திருச்செந்தூர் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் நர்ஸ் கொலை- அத்தை மகன் கைது
1 min read
Nurse murdered for refusing to give girl near Thiruchendur- Aunty’s son arrested
9-9-2020
திருச்செந்தூர் அருகே பெண் கொடுக்க மறுத்ததால் நர்சை குத்திக் கொன்ற அவரது அத்தை மகனை போலீசார் கைது செய்தனர்.
உறவினர்கள் முன்விரோதம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே
ஆத்தூரை அடுத்த முக்காணி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆறுமுகம். இவா்களது மகள்கள் பிரியா (வயது27), கனகா (25). இவர்களில் கனகா நா்சிங் படித்துள்ளாா். இவர் தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்ல வில்லை.
முருகேசனின் அக்காள் லட்சுமி மீனா. அதே பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் தங்கராஜ். இவர் திருச்செந்தூரில் தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் மாரியப்பன்(27)
முருகேசன் குடும்பத்திற்கும் தங்கராஜ் குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்தது. இடத் தகராறு தொடா்பாக அவர்களுக்குள் கோர்ட்டில் வழக்கு இருந்தது. இந்த வழக்கை முருகேசனின் மகள்கள் பிரியாவும் கனகாவும் முன்னின்று கவனித்தனர். இதில் முருகேசனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
பெண் கொடுக்க மறுப்பு
இதற்கிடையே தங்கராஜ் தன் மகனுக்கு முருகேசனிடம் பெண் கேட்டார். ஆனால் பெண் கொடுக்க முருகேசன் மறுத்துவிட்டார். இதனால் இரு குடும்பத்துக்கும் விரோதம் வலுத்தது.
இந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலையில் முருகேசன் வீட்டுக்கு மாரியப்பன் சென்றார். அவர் கதவை தட்டியதும் பால்காரர் வந்திருப்பதாக நினைத்து கனகா பாத்திரத்துடன் கதவை திறந்தார்.
குத்திக் கொலை
அப்போது மாரியப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகாவை சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது அக்காள் பிரயா ஓடிவந்தார். அவரையும் குத்திவிட்டு மாரியப்பன் ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த கனகாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கத்தியில் ரத்த காயத்துடன் இருந்த பிரியா ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆத்தூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாா், திருச்செந்தூா் துணை சூப்பிரண்டு பாரத் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு மாரியப்பன் மற்றும் கொலைக்கு தூண்டுகோலாக இருந்த அவரது தந்தையை கைது செய்யதனர்.
இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
ஆசிட் வீச முயற்சி
தற்போது கைது செய்யப்பட்ட மாரியப்பன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகா மீது ஆசிட் வீச முயற்சி செய்துள்ளார் என்ற தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.