September 18, 2024

Seithi Saral

Tamil News Channel

6-ந் தேதி நள்ளிரவு முதல் விரைவு பஸ்கள் இயக்கப்படும்; நாளை முன்பதிவு தொடங்கம்

1 min read

Express buses will run from midnight on the 6th; Booking starts tomorrow

3-8-2020

தமிழ்நாட்டில் 6-ந் தேதி நள்ளிரவு முதல் விரைவு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ளது.

போக்குவரத்து

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வருகிற 7-ந் தேதி முதல் தமிழகத்தில் பஸ், ரெயில்கள் ஓடும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனை அடுத்து வருகிற 7-ந் தேதி தமிழகத்தில் 7 வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்தும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

விரைவு பஸ்கள்

அரசு பஸ்கள் 7-ந் தேதி முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவு பஸ்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருந்தது. இதுபற்றி மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது,
“வருகிற 7-ந் தேதி முதல் தொலைதூர அரசு விரைவு பஸ்கள் மற்றும் சொகுசு பஸ்களை இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் தயாராகி வருகிறது. அன்று முதல் திட்டமிட்டபடி அரசு விரைவு பஸ்களின் போக்குவரத்து தொடங்கும்.” என்றனர்.

இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் கூறி இருப்பதாவது:-

400 பஸ்கள்

தமிழ்நாட்டில் அரசு விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் சுமார் 1000 உள்ளன. இந்த பஸ்களில் சுமார் 350 பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.

மீதம் உள்ள சுமார் 650 பஸ்கள் தமிழ்நாட்டுக்குள் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டங்களுக்கு இடையே பஸ்களை இயக்கலாம் என்று தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் அரசு விரைவு பஸ்களும் இயக்கப்படும்.

முதல் கட்டமாக 400 குளிர் சாதன வசதி இல்லாத அரசு விரைவு பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், சேலம், ஈரோடு, நாகர்கோவில் உள்பட முக்கிய ஊர்களுக்கு இடையே விரைவு பஸ் போக்குவரத்து தொடங்கும்.

6-ந் தேதி நள்ளிரவு

அரசு விரைவு, சொகுசு பேருந்துகளை 6-ந் தேதி நள்ளிரவு முதலே தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அன்று இரவு முதல் வழக்கமான விரைவு பஸ் போக்குவரத்து சேவை தொடங்கும்.

வெளி மாநிலங்களுக்கு பஸ்களை இயக்குவது தொடர்பாக இன்னமும் எங்களுக்கு எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் கிடைக்கவில்லை. அரசு அனுமதி வழங்கியதும் வெளி மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படும்.

25 இருக்கைகள்

அரசு விரைவு, சொகுசு பேருந்துகளில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகளுக்கு ஒதுக்கப்படும். அரசு விரைவு பஸ்களில் மொத்தம் 43 இருக்கைகள் உண்டு. அதில் 25 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதற்கு ஏற்ப பயணிகள் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவார்கள். நோய் அறிகுறி இருப்பவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். குளிர்சாதன வசதியுள்ள பஸ்கள் இயக்கப்பட மாட்டாது.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பயணிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பயணிகள் ஒத்துழைத்தால்தான் அனைவருக்கும் சிறப்பான அரசு விரைவு பேருந்து சேவைகளை வழங்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டண உயர்வு இல்லை

அவர் மேலும் கூறும்போது, அரசு விரைவு, சொகுசு பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவதால் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கே இடம் இல்லை என்றும் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது என்றும் கூறினார்.

தொலைதூர ஆம்னி பஸ்கள் 7-ந்தேதி முதல் இயக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

முன்பதிவு

இதற்கிடையே அரசு விரைவு சொகுசு பேருந்துகளை படிப்படியாக அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். அதற்கு ஏற்ப www.tnstc.in என்ற இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யும் வசதிகள் தொடங்கப்பட உள்ளது.

வருகிற 6-ந்தேதி நள்ளிரவு முதல் பயணம் செய்வதற்காக நாளை (வெள்ளிக்கிழமை) முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.