தந்தையும், என் மாமாவும், சுதந்திர தினத்தன்று, தங்கள் வீட்டு மாடியில், தேசியக் கொடியை ஏற்றுவார்கள். எனக்கு தெரிந்து, அவர் எந்த சுதந்திர தினத்தன்றும், தேசியக் கொடி ஏற்றாமல் இருந்ததில்லை. அடுத்த ஆண்டு நிச்சயம் ஏற்றுவார் என நம்புகிறேன்” என, கூறியுள்ளார்