டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டு சிறை; சட்டம் நிறைவேறியது
1 min read5 years imprisonment for assaulting doctors; The law was passed
19-9-2020
டாக்டர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்க வழி வகுக்கும் சட்ட திருத்த மசோதா பாராளுமன்றம் மேல் சபையில் நிறைவேற்றபட்டது.
மசோதா
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது. நேற்று பாராளுமன்ற மேல் சபையில் (ராஜ்யசபா) ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020 மற்றும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
இதனையடுத்து இன்று( சனிக்கிழமை) தொற்று நோய் சட்டத்திருத்த மசோதா 2020ஐ, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து பாரதீய ஜனதா, காங்கிரஸ் உள்பட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மசோதா குறித்து பேசினர். அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஆதரவுடன் தொற்றுநோய் சட்டத்திருத்த மசோதா 2020 நிறைவேற்றப்பட்டது.
5 ஆண்டு சிறை
இந்த மசோதாவின் படி டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின் மூலம் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் கைதானால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாமல் 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் ரூ 50 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தொற்றுநோய் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின் மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் பேசும்போது, “கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரப்பட்ட பின் டாக்டர்கள் செவிலியர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அடியோடு குறைந்திருக்கிறது. தற்போது இந்த சட்ட திருத்தம் மூலம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யப்பட்டு உள்ளது.” என்றார்.