அ.தி.மு.க. கொடி பயன்படுத்திய சசிகலா மீது அமைச்சர்கள் போலீசில் புகார்
1 min readMinisters complain to police over Sasikala using ADMK flag
4.2.2021
சசிகலா, காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக சார்பில் அமைச்சர்கள் போலீசில் புகார் செய்தனர்.
சசிகலா
ஊழல் குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கடந்த 27ந் விடுதலையானார். ஜெயிலில் இருக்கும்போது அவருக்கு கொரோனா தென்பட்டதால், பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. பின்னர், கடந்த 31ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன சசிகலா, மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடியுடன் கூடிய காரில் புறப்பட்டார். இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
சகிகலாவின் தமிழக வருகை 7ந் தேதி என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 8ந் தேதி வருவார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தியதற்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் டிஜிபி அலுவலகத்தில் புகாரளித்தனர். அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் மூத்த நிர்வாகிகள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் புகார் மனு கொடுத்தனர். அந்த புகாரில், அதிமுக கொடியை சசிகலா இனி பயன்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் பேட்டி
பின்னர் அமைச்சர்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிமுக தொண்டர்கள், தலைவர்களை தவிர மாற்றுக்கட்சியில் இருப்பவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை. அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்திற்கு தினகரன் சொந்தம் கொண்டாடினார்.
2017ல் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் பன்னீர்செல்வம் தலைமையிலானது தான் அதிமுக என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மனுவை டெல்லி சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர், சசிகலா தரப்பில் இருந்த தினகரன் எங்களுக்கும் அதிமுக.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனக்கூறி அமமுக கட்சியை தொடங்கினார். இதனால் அவர்கள் அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதியில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.