April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை-பாளை. இணைப்புப்பாலம் தந்த “தனிமனித கொடையாளர்”சுலோசன முதலியார்

1 min read

Sulosana Mudaliar who built the bridge at Nellai

நெல்லையின் அடையாளமான “சுலோசன முதலியார் பாலம்” 178-வது பிறந்தநாளை கொண்டாடியது

திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே, தனி மனிதகொடையால் உருவான சுலோசன முதலியார் பாலத்தின் 178-வது ஆண்டை முன்னிட்டு, “சிறப்பு விழா” நடைபெற்றது.

மக்கள் நலனுக்காக தன் சொந்த பணத்திலேயே பாலம் கட்ட உதவிய மாமனிதர் வாழ்ந்த நகரில் வாழ்கிறோம் என்ற பெருமையுடன் இந்தப் பதிவு வெளியிடப்படுகிறது.

இன்று மாநகராட்சியாக விரிந்து பரந்து இருக்கும் திருநெல்வேலியின் இணைநகராக இருந்தது, பளையங்கோட்டை.
இரட்டை நகரங்களான இவற்றை, புவியியல் ரீதியில் பிரிப்பது, 800 அடி அகலத்தில் ஓடும் தாமிரபரணிஆறு.

படகு குழாமில் மோதல்-கொலைகள்

இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஏப்ரல், மே மாதங்கள் தவிர, ஆண்டுமுழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும் தாமிரபரணி ஆற்றைக் கடந்திட படகில் தான் பயணம் செய்ய வேண்டும்
படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும். குடும்பமாக, குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது

படகில் இடம் பிடித்திட முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாக இருந்தது.
இரவு நேரம், சமூகவிரோதிகளின் அட்டகாசங்கள் அரங்கேறும்.
களவும், கலகமும், குழப்பமும் பழகிவிட்ட நடைமுறையாக இருந்து வந்தன.

1840-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ம் நாள் இரவு: ஜில்லா கலெக்டராக ஆங்கிலேயரான தாம்சன் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆகியிருந்தன.
தாமிரபரணிப் படகுத் துறையில் போக்குவரத்து குழப்பம் கலகத்தில் முடிந்து, நாலைந்து கொலைகள் அரங்கேறின. சேதி அறிந்த கலெக்டர் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்…
“நெல்லை-பாளை நகரங்களை இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தால் இந்தக் கொலைகள் நடந்திருக்காது அல்லவா” என சிந்தித்துக் கொண்டே உறங்கி விட்டார்.
அடுத்த சில நாட்களில், கேப்டன் பேபர் டபிள்யூ. எச். ஹார்ஸ்லி, தாசில்தார் பதவிக்குச் சமமான சிரஸ்தார் பதவி வகித்த சுலோசனா முதலியார் உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் அழைக்கப்பட்டு ஆலோசனைகள் தொடங்கினார், கலெக்டர். அந்த ஆலோசனையில், நெல்லை-பாளையங்கோட்டை இடையே தாமிரபரணி ஆற்றைக் கடக்க ஒரு பாலம் கட்ட தீர்மானிக்கப்பட்டது
இதற்கான பொறுப்பு, கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுகள், அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள் என பாலத்திற்கான வரைபடம் தயாரானது. தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டின.

பாலத்தின் பக்கவாட்டுத் தோற்றம், லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் காட்சி தந்தது.
திட்ட மதிப்பீடு அரை லட்சம்.
(இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டி விடும்). அவ்வளவு தொகையை எப்படி ஒதுக்குவது என மலைத்த போதிலும், மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளித்தார்.

முதலியார் பற்றிய பிளாஷ்பேக்

அடுத்து, பணத்திற்கு எங்கே போவது என்ற ஆலோசனைகள் தொடங்கின. மக்களிடமே வசூல் செய்வது என முடிவானது.

அப்போது, கலெக்டரின் பார்வை, அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் திரும்பியது. அந்தப் பார்வையின் அர்த்தம் முதலியாருக்குப் புரிந்தது.
ஏன்? அதற்கு முன் சுலோசன முதலியாரைப்பற்றி, ஒரு பிளாஷ்பேக்…

திருமணம்…இது தொண்டை மண்டலத்தில் (செங்கல்பட்டு) உள்ள ஒரு சிற்றூர். அங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள் தான் முதலியாரின் மூதாதையர். அவர்கள் வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம்…
தங்க, வெள்ளி நாணயங்களை சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம்… கவுரவத்திற்காகவே கலெக்டர் ஆபீஸ் உத்தியோகம் பார்த்தார், சுலோசன முதலியார்.
குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர்… நீளமான கருப்புக் கோட்டு, ஜரிகைத் தலைப்பா, அங்கவஸ்திரம், வைரக் கடுக்கன் ஆகியவற்றோடு அலுவலகத்திற்கு அவர் வருவதே கம்பீரமாக இருக்குமாம்…

மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவது, அவருக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.
நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொன்னார்.
மனைவி வடிவாம்பாள்,”கவலைப்படாதீர்கள், தூங்குங்கள்; காலையில் பார்த்துக் கொள்ளலாம்” என ஆறுதலாக பதில் அளித்தார். விடிந்ததும், வடிவாம்பாள் செய்த காரியம், சுலோசன முதலியாரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
அந்த மகிழ்வோடு அலுவலகம் சென்ற அவர், கலெக்டரிடம், “பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். கலெக்டருக்குத் திகைப்பு.
அந்த திகைப்பினூடே, வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் அச்சாரக் காணிக்கை என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுத்தார், சுலோசன முதலியார்.
கலெக்டருக்கு இன்ப அதிர்ச்சி. திக்கு முக்காடிப் போன அவர், மரபுகளை உடைத்து எறிந்து, முதலியாரை, அப்படியே கட்டித்தழுவிய நிலையில் பேச வார்த்தையின்றித் தவித்தார்.

தனிமனித கொடையாளர்
கோவில்கள் கட்ட அரசர்கள் அள்ளிக் கொடுத்ததை மிஞ்சும் வகையில், பொது நன்மைக்காக தனியொரு மனிதராக சுலோசன முதலியார் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தை மட்டுமின்றி, அன்றைய மதராஸ் மாகாணத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது.

கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்பட்டார். பாலம் சீறும் சிறப்புமாக கட்டிமுடிக்கப் பட்டது. வேலை முடியும் போது மொத்த செலவு ரூ.55 ஆயிரமாக உயர்ந்து இருந்தது. அனைத்தும் முதலியாரின் செலவே.

“சுலோசனா முதலியார் பாலம்” என்று பெயரிடப்பட்டு, 1842-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி அது திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழாவில் சுலோசன முதலியார் கம்பீரமாக முன் நடக்க, கலெக்டர் உட்பட மற்றவர்கள் பின் நடந்து சென்றது, வரலாறு.
(1850 ஆண்டு காலகட்டத்தில் நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பில் இவ்வரலாறு பதிவாகியுள்ளது).

தாமிரபரணியில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும், தாங்கும் வகையில் படகின் முன் விளிம்பு போல் பாலத்தின் தூண்கள் அமைக்கப்பட்டு இருப்பது தனிச்சிறப்பு.

“ஹேப்பி பெர்த்டே”

திருநெல்வேலியின் அடையாளமாக, பெருமையாக விளங்கும் சுலோசன முதலியார் பாலத்தின் 178-ம் ஆண்டு பிறந்த தினக்கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. பாலத்தின் கொக்கிரகுளம் முனையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, “சுலோசன முதலியார் பாலத்தின் புகழ் போற்றும் நலக்குழு”வின் ஒருங்கிணைப்பாளர் கோ. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். வழக்கறிஞர் வி.டி. திருமலையப்பன், எழுத்தாளர் நாறும்பூநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநகர காவல் உதவி ஆணையர் (மனித உரிமை சமூக நீதி) எஸ்.சேகர் மாலை அணிவித்து சிறப்பு செய்தார். சுலோசன முதலியார் பாலத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. தனிமனித கொடையாளி சுலோசன முதலியாரின் பெருமைகள் பறை சாட்டப்பட்டன. கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி, சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் முத்துசாமி, மதிதா இந்து கல்லூரி முன்னாள் முதல்வர் நமச்சிவாயம், இந்நாள் முதல்வர் சுப்பிரமணியன், வங்கி மேலாளர் வெற்றிவேல், ரோட்டரி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று நெல்லையின் மக்கள் தொகை பன்மடங்கு பெருகி விட்டதால், போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சுலோசன முதலியார் பாலத்தையொட்டி, புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனினும், சிக்னல், ரவுண்டானா போன்றவை அமைக்கப்படாததால், இன்னும் அது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படவில்லை. அது திறக்கப்பட்டதும், இரு பாலங்களும் ஒருவழிப்பாலங்களாக செயல்படும்.

—திருநெல்வேலியில் இருந்து
மணிராஜ்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.