இந்தியாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி
1 min readOverseas demand for corona vaccine made in India
6.2.2021
இந்தியாவில் தயாராத்த கொரோனா தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசியை பெற 25 நாடுகள் வரிசையில் நிற்கின்றன.
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆந்திரா வந்துள்ளார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
இந்தியாவில் தயாரான அதாவது “மேட் இன் இந்தியா” கொரோனா தடுப்பூசிகளை நாம் வெளிநாடுகளுக்கும் அனுப்புகிறோம். இதுவரை நாம், 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தடுப்பூசியை வாங்க 25 நாடுகள் வரிசையில் உள்ளன. இதற்காக நம் நாடு செய்துள்ள பணி உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் இருந்து தடுப்பூசி பெற 3 வகை நாடுகள் ஆர்வமாக உள்ளன. ஏழை நாடுகள், அதற்கான விலையை பற்றி அறிந்துள்ள நாடுகள் மற்றும் மாற்று மருந்துகளை உருவாக்கும் மருந்து நிறுவனங்களுடன் நேரடியாக கையாளும் பிற நாடுகள். சில ஏழை நாடுகளுக்கு மானிய விலையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. சில நாடுகள் தடுப்பூசி நிறுவனங்களுக்கு இந்திய அரசு செலுத்தும் விலைக்கு இணையாக அதை பெற விரும்புகின்றன.
சில நாடுகள் இந்திய தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதற்காக அந்நாடுகள் வணிக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இவ்வாறு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.