May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் கொட்டித்தீர்த்த “ஜனவரி மாத சாதனை மழை”–100 ஆண்டுகளில் இதுபோல் பொழிந்ததில்லை

1 min read

“January record rain” poured in Chennai – never rained like this in 100 years

5/1/2021

 தமிழ்நாட்டில் குளிர் (பனி)கால மழை (ஜனவரி,பிப்ரவரி),கோடை கால மழை (மார்ச் முதல் மே வரை),தென்மேற்குப்பருவ மழை (ஜூன் முதல் செப்டம்பர் வரை), வடகிழக்குப்பருவ மழை (அக்டோபர் முதல் டிசம்பர் வரை) என மழைக்காலம் கணக்கிடப்படுகிறது. அதன்படி வடகிழக்குப்பருவ மழை கடந்த டிசம்பர் 31-ந்தேதிபெய்த நல்ல மழையுடன் முடிந்து விட்டது.

ஆயினும் இந்த ஆண்டு (2021) பிறந்த பிறகும் மழை தொடரும் என்றும், அதை வடகிழக்குப்பருவ மழையின்தொடர்ச்சியாக கணக்கிடுவதற்குப் பதில் குளிர்கால மழையாக கருதலாம் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

அதன்படி வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஜனவரியில் நல்ல மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்த நிலையில், சென்னையில் மட்டும் லேசான தூறலுடன் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில், நேற்று (ஜன 4) நள்ளிரவு சென்னையில் தொடங்கிய மழை, இன்று (ஜன 5) மாலையிலும் நீடித்தது

.கிண்டி, கோயம்பேடு, வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், பெரம்பூர், அண்ணாநகர், அம்பத்தூர், திருவான்மியூர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.
மழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர். வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக சென்னையில் மழை பெய்வதாகவும், அடுத்த 24 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்ஜான் குறிப்பிடுகையில், “நாம் ஏற்கனவே கணித்திருந்தபடியே ஜனவரியில் நல்ல மழைபெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் ஜனவரி மாதத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கிடையாது. புயல் கிடையாது. ஆயினும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழைபொழிந்துள்ளது” என்றார்.

மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியைத் தாண்டிவிட்டதால், ஏரியில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 15 மணிநேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:-

தரமணி 170 மிமீ, மீனம்பாக்கம் 149, நுங்கம்பாக்கம் 140, அண்ணா பல்கலைக்கழகம் 132, கேளம்பாக்கம் 128, வில்லிவாக்கம் 110,மேற்குத் தாம்பரம் 109, எண்ணூர் 67.

சென்னையில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முந்திய சாதனை  மழைஅளவு வருமாறு:-

05-01-1903: 82.8 மி.மீ.

15-01-1915: 212.9 மி.மீ

2-01-1920: 99.8 மி.மீ.

கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப்பிறகு ஜனவரியில் பெய்யும் சாதனை மழை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

—மணிராஜ்,

திருநெல்வேலி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.