கபசுரக்குடிநீர் பற்றிய ஆய்வில் மகிழ்ச்சியான தகவல்
1 min read
Happy information on the study of capsicum
9-9-2020
இன்றைய தேதியில் 43 லட்சத்தை எட்டி, கொரோனா பாதிப்பில் உலக அளவில் 2-ம் இடத்திற்கு வந்து விட்ட இந்தியாவில் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் அடுத்த இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் 75 சதவீதம் வரை நீக்கப்பட்டு, பொது போக்குவரத்தும் தொடங்கப்பட்டு விட்ட நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தி விட முடியும் என்று அரசு நம்புகிறது.
இதுவரை 4.69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதில், 4.10 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர்.
துணை நிற்கும் பாரம்பரிய மருத்துவம்
கேரளாவில் கொரோனா சிகிச்சையில் நவீன மருத்துவத்துடன் ஆயுர்வேதம் துணை நின்றது போல், தமிழகத்தில் சித்த மருத்துவம் துணை மருத்துவமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அறிகுறிகள் இன்றியும் (Asymptomatic), மிதமான பாதிப்புகளுடனும் வருபவர்களுக்கு நவீன மருத்துவத்துடன் சித்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. சென்னை, சிவகங்கை, திருச்சி போன்ற இடங்களில் கொரோனாவுக்கு சித்த மருத்துவ வார்டுகள் தனியாக அமைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சித்த மருந்துகளில் பிரதானமாக இடம் பெறுவது, கபசுரக்குடிநீராகும். இது கொரோனாவுக்கான மருந்து இல்லை; பொதுவாக பலவகை வைரஸ்களால் ஏற்படும் காய்ச்சல், சளி, சுவாசப்பிரச்சினை போன்றவற்றுக்காக காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து ஆகும். தற்போது கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் இதை ஒத்தே இருப்பதால் கபசுரக்குடிநீரையும் பயன்படுத்தலாம் என்று, மத்திய அரசின் “ஆயுஷ்” அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
அலோபதி-சித்தா ஒருங்கிணைந்த ஆய்வு
தமிழ்நாட்டில் அரசு சித்த மருத்துவக்கல்லூரிகள், சென்னை அண்ணாநகரிலும், நெல்லை பாளையங்கோட்டையிலும் உள்ளன. இவற்றில், பாளை. சித்த மருத்துவக்கல்லூரியில் மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, குணம் அடைந்து திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். தீவிர பாதிப்பு உள்ளவர்களும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவைப்படுபவர்களும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா சிகிச்சையில் கபசுரக்குடிநீர் எந்த அளவு செயலாற்றுகிறது என்பதை அறிய, ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அரசின் அனுமதியுடன், பாளை. அரசு சித்த மருத்துவக்கல்லூரியும், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியும் இணைந்து இவ்வாய்வில் பங்கேற்றன.
கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் வந்து, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 45 பேர் அவர்கள் சுயவிருப்பத்தின்பேரில் இந்த ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 26 பேர் ஆண்கள்;மீதி 19 பேர் பெண்கள். இந்த 45 பேரில் 35 பேர் கொரோனா அறிகுறி எதுவும் தென்படாதவர்கள்; மற்ற 10 பேர் மிதமான அறிகுறிகளோடு வந்தவர்கள்.
(நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உடையவர்களும், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டோரும், கர்ப்பிணிகளும் இந்த ஆய்வில் சேர்க்கப்படவில்லை).
ஆறே நாளில் நெகட்டிவ்
ஆய்வுக்கு தேர்வான 45 பேருக்கும் தினமும் 60 மில்லி கபசுரக்குடிநீரும், அதிமதுர மாத்திரையும் வழங்கப்பட்டன. வேறு அலோபதி மருந்துகள் எதுவும் வழங்கப்படவில்லை.
5 நாட்கள் சித்தமருந்து சாப்பிட்டபின், 6-ம் நாள் இவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 32 பேருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது.
மீதி 13 பேருக்கும் தொடர்ந்து கபசுரக்குடிநீரும், அதிமதுர மாத்திரையும் வழங்கப்பட்டன. அவர்களுக்கு 10-ம் நாள் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆக, வைரஸ் தொற்று நீங்கி, 45 பேருமே குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர்.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி தரப்பில் டீன் ரவிச்சந்திரன், டாக்டர்கள் ரதிதேவி, எழில்ரம்யா, சாந்தாராமன் ஆகியோரும் சித்த மருத்துவக்கல்லூரி தரப்பில் மருத்துவர்கள் கோ. சுபாஷ்சந்திரன், ஜஸ்டஸ் அந்தோணி, விக்டோரியா ஆகியோரும் இந்த ஆய்வை நடத்தி முடித்தனர்.
இந்த ஆய்வின் மூலம் வைரஸ் பரவாமல் தடுத்து, காய்ச்சலைத்தணித்து சளியை வெளியேற்றுவதில் கபசுரக்குடிநீர் சிறந்த பங்காற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி, டாக்டர் சுபாஷ்சந்திரன் குறிப்பிடுகையில், “கபசுரக்குடிநீர், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து, நுரையீரலில் தேங்கும் கபத்தை (சளி) அகற்றி வெளியேற்றுவதன் மூலம் சுவாசத்தடை நீங்கி நிவாரணம் கிடைக்கிறது” என்றார்.
இந்த ஆய்வு இத்துடன் நின்று விடாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதன்மூலம், மனித குலத்தை அச்சுறுத்தும் புதுப்புது நோய்களுக்கு தீர்வு காணமுடியும் என்பதில் ஐயமில்லை.
15 மூலிகைகளின் கலவை
கபசுரக்குடிநீர் என்பது 15 வகை மூலிகைகளின் கலவையாகும். அந்த 15 மூலிகைகள் வருமாறு:-
சுக்கு, திப்பிலி, இலவங்கம், சிறுகாஞ்சொறி வேர், அக்கிரகார வேர், முள்ளி வேர், கடுக்காய்த் தோல், ஆடாதொடை இலை, கற்பூரவள்ளிஇலை, கோஷ்டம், சீந்தில் தண்டு, சிறு தேக்கு, நிலவேம்பு சமூலம், வட்டத்திருப்பிவேர், கோரைக்கிழங்கு.
இவற்றை சம அளவு சேர்த்து கபசுரக்குடிநீர் தயாரிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா பீதி காரணமாக சிலர் கையில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு தயாரித்து கபசுரக்குடிநீர் என்ற பெயரில் விற்க ஆரம்பித்து விட்டனர். மக்கள் அதை நம்பக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட கபசுரக்குடிநீரை மட்டும் சித்தமருத்துவர்கள் பரிந்துரையின்பேரில் வாங்கி அளவாகப் பயன்படுத்துவதே நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
–மணிராஜ்,
திருநெல்வேலி.