இந்திய பெருங்கடலை கண்காணிக்க செயற்கைகோள் அனுப்பப்பட்டது
1 min read
Satellite sent to monitor Indian Ocean
28.2.2021
இந்திய பெருங்கடலை கண்காணிக்க சிந்து நேத்ரா செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
செயற்கை கோள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கை கோள்களில் பிரேசில் நாட்டின் அமேசோனியா 1 என்ற செயற்கைக்கோள் முதன்மை செயற்கைக்கோளாகவும், அதுதவிர 18 செயற்கைக்கோள்களும் சேர்த்து விண்ணில் ஏவப்பட்டுள்ளன.
அவற்றில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) இளம் விஞ்ஞானிகள் சேர்ந்து உருவாக்கிய சிந்து நேத்ரா செயற்கைக்கோளும் ஒன்று. இந்திய பெருங்கடல் பகுதியில், ராணுவ போர் கப்பல்கள் மற்றும் வர்த்தக கப்பல்கள் ஆகியவற்றின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான நோக்கில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.
இந்திய பெருங்கடல்
இந்த செயற்கைக்கோள் தானியங்கி முறையில், இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும். இதற்காக தரையில் உள்ள கட்டுப்பாட்டு தளங்களுடன் தொடர்பு கொள்ளும் பணிகளையும் செயற்கைக்கோள் தொடங்கி விட்டது என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதுதவிர, தென்சீன கடல் பகுதி அல்லது கடற்கொள்ளை அதிகம் நடக்க கூடிய ஏடன் வளைகுடா பகுதியருகே மற்றும் ஆப்பிரிக்க கடலோர பகுதிகளில் தேவைப்பட்டால் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நில பகுதிகளில் இந்தியா திறம்பட கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உதவும் வகையில், சீன எல்லையை ஒட்டிய லடாக் பகுதி மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய நில பகுதிகள் போன்றவற்றை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.