September 21, 2026

Seithi Saral

Tamil News Channel

மீனவர்களின் இடத்தில் தலைமைச் செயலகமா? மு.க.ஸ்டாலின் கேள்வி

1 min read

Secretariat at the fishermen’s site? M.K. Stalin questions

21.9.2026
ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக் கோரி, மீனவச் சங்கத்தினர் இன்று என்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தனர். இதற்கு எதிராக மீனவ மக்கள் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவைத் தருவதோடு, தனது முடிவில் இருந்து த.வெ.க. அரசு பின்வாங்கும் வரை மீனவச் சகோதரர்களுடன் உறுதியாகத் துணைநிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம் கட்ட எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே, தலைமைச் செயலகப் பயன்பாட்டுக்கெனத் தலைவர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகமும் இருக்கிறது. வேண்டுமென்றால், அங்கே செயல்பட்டு வரும் மருத்துவமனையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு, மீண்டும் அதைத் தலைமைச் செயலகமாகப் பயன்படுத்தலாம். ஆனால், கடற்கரையைப் பார்த்தபடி முதலமைச்சரின் அலுவலகம் அமைய வேண்டும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதாலேயே முதல்-அமைச்சர் பட்டினப்பாக்கத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

ஒருவரின் ஆசைக்காக ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், தமிழ்நாடு அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தைச் சுற்றி ஏராளமான பள்ளிகள் அமைந்துள்ளன. இது கடுமையான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாகும். இங்கு தலைமைச் செயலகம் அமைந்தால் மாணவர்களும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்.

மேலும், பட்டினப்பாக்கத்தில் புதிதாகத் தலைமைச் செயலகம் கட்டவுள்ள பகுதிக்குத் தெற்கில் முள்ளிக்குப்பம், சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்கள் உள்ளன. வடக்குப் பகுதியில் ராஜீவ் காந்தி நகர், பவானி குப்பம், இருதயபுரம், செல்வராஜ்புரம், டூமில் குப்பம், நொச்சி நகர், நொச்சிக்குப்பம் என மொத்தம் 12 குடியிருப்புப் பகுதிகள் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டருக்குள்ளாகவே உள்ளன. முள்ளிக்குப்பம் பஞ்சாயத்து மற்றும் மீனவ மக்கள் அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்துக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

இந்த ஆட்சி அமைய ஆதரவு தந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமையாது என நினைத்தோம். ஆனால், அவர்களது எதிர்ப்பினையும் போராட்டங்களையும் மீறித் த.வெ.க. அரசு இதில் விடாப்பிடியாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தி.மு.க.வும் இந்தப் போராட்டத்தில் வீரியத்துடன் இணைய வேண்டிய சூழலை ஆளும் த.வெ.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த திராவிட மாடல் ஆட்சியில், பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி வாழும் மீனவ மக்களுக்கெனப் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தந்தோம். சீனிவாசபுரம் பகுதியில் உள்ள 1,356 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் சிதிலமடைந்து உள்ளதோடு, இப்பகுதியில் ஆயிரம் குடிசைகளும் இருக்கின்றன. கடல்சீற்றத்தால் இவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குப் புதிய குடியிருப்புகளைக் கட்டித் தருவதற்கு முந்தைய கழக ஆட்சியில் பரிசீலனையில் இருந்த இடத்தில்தான் தற்போது 1,200 கோடி ரூபாயில் தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

ஆனால், அரசாணையையே மறைத்துவிட்டு, “விரிவான திட்ட அறிக்கை மட்டுமே கோரியிருக்கிறோம், இதில் முதலமைச்சர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை” எனத் த.வெ.க. அமைச்சர்கள் தேர்தல் கூட்டங்களில் பேசுவது மக்களை ஏமாற்றும் மோசடிச் செயலாகும். அரசாணை வெளியிட்ட பின்னர் முடிவெடுக்கவில்லை எனச் சொல்லும் அளவுக்குத்தான் இவர்களின் நிர்வாக அறிவு இருக்கிறதா? அல்லது, வாக்களித்த மக்களும் எதிர்க்கட்சிகளும் இவர்கள் எந்தப் பொய்யைச் சொன்னாலும் நம்புவார்கள் என நினைக்கிறார்களா?

மீனவர்களின் அழுகுரலுக்குத் த.வெ.க. அரசு செவிமடுத்து உடனடியாகத் தனது அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைக் கைவிடுவதாக முதலமைச்சர் அவர்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்பகுதியில் மீனவர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்.

அராஜகப் போக்குடனும் ஆணவ எண்ணத்துடனும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் பணிகளைத் தொடர்ந்தால், மீனவர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகம் மிகப் பெரிய போராட்டத்தினை முன்னெடுக்கும் என மீனவர் விரோத த.வெ.க. அரசினை எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *