சேலம் அருகே வீட்டில் தீ விபத்து- 5 பேர் கருகிச் சாவு
1 min read
Home fire near Salem – 5 burnt to death
4-9-2020
சேலம் அருகே மர ஆலை உரிமையாளர் வீட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ பிடித்ததில் 5 பேர் உடல் கருகி இறந்தனர்.
தீ விபத்து
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டி பகுதியில் மர அறுவை ஆலை வைத்திருப்பவர் கார்த்திக். இவர் சொந்த வீடு கட்டி சமீபத்தில் குடியேறினார். அவரது குடும்பத்தினருடன் உறவினர்களும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு திடீரென அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த அறையில் தீ பற்றியது. தீ மளமளவென்று பிடித்ததால் வெப்பம் தாங்காமல் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறின.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். பூட்டிக்கிடக்கும் வீட்டில் தீ எரிந்து கொண்டிருப்பதை பார்த்து போலீஸ் மற்றும் தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.
கருகிச்சாவு
பின்னர் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது அங்கே தூங்கிக் கொண்டிருந்த கார்த்திக், புஷ்பா, மகேஷ்வரி மற்றும் சிறுவர்களான சர்வேஷ், முகேஷ் ஆகியோர் தீயில் கருகி இறந்து கிடந்தனர்.
கார்த்திக்கின் சகோதரர் அன்பழகன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அன்பழகனின் பெற்றோர் மற்றும் மகள் சவுமியா ஆகியோரை லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மின் கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக கூறப்படுகிறது.