பாதுகாப்புடன் மும்பை வந்து சபதத்தை நிறைவேற்றிய நடிகை
1 min read
Actress Kangana Ranaut who came to Mumbai with security and fulfilled her vow
9-9-2020
மும்பைக்குள் வரக்கூடாது என்று சிவசேனா கட்சி மந்திரி கூறியபோது எப்படியும் வருவேன் என்று கூறிய நடிகை கங்கனா ரனாவத் பாகாப்புடன் மும்பை வந்து சபதத்தை நிறைவேற்றினார்.
நடிகை கங்கனா ரனாவத்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், சமீபத்தில் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் (இவர் தமிழில் “தாம் தூம்” என்ற படத்தில் நடித்துள்ளார்.) ” நடிகர் சுஷாந்த் சிங் சாவுக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள சினிமா மாபியாக்களும், போதைப் பொருள் கடத்தல்காரர்களும் தான் காரணம். இவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று கூறியிருந்தார்.
நடிகை கங்கனா ரனாவத் இந்த பேச்சுக்கு மராட்டிய மாநில ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் , ” கங்கனா, இனி மும்பைக்கு வர வேண்டாம்’ என்று எச்சரிக்கும் விதத்தில் கூறினார்.
இதற்கு கங்கனா ரனாவத்தும் கடுமையாக விமர்சித்தார். “மும்பை நகரம், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் உள்ளது. இங்குள்ள ஆட்சியாளர்கள், தலிபான் பயங்கரவாதிகள் போல் உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர்” என்றார்.
நடிகையின் சபதம்
மராட்டிய மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “மும்பை போலீசார், மக்களை பாதுகாப்பதற்காக பல தியாகங்களை செய்துள்ளனர். ஆனால், நடிகை கங்கனா பொறுப்பின்றி பேசுகிறார். இனிமேல், மும்பையில் வசிப்பதற்கு, அவருக்கு தகுதியில்லை. அவர் மும்பைக்கு வர வேண்டாம்.” என்றார்.
மந்திரி அனில் தேஷ்முக் கூறியதற்கு பதில் அளிக்கும் விதத்தில் கங்கனா, “தலிபான் பயங்கரவாதிகள் எந்த மாதிரியான உத்தரவுகளை பிறப்பிப்பரோ, அதேபோன்ற உத்தரவுகளை மராட்டிய மாநில ஆட்சியாளர்கள் பிறப்பிக்கின்றனர். எனக்கு நேரடியாக மிரட்டல்கள் வருகின்றன. இதற்காக பயப்படப்போவது இல்லை. தற்போது நான் இமாச்சல பிரதேசத்தில் வசிக்கிறேன். வருகிற 9-ந் தேதி மும்பைக்கு கண்டிப்பாக வருவேன். முடிந்தால் என்னை தடுத்து நிறுத்துங்கள்.” என்று சபதம் செய்வதுபோல் கூறினார்.
பாதுகாப்பு
இதனிடையே, தொடர்ந்து கங்கனாவுக்கு சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்து வருவதால், அவருக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி நடிகைக்கு ஒரு தனி பாதுகாப்பு அதிகாரி மற்றும் 11 ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.
நடிகை கங்கனா ரனாவத் தனது சபதத்தை நேற்று நிறைவேற்றினார். தனது சொந்த மாநிலமான இமாசலப் பிரதேசத்தில் இருந்து மும்பைக்கு பாதுகாப்புடன் நேற்று வந்தார். அவருடைய சகோதரியும் மேலாளருமான ரங்கோலியும் உடன் வந்துள்ளார்.
விமான நிலையத்தில் கங்கனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சிவசேனா தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. இத்தகைய பாதுகாப்பைப் பெறும் முதல் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் என்பது குறிப்பிடத்தக்கது.