“தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சி தரமுடியாது”; மோடி பேச்சு
1 min read“DMK-Congress alliance cannot bring good governance to Tamil Nadu”; Modi’s speech
25.2.2021
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது என்று கோவையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி கோவை கொடிசியாவில் பாரதீய ஜனதாவின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அவர் பேசும்போது, வெற்றிவேல், வீரவேல் என தமிழில் கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் கூறியதாவது:-
தமிழர்களால் கொண்டாடப்படும் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை ஆகும்.பொறியியல், மருத்துவக் கல்வி ஆகியவற்றை தாய்மொழியில் பயில நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
புதிய ஆட்சி
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த ஆண்டு தமிழக மக்கள் புதிய ஆட்சியை தேர்ந்தெடுக்க உள்ளனர். நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசை மக்கள் விரும்புகின்றனர். தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் மூலம், புதிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
கோவையில் மட்டும் 25 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டத்தால் பயன்பெற்றுள்ளன. புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் முன்னேற வேண்டும். ஜவுளித்துறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 7 புதிய ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன். 11 கோடி விவசாயிகள் மத்திய அரசின் திட்டத்தால் பயன் பெற்று வருகின்றனர். சிறு-குறு தொழில் நிறுவனங்களுடன் நான் இருக்கிறேன்.வளர்ச்சிக்கு எதிரானவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று இந்திய மக்கள் விரும்புகின்றனர்.
நாட்டு மக்கள் வளர்ச்சியை அளிக்கும் அரசியலை விரும்புகின்றனர் என்பது கடந்த தேர்தலில் தெரிந்தது.கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு ஆதரவாக தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுகிறது. உள்ளூர் மொழிகளில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் பயில நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழி உலகிலேயே மிகவும் தொன்மை வாய்ந்த மொழி.
ஊழல் ஆட்சி
திமுக தனது தொன்மையை இழந்துவிட்டது. ஊழல் செய்வதற்காக தனது மூளையை திமுக பயன்படுத்துகிறது. திமுக-&காங்கிரஸ் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு தொல்லைகள் ஏற்படுகின்றன. எதிர்க்கட்சிகளுக்கு சுயலாபம் ஒன்றுதான் இலக்கு. திமுக, காங்கிரஸ் கூட்டணியால் தமிழகத்துக்கு நல்லாட்சியை தர முடியாது. சட்டை பையை நிரப்பி கொள்ளவே, திமுக – காங். ஆட்சியை பிடிக்க நினைக்கிறது.
ஒரு பெண் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதா.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி என்பது கருணை மிகுந்த ஆட்சியாகும். ஆனால், எதிர்க்கட்சிகள் கருணையற்ற ஆட்சியை நடத்தவே விரும்புகின்றனர்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.