May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பற்றி சித்த மருத்துவர்கள் விளக்கம்; குழந்தைகளை 3-வது அலை தாக்குமாம்

1 min read

Paranoid physicians’ description of the corona; Children will be hit by the 3rd wave

22.5.2021

கொரோனா 3-வது அலையின்போது குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக சித்த மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை சித்தா மருத்துவமனை மற்றும் கிளினிக் சங்க தலைவர் டாக்டர் ஜெ.ஜெயவெங்க டேஷ் மற்றும் டாக்டர் பி.செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:-

சன்னி நோய்கள்

கொரோனா வைரஸ் பெரும் தொற்றானது தற்போது நம்மை அச்சுறுத்தி வருகிறது. இது போன்ற தொற்று நோய்களை சித்த மருத்துவம் சன்னி நோய்கள் என்று வகைப்படுத்துகின்றது.

பெரும்பாலும் 3 முறை தொடர்ந்து தாக்குதல் தொடுக்கும் சன்னி நோயானது வாதம், பித்தம், கபம் என்ற 3 குற்றங்களின் அடிப்படையில் பல்வேறு வயதினரை தாக்குகின்றது.

“வாதமாய் படைத்து பித்த வன்னியாய் காத்து சேத்தும சீதமாய் துடைத்து” என குழந்தை பருவத்தை வாத காலமென்றும், நடுத்தர வயதை பித்த காலம் என்றும், முதுமை காலத்தை சேத்தும காலம் என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

மருந்துகள்

எல்லா தொற்று நோய்களும் 3 குற்றங்களின் மிகுதியால் வரும் சன்னி நோய் வகையை சார்ந்தவை. இதற்காக சன்னி பைரவ மாத்திரைகளான அஷ்ட பைரவம், பிரம்மானந்த பைரவம், ஆனந்த பைரவம், காலானந்த பைரவம், பிரளய கால உருத்திரன் போன்ற பைரவ மாத்திரைகள் பெருந் தொற்று நோய்களை கட்டுப்படுத்த வழங்கப்பட்டன.

காலரா, மெட்ராஸ் ஐ, அம்மை போன்ற நோய்களுக்கு காரணமான முக்குற்ற மிகுதி மாற்றங்கள் அண்டம் என்ற பிரபஞ்சத்தில் மிகும்போதும், பிண்டம் என்ற உடலில் மிகும்போதும் பெருந் தொற்றாக மாறி நோயாக உருவெடுக்கின்றன. அண்டமாகிய பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்கள் நோயிற்கு காரணமாகவும், பிண்டமாகிய உடலில் ஏற்படும் மாற்றங்கள் நோய் எதிர்ப்பாற்றல் குறைவதற்கு காரணமாகவும் அமைகின்றன. கொரோனா வைரஸ் சன்னியுடன் ஒப்பிடும் பெருந்தொற்று நோயாக கருதலாம்.

3-ம் அலையில் குழந்தைகள்

முதல் அலை கப காலம் (முதுமை பருவம்), 2-ம் அலை பித்த காலம் (இளமை பருவம்), 3-ம் அலை வாத காலம் (குழந்தை பருவம்). இதில் முதல் அலையில் கப மிகுதி காலத்தை சேர்ந்தவர்களான முதியவர்களும், 2-ம் அலையில் பித்தம் மிகுதி காலத்தை சேர்ந்தவர்களான நடுத்தர வயதினரும், 3-ம் அலையில் வாத மிகுதி காலத்தை சேர்ந்தவர்களான குழந்தைகளும் பாதிக்கப்படுவர். சில காலம் மட்டுமே நீடிக்கும் அம்மையிலும் பாதிப்பு இப்படித்தான் இருக்கும்.

முதல் அலையில் கொரோனா தொற்றானது முதியவர்களை தாக்கியது. தற்சமயம் இந்த கிருமிகள் நடுத்தர மற்றும் இளம் வயதினரை குறி வைத்துள்ளது. இந்த அலை முடிந்து நோய் தொற்று குறைய ஆரம்பித்ததும் 3-ம் அலையில் குழந்தைகளை இந்நோய் தாக்கக்கூடும்.

மொட்டை மாடியில்…

சித்த மருத்துவ நோய் தொற்று கணிப்புப்படி தற்போது நமது குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தயார்படுத்த வேண்டும். துரித உணவுகள் மற்றும் உடனடி உணவுகளை தவிர்த்து காய்கறி, பழம் கீரைகள் மற்றும் அசைவ சூப் வகைகளை அதிகம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் 3-ம் அலையில் நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே குழந்தைகளை காற்றோட்டமாக பால்கனி மொட்டை மாடி வீட்டின் பின்புறம் ஆகிய இடங்களில் வெயில் படும்படி விளையாட அனுமதிக்க வேண்டும்.

எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை கொடுப்பதுடன் உடலில் நீர்ச்சத்து குறையா வண்ணம் போதுமான தண்ணீர் குடிக்க வைக்க வேண்டும். வறட்சியான உணவுகளை தவிர்த்து கஞ்சி மற்றும் திரவ உணவுகளை அதிகம் கொடுக்க வேண்டும்.

மூலிகை தேநீர்

சிறு குழந்தைகளுக்கு அதிமதுரம் சேர்ந்த மூலிகை தேநீர் கொடுக்கலாம். சீந்தில் சேர்ந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை வழங்கலாம். குழந்தைகள் கையை கண் மூக்கு மற்றும் வாயில் அடிக்கடி கைகளை வைப்பார்கள். ஆகவே குளிக்கும் சோப்பு கொண்டு அடிக்கடி கைகளை கழுவ சொல்லித்தர வேண்டும்.

முகம், கை, கால்களை அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்க தலைக்கு எண்ணெய் தேய்த்தல், விளையாட்டு ஆகியவற்றை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்த வேண்டும். விரைவில் படுக்கைக்கு செல்வதுடன் வீட்டிற்கு வெளியாட்கள் யாரும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வெளியிடங்களில் வாங்கும் பொருட்கள் மற்றும் பண்டங்களை 20 நிமிடம் வெயிலில் வைத்து அதன்பின் பயன்படுத்த வேண்டும். வெளியிலிருந்து வரும் பை, கூடை முதலியவற்றை குழந்தைகள் முதலில் தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் வெளியே போய்விட்டு வந்தவுடன் குழந்தைகள் அவர்கள் அருகில் ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்ளும் அல்லது கைகளில் தொடும். இதை தவிர்க்க வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக வாசலிலேயே கை கால் முகம் ஆகிய இடங்களை சோப்பு கொண்டு நன்கு கழுவி விட்டு பின்பு வீட்டிற்குள் நுழைய வேண்டும். குழந்தைகளுக்கு தினமும் துவைத்த ஆடைகளை அணிவிக்க வேண்டும். காலை மற்றும் மாலையில் உடைகளை மாற்றுவது நல்லது. பூட்டிய ஏசி அறைக்குள் தூங்காமல் கதவுகளை திறந்து வைத்து காற்றோட்டமாக தூங்குவது நல்லது.

உடல் வெப்ப பரிசோதனை

பணி நிமித்தமாக வெளியில் சென்று வரும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் தூங்காமல் குழந்தைகள் பார்வை படும்படி சற்று தூரம் தள்ளி படுத்து தூங்குவது நல்லது. குழந்தைகள் சோர்வாக இருந்தாலோ அல்லது கண் எரிகிறது, உடம்பு வலிக்கிறது என்று சொன்னாலோ உடனடியாக உடல் வெப்ப பரிசோதனை செய்யவேண்டும்.

இதுபோன்ற சூழலில் குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை உடல் வெப்பநிலையை பார்த்துக் கொள்வது நல்லது. காய்ச்சல் இருந்தால் தவறாமல் மூக்கு, தொண்டை, சளி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று நோயின் முதல் அலை, 2-ம் அலை மற்றும் 3-ம் அலையின் தொற்று தீவிரம் மற்றும் நோய் அறி குறிகளுக்கு ஏற்றவாறு சித்த மருத்துவர்கள் மருந்துகளை தேர்வு செய்து வழங்குகின்றனர். தேவைப்படின் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

கப தோ‌ஷத்தின் தீவிர பாதிப்பாக கடுமையான இருமல், வாசமின்மை மற்றும் மூச்சுத்திணறல் முதல் அலையில் காணப்பட்டது. பித்த தோ‌ஷத்தின் தீவிரத்தை காட்டும் தொடர்ந்து காய்ச்சல், சுவையின்மை, வாந்தி, பேதி தற்போதைய 2-ம் அலையில் காணப்படுகிறது.

அதேபோல் 3-ம் அலையில் வாத தோசத்தின் தீவிர பாதிப்பாக காய்ச்சலுடன் கூடிய உடல் வலி, சிறு சிறு மூட்டுகளில் வலி வீக்கம் ஆகியன காணப்படலாம். ஆகவே சித்த மருத்துவ அறிவியல் கூறும் அடிப்படையில் இன்று அலையை எதிர்கொள்ள வீட்டில் தனித்திருப்போம். குழந்தைகளுக்கு நோய் தொற்று தாக்காமல் பத்திரமாக பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.