June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடியுடன் தமிழக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

1 min read

Tamil Nadu BJP MLAs meet Prime Minister Modi

3.7.2021
டெல்லியில் தமிழக பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் பிரதமர் மோடியை சந்தி்த்தனர். அவர்களுக்கு மோடி வாழ்த்து தெரிவித்ததோடு சில அறிவுரைகளையும் கூறினார்.

தமிழகத்தில் பாரதீய ஜனதா

வடமாநிலங்களில் கோலோச்சும் பா.ஜனதா தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்து தேர்தலை சந்தித்தது. அ.தி.மு.க.கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவியது. ஆனால் பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்றத்துக்குள் பா.ஜனதா நுழைந்துள்ளது.

பிரதிநிதித்துவமே இல்லாத தமிழகத்தில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் தடம் பதித்தது தேசிய அளவில் தலைவர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

அதேபோல் புதுவையிலும் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் பா.ஜனதா வென்றது. முதல்முறையாக அந்த மாநில மந்திரிசபையிலும் இடம்பிடித்துள்ளது. இதையடுத்து புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

மோடியுடன் சந்தி்ப்பு

அதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் மோடியிடம் வாழ்த்து பெறுவதற்காக இன்று டெல்லி சென்றனர். 4 எம்.எல்.ஏ.க்களில் வானதி சீனிவாசன் நட்சத்திர வேட்பாளரான நடிகர் கமல்ஹாசனை எதிர்த்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எம்.ஆர்.காந்தி நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
மொடக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.வின் பலமான வேட்பாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து போட்டியிட்டு டாக்டர் சரஸ்வதி வென்றார்.

நெல்லை தொகுதியில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் வென்றார்.

இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த முறை தமிழக சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தொடர்ந்து கூறிவந்த மாநில தலைவர் எல்.முருகன், நம்பிக்கை வீண்போகவில்லை என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

அறிவுரை

பிரதமர் மோடி எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு ‘மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள், அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடியுங்கள்’ என்று அறிவுரை வழங்கினார்.

அதன்பிறகு மதியம் அகில இந்திய பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை 4 எம்.எல்.ஏ.க்களும் சந்தித்தனர். அவரும் 4 பேருக்கும் வாழ்த்து தெரிவித்து சில ஆலோசனைகளை வழங்கினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *