May 1, 2024

Seithi Saral

Tamil News Channel

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேருக்கு இடைக்கால ஜாமீன்

1 min read

Interim bail for 4 Trinamool Congress leaders

28.5.2021
மேற்கு வங்காளத்தில் நாரதா டேப் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

லஞ்ச வழக்கு

மேற்குவங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிகள் சிலர் லஞ்சம் பெற்றதை நரதா டி.வி. சேனல் அம்பலப்படுத்தியது. அதாவது போலியான நிறுவனம் ஒன்றின் அதிகாரிகளாக சொல்லிக்கொண்டு இந்த மந்திரிகளை அணுகிய நரதா சேனல் ஊழியர்கள், தங்கள் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படுவதற்காக லஞ்சம் கொடுத்தனர்.

சி.பி.ஐ. விசாரணை

இதனை மந்திரிகள் பெற்றுக்கொண்டதை வீடியோவாகவும் அவர்கள் பதிவு செய்து கொண்டனர். அப்போதைய மந்திரி சபையில் இடம்பெற்றிருந்த பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சட்டர்ஜி ஆகியோர் நரதா சேனல் ஊழியர்களின் வலையில் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் லஞ்சம் பெற்ற வீடியோவை கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா சேனல் வெளியிட்டது. இந்த ‘நாரதா ஸ்டிங் டேப்’ விவகாரம் மேற்கு வங்காளம் மட்டுமின்றி நாடு முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2017ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த விவகாரம் சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

4 பேர் கைது

இந்த வழக்கில் சிக்கிய பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா ஆகிய 3 பேரும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்கள் ஆனார்கள். இதில் பிர்காத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் மீண்டும் மந்திரிகளாகி உள்ளனர். மதன் மித்ரா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதேநேரம் கொல்கத்தா முன்னாள் மேயரும், முன்னாள் மந்திரியுமான சோவன் சட்டர்ஜியோ திரிணாமுல் காங்கிரசில் கட்சியில் இருந்து சற்று விலகி இருந்து வருகிறார்.

இந்நிலையில், சி.பி.ஐ. அமைப்பு குற்றப்பத்திரிகையை இறுதி செய்து, கவர்னர் அனுமதியுடன் அவர்கள் 4 பேரையும் கைது செய்தது. அவர்களுக்கு சி.பி.ஐ. கோர்ட்டு ஜாமீன் அளித்தது. ஆனால், சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டின் பேரில், ஜாமீன் உத்தரவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. அதனால் 4 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றக்கோரி சி.பி.ஐ. ஒரு மனு தாக்கல் செய்திருந்தது. கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலைமையிலான அமர்வு கடந்த வாரம் இதனை விசாரிக்க இருந்தது. ஆனால், விசாரணையை ஒருநாள் தள்ளி வைத்தது. இருப்பினும், தவிர்க்க இயலாத காரணங்களால், அந்த அமர்வு கூடவில்லை. இதனால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

இடைக்கால ஜாமீன்

இந்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டில் 4 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரசின் 4 தலைவர்களுக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதற்காக 4 பேரும் தலா ரூ.2 லட்சம் தனிநபர் பிணை தொகையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.