நடிகை சித்ரா 3 பேரை காதலித்தார்; – ஹேம்நாத் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு
1 min read
Actress Chitra fell in love with 3 people; – Hemnath’s father charged with sedition
20/12/2020
சித்ரா 3 பேரை காதலித்தார் என்று கைது செய்யப்பட்டுள்ள ஹேம்நாத்தின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
சித்ரா தற்கொலை
டெலிவிஷன் நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சித்ரா மரணம் தொடர்பாக ஆர். டி.ஓ. விசாரணையும் நடைபெற்று வருகிறது.
சித்ரா மற்றும் ஹேம்நாத்தின் பெற்றோரிடமும் சிறையில் இருக்கும் ஹேம்நாத்திடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.
3 பேரை காதலித்தார்
இந்தநிலையில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நேற்று(சனிக்கிழமை) புகார் அளித்தார். அதில், சித்ரா ஏற்கனவே 3 பேரை காதலித்ததாகவும், அதில் ஒருவருடன் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
டெலிவிஷன் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ராவுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை வைத்து மிரட்டியதாகவும், அரசியல்வாதி ஒருவர் தொடர்ந்து பேசி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சித்ராவை மிரட்டிய நபர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
சித்ரா தந்தை கூறிய இந்த தகவல்கள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய 3-வது நபர் யார்? என்பது பலத்த கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. அவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்த நசரத்பேட்டை போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசியல்வாதி
அரசியல்வாதி ஒருவர் சித்ராவின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியதாகவும், புத்தாண்டை தன்னுடன் தான் கொண்டாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாகவும் போலீஸ் விசாரணை நடை பெற்று வருகிறது. நிகழ்ச்சி தொகுப்பாளர் பற்றியும் விசாரணை நடக்கிறது. இதன் முடிவில் இவர்கள் இருவரில் தற்கொலைக்கு தூண்டியது யார்? என்பது தெரிய வந்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டவுடன் அவரது மரணம் தொடர்பான பரபரப்பு அடங்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹேம்நாத்தின் தந்தை எழுப்பியுள்ள சந்தேகங்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.