April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

போலீஸ் நிலையத்திலேயே திருடிய பெண் போலீஸ், கணவருடன் கைது

1 min read

Police woman, who stole at the police station, was arrested by police, along with her husband

31.12.2020

கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் திருடிய பெண் போலீஸ் -கணவருடன் கைது செய்யப்பட்டார். அவர்கள் திருடிய 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் நிலையம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்களை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்து இருந்தனர். அப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்து, வைத்திருந்த செல்போன் உள்பட சில பொருட்கள் திருட்டு போனதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் துணை சூப்பிரண்டு சமய்சிங் மீனா மேற்பார்வையில், கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீஸ் நிலையத்திலேயே திருடப்பட்டு இருந்ததால் இதுபற்றி அங்கு பணியாற்றும் போலீசாரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட சில நாட்கள் குறிப்பிட்ட சில மணி நேரம் அந்த கண்காணிப்பு கேமரான ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் அங்கு பணியாற்றும் போலீசாரையை தனித்தனியாக அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றும் கிரேசியா (வயது 29) என்ற பெண் இந்த கைவரியையை காட்டி இருப்பது தெரியவந்தது-. அவர் இரவு பணியில் இருந்தபோது, தன்னுடைய கணவர் அன்புமணி உதவியுடன் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலீஸ நிலையத்தில் இருந்த செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றை திருடியது தெரிய வந்தது.

கைது

இதையடுத்து பெண் போலீஸ் கிரேசியா, அவருடைய கணவர் அன்புமணி ஆகிய 2 பேர் மீது கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், செல்போன், வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

திருட்டு வழக்கில் கணவருடன் கைதான பெண் போலீஸ் கிரேசியா, 2-ம் நிலை காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஈத்தான்விளை ஆகும். கைதான அன்புமணி மீதும் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.