April 30, 2024

Seithi Saral

Tamil News Channel

சனி நீராடு-ஓர் ஆய்வு முத்துமணி

1 min read

Sani neeradu by Muthumani

28/6/2021
ஏலே,மாரி, சனிக்கிழமதாம்ல குளிக்கணுமாம். இது தெரியாம தினசரி குளிச்சேன்.
ஏடே. என்ன சொல்லுத? அப்படின்னா சனிக்கிழம தவிர மத்த நாளு குளிக்காமலே இருக்கணுமாடே?
ஐயையோ, நம்மால அப்புடி முடியாதுடே முத்துக்குமாரு. தினசரி விடியாகாலம் எந்திச்சதும் குளிச்சாதான் உடம்பு நல்லா சுறுசுறுப்பா இருக்கும்.
ஏலே சுப்ரமணி, தினமும் காலையில குளிக்காட்டி, எங்கப்பா வையுது. ஆனா ஔவைப் பாட்டி அறிவாளிடே. சனிக் கிழம மட்டும் குளிச்சாலே போதும்ன்னு நல்லாதான சொல்லிருக்கா. ஆமாமா நீ ஏண்டே ஒரு மாதி இருக்க? நாளைக்குக் குளிக்கணுமேடே. ஏன்னா இன்னிக்கு வெள்ளிக்கிழமலாடே..

சனி நீராடு என்ற வரியைப் பள்ளியில் ஆசிரியர் பாடமாக நடத்திய நாளில் மேற்கண்டவாறு நானும் என் வகுப்பு நண்பர்களும் பேசியது நினைவில் இருக்கிறது.
தமிழில் ஒரு தொடருக்குப் பொருள் புரிந்து கொள்ளுதலில் இன்றைக்கு எவ்வளவு மாறுபாடு நேர்ந்திருக்கிறது என்பதை நினைத்து வியப்பாகவும் இருக்கிறது.

நீராடல் என்றால் குளித்தல்தானே. குளித்தல், முழுக்கு, நீராடல் எப்படிச் சொன்னால் என்ன குற்றாலத்தில் குளித்தேன் என்று சொல்வோம். தென்காசிச் சாரலில் நனைந்தேன் என்பான். மழையில் நனைந்தேன் என்று சொல்வர். ஆற்றில் நீராடினோம் என்று சொல்வர். பழங்காலத்தில் தமிழர் புனலாடி மகிழ்ந்தனர். “நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்..” என்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். புகார் நகரில் காவிரியாறு பெருக்கெடுக்கும் நேரத்தில் புனலாடி மகிழ்ந்தனர். காவிரிப் பெண்ணே வாழ்க. நீ வாழ்க என்று காவிரியை வாழ்த்தினார் கானல்வரி பாட்டு. ஆற்றங்கரையில் ஆற்று நீர்ப் பெருக்கைப் பார்த்துக் கொண்டு பாடுவது என்று படிக்கிறோம். புனல் என்றால் நீர் புனலாடி.. புனலில் ஆடி என்றால் நீராடி…. அப்படியானால் குளிப்பது வேறு நீராடுதல் என்பது வேறு. முழுக்கு என்பது வேறு என்பது போல் தோன்றுகிறதல்லவா? இன்று வீட்டுக்குள் ஒரு அறையை ஒருசில வசதிகளோடு கட்டிவைத்து, அதற்குக் குளியலறை என்ற பெயரிட்டு, ஒரு வாளியில் தண்ணீரைப் பிடித்து அதை முகந்து மேலே ஊற்றிக்கொண்டு நாம் செய்யும் செயலுக்கு, குளித்தல் என்று பெயர் வைத்துக்கொள்ளலாம்… ஆனால் நீராடுதல் என்பது இதிலிருந்து சற்று மாறுபாடானது. நீருக்குள் இறங்கி, விழுந்து, குதித்து, நீந்தி, ஒருவர் மேல் மற்றவர் நீரை அள்ளி எறிந்து ஆடிப் பாடித தீர்த்து விடுவதுதான் நீராடுதல்… நீருக்குள் ஆடுதல் ….அது மிகுந்த பேரின்பம். மிகுந்த மகிழ்ச்சி. உடலைக் குளிரச் செய்யும் செயல். மிகச்சிறந்த உடற்பயிற்சி. என் சிறுவயதில் நான் நண்பர்களோடு எங்கள் ஊரில் ஆற்றுக்குச் சென்று, ஆடிய ஆட்டம்??? ஆழமான பகுதிகளில் நீந்தி, ஆழம் குறைந்த பகுதிகளில் நீருக்குள்ளே அமர்ந்து விளையாடி, மீன் பிடித்து… நீண்டநேரம் ஆற்றங்கரையில் அமர்ந்து படுத்து உருண்டு புரண்டு விளையாடி இவற்றையெல்லாம் சேர்த்துதான் நீராடுதல் என்று சொன்னார்களா.?.. குளியலறைக்குள் யாராலும் நீராட முடியாது.. கதவைப் பூட்டி வைத்துக் கொண்டு காற்றுக்கும் ஒளிக்கும் தடை போட்டுவிட்டு, தண்ணீரைச் செலவு செய்யாது ரேஷன் முறையில் ஒரு ஆளுக்கு இத்தனை வாளிகள் தண்ணீர் என்று சுருக்கமாகப் பயன்படுத்தி குளிக்க வேண்டும். அதாவது உடலைச் சுத்தம் செய்ய வேண்டும். அல்லது துடைத்துக் கொள்ளவேண்டும். இதை நீராடுவதில் எப்படிச் சேர்க்க முடியும்? நதியில் விளையாடி கொடியில் தலைசீவி என்று பாசமலரில் கவியரசர் கண்ணதாசன் பாடினார். தென்றல் காற்று கூட நதியில் இறங்கிக் குளிக்க வில்லை.மாறாக நதியில் இறங்கி ஆடியது..விளையாடியது…

குளங்களில் முங்கிக் குளிக்கலாம் நீந்தக்கூட முடியும். ஆனால் ஆற்றில் பாய்ந்து வரும் வெள்ளத்தில், அதற்கு எதிராக நின்று, எதிர்நீச்சல் போட்டு விளையாடுவது போல் வேறு எந்த நீர்நிலைகளிலும் ஆட விளையாட முடியாது. ஆற்று நீராடல் போல மற்ற நீர் நிலைகளில் குளிப்பது அத்தகைய மன மகிழ்ச்சியைம் தராது.

ஒரு கிணற்றில் ஒரே நாளில் இரண்டு முறை மூன்று… எத்தனை முறை வேண்டுமானாலும் நம்மால் குளிக்க முடியும். குளங்களில் அவ்வாறுதான். ஆனால் ஒருவர் ஆற்றில் இரண்டு முறை குளித்தேன் என்று சொன்னால் அல்லது நீராடினேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனெனில் ஆற்றுநீர் பாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு முறை நாம் நீராடிய போது நம் மீது விழுந்த நீர் அங்கே நிலைத்து நிற்பதில்லை. நாம் குளித்த நீர் நம்மை விட்டு விலகி ஓடிவிடும்.. எப்படியோ சென்று கடலில் கலந்துவிடும். கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய்விடும் என்று பழமொழி சொல்வர்.

சனி நீராடு என்பது ஆண்களுக்காகச் சொல்லப்பட்டது. ஏனென்றால் செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை பெண்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பர். புதன்கிழமை சனிக்கிழமைகளில் ஆண்கள் இச்செயலை மேற்கொள்வர். எனவே நீராடுதல் என்பது எண்ணெய் தேய்த்துக் குளித்தலை குறிப்பிடுகிறது. ஔவை இதைத்தான் குறிப்பிட்டுள்ளாள். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதைத்தான் சனி நீராடு என்று சொன்னாள். நாள்தோறும் நீரில் குளிக்க வேண்டும். ஆனால் சனிக்கிழமைதோறும் தலை முதல் கால் வரை உடலெங்கும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும், என்பதை அழுத்தமாக இப்படி சொல்கிறாள்.. எணணெய் தேய்த்துக் குளிப்பதுதான் உண்மையான குளியல் என்கிற பொருளில் அதை வாரம் ஒருநாள் செய்ய வேண்டும். சனிக்கிழமைகளில். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்காமல் குளிக்கலாம். எனவே சனிக்கிழமை எண்ணெய் oil bath குளியலைத்தான் சனி நீராடு என்று கூறுவதாக அறிஞர் பலர் கருத்து சொல்கிறார்கள்.

இக்கருத்திலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் அறிந்த இதை மட்டும்சொல்ல ஔவை எதற்கு? ஔவை தன் வார்த்தை அமுதத்தில் இதைவிட ஆழமான இன்னும் ஒரு கருத்தை வைத்திருக்கிறாள் எனத் தோன்றுகிறது. ஆம். அக்கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அத்தொடரில் முதல் சொல்லாகிய சனி என்ற சொல்லின் பொருளை நாம் ஆராய வேண்டும்.

சனி என்பது கிரகத்தின் அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும். சனிக்குரிய புனிதப் பொருள் சனி பகவானுக்கு உகந்த பொருள் எள். எள்ளில் இருந்து கிடைப்பது நல்லெண்ணெய் எனவே எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நல்லெண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஔவை சொல்வதாக விளக்கம் சொல்வோரும் உளர்.

சனி என்பது மெதுவாக இயங்கும் கோள். மந்தமானது. சனியைப் போல மெதுவாக ஓடுகிற நீரில் குளிக்க வேண்டும்… மந்தமான ஓட்டம் உள்ள நீரில் குளிக்க வேண்டும். மிகவும் விரைந்து ஆர்ப்பரித்து ஓடும் நீரில் குளிக்கக்கூடாது என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

அறிஞர் சிலர் இதை இன்னும் வேறுவிதமாகப் பார்க்கின்றனர். சனி நீராடு என்ற தொடரில் ஒரு சிறிய எழுத்துப் பிழை இருக்கிறது. சகரக் கிளவி தமிழ்ச்சொல் சொல் இல்லை அல்லவா?. அதனால் சனி என்பதற்கு முன்னால் அ என்னும் எழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அது எப்படியோ காணாமல் போய்விட்டது. இப்போது அ என்னும் எழுத்தைச் சேர்த்துப் பார்க்க வேண்டும். அசனி என்று வரும்… அசனி என்றால் சாம்பிராணியின் இலை. அக்காலத்தில் குளிக்கும் நீரில் சாம்பிராணி இலையைப் போட்டுக் குளிப்பர். அப்படிச் செய்வதால் மிகுந்த மருத்துவப்பயன் கிட்டும். இது தோல் நோய் உள்ளிட்ட நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். எனவே சாம்பிராணி இலையைக் குளிக்கிற நீரில் போட்டுக் குளிப்பதைத்தான் ஔவை இதில் பேசி இருக்கிறாள் என்று சொல்வோரும் உள்ளனர். அப்படிப் பார்த்தால் அசனி என்றால் மின்னலையும் குறிக்கும். அப்படியானால் மின்னல் அடிக்கும் போது குளிக்க வேண்டுமா? அல்லது மின்னலில் குளிக்க வேண்டுமா?என்று கேட்போரும் உண்டு.

சனி என்றால் குளிர்ச்சி என்ற ஒரு பொருளும் உண்டு. எனவே குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிப்பது உடலுக்கு நன்மை தராது. எப்போதும் குளிர்ந்த நீரில் தான் குளிக்க வேண்டும் என்பதுதான் இவ்வரியின் உண்மைப் பொருள் என்பாரும் உளர்.

சனி எனும் சொல் ..சனித்தல் என்னும் தொழிற்பெயரின் முதலாகும். சனித்தல் என்றால் பிறத்தல்… உற்பத்தி ஆகுதல்… என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.. சனி நீர் என்றால் பிறக்கின்ற நீர் எனப் பொருள்படும்… அதாவது புதிதாக உற்பத்தியாகின்ற நீர். பிறக்கின்ற உற்பத்தியாகின்ற நீரில் குளி… எங்கேயாவது தேங்கிக் கிடக்கிற கட்டிக் கிடக்கிற பழைய நீரில் குளிக்காதே.. நீண்ட நாளாக இறைக்கப் படாமல் கிணறு போன்ற நீர் நிலைகளில் இருக்கும் நீரைக் கெட்டுக்கட தண்ணீர் இன்று எங்கள் ஊரில் பெரியவர்கள் சொல்வதுண்டு. ஓடுகிற நீரில் குளிப்பது உடலுக்கு நல்லது. ஓடுகிற புதிய நீர் நோயைப் போக்கும் தேங்கிக் கிடக்கிற நீர் சில நோய்களை உருவாக்கும்… என்ற அடிப்படையில் பார்த்தால் சனிக்ககின்ற நீரில் நீராடு என்பதே சரியாக இருக்கும். அது சரி. சனிக்கின்ற நீர்… எங்கே கிடைக்கும்? சனி நீர் ஆற்றில் மட்டுமே கிடைக்கும். சனிக்கிழமை மட்டுமின்றி எல்லாக் கிழமைகளிலும் கிடைக்கும்…. அப்படியானால் நாள்தோறும் குளிக்க வேண்டும். புதிய நீரில் குளிக்க வேண்டும்.. உதிக்கின்ற நீர் ஆற்றில் அல்லது அருவிகளில் கிடைக்கும்… அல்லது நேரடியாக மழையிலிருந்து கிடைக்கும்… மேலே சொல்லப்பட்ட ஆறு, அருவி, மழை இவற்றில் நன்றாக ஆட்டம் போடலாம் நீராட முடியும் அல்லவா? ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாவற்றையும் ஒருசேரத் தருவது இந்த சனிக்கின்ற நீர். தூய்மையான நீர். உப்பு கலக்காத நீர்… எனவே எப்படிப் பார்த்தாலும் ஆற்றுநீரில், தூய நேரில், சனிக்கினற உட்பத்தி ஆகின்ற புதிய நீரில் குளி.. இல்லை இல்லை… நீராடு. சனிக்கும் நீரில் இறங்கி விழுந்து எழுந்து நீரோடு நீராக ஆடிக்கொண்டாடு என்பதை ஔவை வலியுறுத்தகிறாள் என்று நான் கருதுகிறேன்..

ஆனாலும் எல்லா ஊரிலும் ஆறு இருக்கிறதா என்ன? எல்லா ஊர்களையும் அருவிகளைத் தேடிச் செல்ல முடியுமா? என்று கேட்டால்.. அதற்குப் பதில் இல்லை. நாங்கள் சிறுவயதில் நாள்தோறும் நடந்து சென்று நீராடி மகிழ்ந்த எங்கள் ஊர் ஆறுகள் இன்று காணாமல் போய்விட்டன வெறும் மண்மேடுகளாகக் கிடக்கின்றன. நன்றாக கவனியுங்கள் மணல்மேடுகள் அல்ல. மண்மேடுகள். மணலை முழுவதும் ஆற்றை விட்டுத் திருடி அகற்றியதால் பாலற்றுப்போன கொடியைப் போல ஆறு நீரற்று வாடி வறண்டு போனது. இவற்றைப் பார்க்கும்போது கண்கலங்குகிறது. இருக்கிற தண்ணீர் கஷ்டத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்று வருத்தப்பட்டு கொண்டு.. போவதைவிட ஆறு போன்ற இயற்கை வளங்களை அழித்துவிட்டோம் நாம் என்று வருந்துவதோடு இழந்தவற்றை மீட்டெடுக்கவும் இருப்பவற்றை அழிவிலிருந்து காப்பதற்கும் ஆவன செய்யவும் உறுதி ஏற்றுக் கொண்டால் நன்மை தரும்.
-முத்துமணி, சிவகாசி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.