April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

திருவண்ணாலையில் நாளை மகாதீபம்

1 min read

Mahadeepam tomorrow in Thiruvannamalai

28/11/2020

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கோவில்களில் கட்டுப்பாட்டுடன் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் கந்தசஷ்டியையொட்டி திருச்செந்தூரில் பக்தர்களை அனுமதிக்காமல் சூரசம்ஹாரம் நடந்தது.
அதேபோல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் கட்டுப்பாட்டுடன் கார்த்திகை தீப திருவிழா நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கார்திகை தீபத்தன்று இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நாளை ( ஞாயிற்றக்கிழமை) நடக்கிறது. மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இதனை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடைதிறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்படும்.

அர்த்தநாரீசுவரர்

இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். அதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணியளவில் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை முழுவதும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இன்று முதல் மகா தீபம் காண திருவண்ணாமலை நகருக்கு வெளியூரில் இருந்து வரும் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண பக்தர்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கார்த்திகை மாதத்துக்கான பவுர்ணமி நாளை மதியம் 1.17 மணிக்கு தொடங்கி மறுநாள் (திங்கட்கிழமை) மதியம் 2.23 மணிக்கு நிறைவு பெறுகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து 30-ந் தேதி (நாளை மறுநாள்) சந்திரசேகரர் தெப்ப உற்சவமும், 1-ந் தேதி பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், 2-ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறும்.
வழக்கமாக தெப்ப உற்சவ நிகழ்ச்சிகள் அய்யங்குளத்தில் நடைபெறும். இந்த ஆண்டு கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.