யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக அமைச்சர் டி.கே. பிரபு மானநஷ்டஈடு வழக்கு
1 min read
Minister T.K. Prabhu files defamation suit against YouTuber Maridhas.
21.9.2026
தனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பி வரும் யூடியூபர் மாரிதாஸுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்டஈடு கோரி அமைச்சர் டி.கே. பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
காரைக்குடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தவெகவைச் சேர்ந்த பல் மருத்துவரான டி.கே. பிரபு, தமிழ்நாடு அமைச்சரவையில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.
இவர், தனக்கு எதிராக யூடியூபர் மாரிதாஸ் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் வகையில், பொய்யான ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். எனவே, அவருக்கு எதிராக ரூ. 1 கோடி மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தன்னை குறிவைத்து பொய்யான, உள்நோக்கம் கொண்ட மற்றும் அவதூறான கருத்துகளை மாரிதாஸ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மாரிதாஸ் வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவை தனது நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மாரிதாஸ் மட்டுமின்றி, அமெரிக்காவைச் சேர்ந்த X Corporation, Google LLC மற்றும் YouTube Indiaஆகிய நிறுவனங்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் பதிவுகள் மற்றும் அவற்றின் மூலம் ஏற்பட்டதாக கூறப்படும் பாதிப்புகள் தொடர்பாக இந்த நிறுவனங்களும் வழக்கில் இடம்பெற்றுள்ளன.