சனி பெயர்ச்சி பலன்கள் -கும்பம்
1 min read
Saniperchi palangal -Kumbam- kaliyur Narayanan
25-12-2020
சனிபகவானை ஆட்சி நாயகனாக கொண்ட நீங்கள் விருப்பு&வெறுப்பு இன்றி எல்லோரிடமும் நடந்து கொள்வீர்கள். இனம்தெரியாதவர்கள் தப்பு செய்தால் தட்டிக் கேட்கும் திறனுள்ள நீங்கள் வேண்டியவர்கள் தப்பு செய்தாலும் அதை கண்டிக்க தவறமாட்டீர்கள். இந்த ராசியினர் நட்புக்கு முதலிடம் கொடுப்பார்கள். நட்புக்கு மரியாதை கொடுப்பதால் நிறைய நண்பர்களை பெற்றிருப்பீர்கள். இந்த ராசியை பெற்ற ஆண்கள் நிறைய பெண்கள் விரும்பும் நிலையில் இருப்பர். கொஞ்சம் தற்பெருமை உண்டு. தன்னைத்தானே அடிக்கடி புகழ்ந்து கொள்வர். பொதுவாக இந்த ராசியினர் சமுதாயத்தில் மதிப்புக்கு உரியவராகத்தான் இருப்பார்கள்.
இதுவரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான தனுசுவில் இருந்தார். அங்கு உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளை தந்திருப்பார். உங்களின் பொருளாதார நிலையை உயர்த்தி இருப்பார். எண்ணியதை சிறப்பாக செய்து முடிக்கும் வகையில் உங்கள் ஆற்றலை மேம்படுத்தி இருப்பார். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும் எதிரிகள் இல்லாதிருக்கும் நிலையை உருவாக்கி இருப்பார். உங்கள் தேவைக்கு ஏற்ப பொன்னும், பொருளும் கிடைத்திருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி &யும், ஆனந்தமும் நிலவி இருக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருந்திருப்பர். இப்படி சாதக பலனைஅள்ளித்தந்த சனி தன் பார்வையால் எதையும் செய்திருக்க மாட்டார். ஆனால் மறைமுகமாக அள்ளித் தருவதைவிட நேரடியாக தருவது தானே சிறப்பு. ஒருவேளை இந்த ராசியில் மிக சாதகமான பலனை கண்டிருக்கவில்லை என்றால் அவர்கள் ஜாதக கிரகநிலையின் அடிப்படையிலோ, தசாபுத்தி அடிப்படையிலோ கிடைக்காமல் இருந்து இருக்கலாம்.
இப்படி சாதகமான நிலையில் இருந்த சனி பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 12-ம் இடமான மகரத்திற்கு மாறியுள்ளார். இது சாதகமான இடம் என்று சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால் இது ஏழரை சனியின் தொடக்க காலம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். அதற்கான காரணத்தை நீங்கள் பின்னே புரிந்து கொள்வீர்கள். சனிபகவான் 12-ம் இடத்தில் இருக்கும் போது பொதுவாக பொருளாதார இழப்பை தரலாம். எதிரிகளில் இடையூறுகள் அவ்வப்போது தலை தூக்கலாம். அலைச்சல் அதிகரிக்கும். சிலர் வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டியது வரலாம்.
சனிபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து நற்பலனை தர இயலாதவராக இருந்தாலும் தன்னுடைய பார்வையால் நன்மைகளை அள்ளி தருவார். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். இதில் ஏழாம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அந்தப் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாம் இடமான கடகத்தில் விழுகிறது. இதனால் உங்கள் முயற்சிகளில் வெற்றியை பெறலாம். அதாவது சிற்சில தடைகள் வந்தாலும் இறுதியில் அவர் தனது பார்வையால் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியைத் தருவார். மேலும் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை அந்தப்பார்வை தரும். உங்கள் ஆற்றலை மேம்படுத்துவார். இப்படி பார்வையால் பல நன்மைகளை தரும் போது ஏழரை சனி காலம் என்று ஏன் கவலை கொள்ள வேண்டும்.
அதோடு கோச்சார பலனை கணக்கிடும்போது மற்ற முக்கிய கிரகங்களின் பலனையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் சனி மகர ராசியில் இருக்கும் காலக்கட்டத்தில் குரு இரு முறையும் ராகு-கேது ஒரு முறையும் இடம் பெயருகிறார்கள். அவர்களும் அவ்வப்போது நன்மை தருவார்கள்.