May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தபால் ஓட்டுகளை நிராகரிக்க 10 காரணங்கள்; தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

1 min read

10 reasons to reject postal ballots; Election Commission Notice

தபால் ஓட்டுகளை நிராகரிக்க 10 காரணங்கள்
தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு
1/5/2021
தபால் ஓட்டுகளை நிராகரிப்பதற்கான 10 காரணங்களை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தபால் ஓட்டுகள்

தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ளன. 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மொத்தம் உள்ள 75 மையங்களில் எண்ணப்படுகிறது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணுவார்கள்.
இதற்கு முன்பு 500 தபால் ஓட்டுகள்தான் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளும் தபால் ஓட்டு போடலாம் என தேர்தல் கமி‌ஷன் அனுமதித்து இருந்ததால் தபால் ஓட்டுகள் அதிகரித்து விட்டன.

ஒவ்வொரு தொகுதிக்கும் 1,500 முதல் 5 ஆயிரம் ஓட்டுகள் வரை தபால் ஓட்டுகள் உள்ளன. இதனால் பல தொகுதிகளில் தபால் ஓட்டுகள் ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை நிர்ணயித்து விடும் அளவுக்கு உள்ளது.

10 காரணங்கள்

தபால் ஓட்டுகளில் எந்த ஓட்டு செல்லும், எது செல்லாது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அந்த தொகுதி தேர்தல் அதிகாரியின் முடிவை பொறுத்தது.
தபால் ஓட்டுகளை என்னென்ன காரணங்களுக்காக நிராகரிக்கலாம், தள்ளுபடி செய்யலாம் என்பது பற்றி தேர்தல் கமி‌ஷன் 10 காரணங்களை கூறி உள்ளது. அவை வருமாறு:

உறுதிமொழி

  1. ‘13-C’ படிவ உறைக்குள் ‘13-A’படிவத்தில் உறுதிமொழி இல்லாமல் இருந்தால் தள்ளுபடி செய்ய வேண்டும்.
  2. உறுதிமொழி, வாக்காளரால் முறைப்படி கையொப்பமிடப்படாமல் இருந்தல் அல்லது சான்றொப்பமிட அதிகாரமுடைய அலுவலரால் முறைப்படி சான்றொப்பமிடப்படாமல் இருத்தல் அல்லது பிற வகையில் பெரிதும் குறைபாடாக இருத்தல், கண்டறியப்பட்டால் நிராகரிக்கலாம்.
  3. உறுதிமொழியின் மீது காணப்படும் வாக்குச்சீட்டின் தொடர் எண், படிவம், ‘13-B’இன் உள் உறையில் மேலொப்பமிடப்பட்ட தொடர் எண்ணிலிருந்து வேறுப்பட்டிருத்தல் தெரியவந்தால் நிராகரிக்கலாம்.
  4. யாதொரு வாக்கும் அதில் பதிவு செய்யப்படாமல் இருந்தால் அது செல்லாது.
  5. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டிருப்பின் அது செல்லாது.

போலி வாக்குச்சீட்டு

  1. போலியான வாக்குச் சீட்டாக இருக்குமாயின் அது செல்லாது.
  2. வாக்குச் சீட்டு உண்மையானது என்பதை நிரூபிக்க இயலாத வகையில் அது சேதமடைந்திருந்தால் அல்லது சிதைக்கப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும்.
  3. தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்காளருக்கு அனுப்பப்பட்ட உறையுடன் அது திருப்பி அனுப்பப்படவில்லையாயின் நிராகரிக்கப்படும்.
  4. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஐயத்திற்கிடமாக இருக்கும் வகையில் வாக்குச்சீட்டில் உள்ள குறி இருக்குமாயின் அது செல்லாது.
  5. வாக்களிப்பவரை இன்னாரென்று அடையாளம் காட்டும் வகையில் அடையாளக்குறியீடு அல்லது சொற்றொடர் எவையும் எழுதப்பட்டிருப்பின் அத்தகைய வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அனுபவம் வாய்ந்தவர்கள்

எனவே தபால் ஓட்டு எண்ணுவதை கண்காணிக்க ஒவ்வொரு வேட்பாளரும் அனுபவம் வாய்ந்த முகவர்களை நியமித்துள்ளனர்.

கடந்த 2016 பொது தேர்தலில் தபால் ஓட்டுகளில் பிரச்சினை ஏற்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முறை அந்த மாதிரி நடக்காமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.