May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தின் மோகினி-ராகினி /நகைச்சுவை சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Mokini and Rakini with kannayiram / Comedy Short Story / Tabasukumar

5/7/2021
இரவில் தூக்கம் வராமல் தவித்தார் கண்ணாயிரம். குடுகுடுப்பை காரன் அவரது உயிருக்கு ஆபத்து பரிகாரம் செய்யணும்னு சொன்னான். உடனே கோடாங்கியை வரவழைத்து வீட்டில் குறி கேட்டார்கள். அவர் கண்ணாயிரத்துக்கு மோகினி பிடிச்சிருக்கு அதை விரட்ட நள்ளிரவில் ஆற்றங்கரையில் பவுர்ணமி பூஜை நடத்தணும். அப்போது கண்ணாயிரத்தை சவுக்கால் அடிப்பேன், அவர் சத்தம் போடக்கூடாது. அப்படி என்றால்தான் மோகினி போகும் என்றார்.
உடனே கண்ணாயிரம் பவுர்ணமி பூஜையில் எனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்தலாமா என்று கண்ணாயிரம் கேட்டார். உடனே கோடாங்கி கோபமாகி, அதெல்லாம்முடியாது கண்ணாயிரமும் அவர் பயப்படாமல் இருக்க ஒரு வாலிபரும் கலந்து கொள்ளலாம் என்றார். கண்ணாயிரம் மனைவி அவர் வருவார். நான் அனுப்பிவைக்கிறேன் என்று சொன்னார்.
உடனே கோடாங்கி சரி, கவனம் நாளைக்கு பவுர்ணமி.. இரவு பதினோருமணிக்கு நான் இங்கு வந்து கண்ணாயிரத்தையும் அவர் உதவியாளரையும் அழைத்துச் செல்வேன். சேவல்,கோழி மற்றும் பூஜை பொருட்களுடன் தயாரா இருங்கள் என்றார். பின்னர் ஒரு செம்பில் இருந்த தண்ணீரை கண்ணாயிரம் மனைவியிடம் கொடுத்தார். தாயே இந்த செம்பு தண்ணீரை வீட்டில் ஒருமூலையில் வை. நாளை காலையில் பார்.
தண்ணீர் குறைந்து இருந்தால் மோகினியை தவிர வேறு காத்து கருப்பு இருக்கு என்று அர்த்தம். அதை தனியாக விரட்டவேண்டும் என்றார். மற்றொரு செம்பிலெ இருந்த தண்ணீரை பார்த்தார். மோகினி உள்ளே இருக்கு. விடக்கூடாது என்று துணியால் செம்பு சுற்றி கட்டினார். ஆத்துல கொண்டுபோய்போடணும் என்றார். பின்னர் அரிசி, தேங்காய், வெற்றிலை, சூடம் ஆகியவைகளை தான்கொண்டு வந்த பெரிய பையில் போட்டார். வீட்டுக்கு புறப்பட தயாரானார்.
கண்ணாயிரம் மனைவி அவரிடம் தாயத்து கொடுத்தீங்க என்று சொன்னாங்க தரலை என்று கேட்டார். அதுவா.. பவுர்ணமி பூஜை முடிந்ததும் கண்ணாயிரம் இடுப்பில் கட்டிவிடுவேன்.
சரி, நீங்களா பார்த்து சந்தோஷமா இப்போ ஒரு நூறு ரூபா கொடுங்க.. மோகினியை விரட்ட நிறைய வேலை இருக்கு என்றார். கண்ணாயிரம் மனைவி.. ம்.. மோகினியை விரட்ட எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று கூறியபடி வீட்டின் உள்ளறைக்குள் சென்று நூறு ரூபாய் எடுத்து வந்துகொடுத்தார்.
கோடாங்கி வாங்கிக்கொண்டு நன்றி தாயே என்றபடி கண்ணாயிரத்தை முறைத்து பார்த்தார். பின்னர் உடுக்கை மற்றும் பையை தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். வாலிபர் ஒருவர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிசென்றார்.
கண்ணாயிரம் வீட்டில் கூடியிருந்த மக்கள் கண்ணாயிரம் மேலே மோகினியா என்று முணுமுணுத்தபடி. சென்றனர்
. கண்ணாயிரம் விழிபிதுங்கியபடி இருந்தார்.
அடுத்து மனைவி என்ன என்ன கேள்வி கேட்கப்போகிறாரோ என்ற அச்சத்தில் அவரைப்பார்த்தார்.
ஏங்க…. இளம் வயதில் ரொம்ப அழகா இருந்தீங்களா. திருமணம் ஆகும்போது உங்களை பார்த்தா அப்படி தெரியல.. சரி அந்த மோகினி யாரு.. சொல்லுங்க.. எங்கிட்ட இவ்வளவு நாளா ஏன் செல்லவில்லை. என்று கேட்டார்.
கண்ணாயிரம் அவசரமாக எந்த மோகினி என்று கேட்டார்.
அப்போ ஏகப்பட்ட மோகினி இருக்காளா…. ஒரு மோகினியை விரட்டவே நான் பெரும்பாடு படுறேன் என்று கண்ணீர் விட்டார்.
அய்யய்யோ.. ஒரு மோகினியையும் எனக்கு தெரியாது. என்னை நம்பும்மா..நம்பு..என்றார்.
அப்படின்னா அந்த கோடாங்கி சொன்னாரே என்று கண்ணாயிரம் மனைவி கேட்டார்.
அதாம்மா. அந்த கோடாங்கி சும்மா சொல்றாரு.. நீ அதை நம்பாதே. என்ன. என்று கூறினார்.
நான் நம்ப மாட்டேன்.. நீங்க எதுக்கு ஆத்துக்கு போனீங்க. அதை ஏன் என்னிடம் மறைச்சீங்க.. மோகினியை பார்க்கத்தானே போனீங்க. சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம் மெல்ல…என்ன இது வம்பாபோச்சு. அதாம்மா.. நம்ம பஞ்சகல்யாணி கழுதை காணாம போச்சா.. அதை தேடி காட்டுப்பக்கம் போனோம்.. இரண்டு முரடர்கள் கத்தியுடன் பாய்ந்து வந்தாங்க.. ஒரு கம்பை எடுத்து விட்டேன் பாரு.. அடிதாங்காம..கண்ணாயிரம்..அண்ணே… கண்ணாயிரம் அண்ணே. இன்னாங்க.. நீங்க தேடிவந்த பஞ்சகல்யாணி கழுதை அப்படின்னு எங்கிட்ட ஒப்படைச்சான். சரின்னு நானும் இரக்கப்பட்டு அடிக்கிறதை நிறுத்திட்டேன். அப்பம் பாரு.. திடீரென்று என் காலை பிடித்து கெஞ்சினாங்க.. எங்களை விட்டுடுங்க அப்படின்னு சொன்னாங்க. நம்மளால..முடியுமா…என்று கண்ணாயிரம் இழுத்துக்கொண்டே போனார்.
அவர் மனைவி.. ஏங்க. ஆத்துக்கு ஏன் போனீங்க. அதை முதலில் சொல்லுங்க.. என்றார்.
ரொம்ப உஷாரா இருக்கா.. அதை நான் சொல்லல பாரு.. பஞ்சகல்யாணி கழுதையை மீட்டு கொண்டு வரும்போது. அதுக்கு அதிக தாகம். ஆத்துல இறங்கி தண்ணி குடிச்சுது.. எனக்கும் தாகம் இருந்தது. நானும் ஆத்திலை இறங்கி தண்ணீ குடிச்சிட்டு மேலே வந்தேன். அது தப்பா. என்று கேட்டார்.
சரி, நீங்க ஆத்துல இறங்கி தண்ணீ குடிச்சிங்க.. உங்க கூடவந்தவங்க ஆத்துல இறங்கி தண்ணி குடிச்சாங்களா.. சொல்லுங்க என்றார்.
கண்ணாயிரம்.. அவங்க யாரும் ஆத்துல இறங்கல..பயந்தாங்கொள்ளி பசங்க.. நான் தைரியசாலி. எனக்கு நீச்சல்நல்லா தெரியுமல்ல..என்று நெஞ்சை நிமிர்த்தினார்.
கண்ணாயிரம் மனைவி… நீங்களும் உங்க தைரியமும். இப்போ உங்களுக்குத்தான் பேயி விரட்ட வேண்டியது இருக்கு.. மற்றவர்கள் எவ்வளவு உஷாரா இருந்திருக்காங்க.. உங்களால்தான் எல்லாபிரச்சினையும்.. என்று கண்ணீர் வடித்தார்.
சரி, எல்லாம் அந்த கோடாங்கியால வந்தது. மோகினியும் கிடையாது. ஒண்ணும் கிடையாது. சும்மா என்னை மாட்டிவிட்டுட்டாரு. என்மேல் அவருக்கு என்ன கோபமுன்னு தெரியலை.. என்றார். மோகினி பயம் இல்லைன்னா ஏன் இடம் மாற்றி படுத்தீங்க.. தூக்கத்துல உளருனீங்க என்றார் அவர் மனைவி. அதுவா.. வெளியிலே செல்லாத..அந்த..கள்ளநோட்டு வாலிபர் என் கனவுல வந்தாரு பாத்துக்க.. என்னன்னு கேட்டேன். அவ்வளவுதான்.. கண்ணாயிரம். நீயா என்னை காட்டி குடுக்க பார்க்கிற.. என்று கேட்டான். நான் அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. என்று சொன்னேன். அவன் கேட்கல. நீ பொய் சொல்லுற.என்றான். நான் அவர்கிட்ட நீ இப்போ ரொம்ப கோபமா இருக்க.. போ…நாளைக்கு பேசிக்கிடுவொமுன்னு சொன்னேன் என்றார்.

சரி, அப்புறம் என்ன ஆச்சு.. இழுக்காம சொல்லுங்க.. என்றார் அவர் மனைவி.
அப்புறமா.. அதை ஏன் கேட்கிற. மறைச்சுவைத்திருந்த கத்தியை எடுத்து. படக்குன்னு நீட்டிட்டான். பொறுப்பா.. எதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாமுன்னு சொன்னேன். என்னை ஏமாத்தவா பார்க்கிறேன்னு சொல்லிக் கிட்டு கத்தியால் பாஞ்சுட்டான். என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு. பேசிக்கிட்டு இருக்கும்போது கத்திய நீட்டுறது. என்ன நான் சொல்லுறது. நான் கையாலேயே தட்டிவிட்டேன். அம்மாடின்னு கீழே விழுந்தான். சரி. போறான் பொடிப்பயன்னு விட்டுட்டேன். ஆனால். அவன் இளம் ரத்தம் இல்லையா.. நான் எதிர்பார்க்காத நேரத்துல என்மேல் விழுந்து கத்தியால் கழுத்தை அறுத்துப்புட்டான். நான் அலறினேன். அவன் என் தலையை துண்டித்து கையிலே எடுத்துட்டு கிளம்பிட்டான். என்ன அநியாயமா இருக்குன்னு நான் கத்தினேன்.
அவன் கண்டுக்கல என்று சுவாரசியமாக கண்ணாயிரம் சொன்னார்.
அவரது மனைவி. ஏங்க. கழுத்தை அறுத்துப்புட்டான் னு சொன்னீங்க. அப்புறம் எப்படி கத்த முடியும் என்று கேட்டார். கண்ணாயிரம் ஆமால்ல.. இல்ல..வெளிநாட்டுல ஒரு கோழி தலைய அறுத்தபிறகும் மூணு நாளு உயிரோட இருந்திச்சாம்.. நான் படிச்சிருக்கேன். அதுமாதிரி தலையை துண்டா அறுத்தப்புறமும் என் தலை கத்திச்சி. ஆமா. நீ.. மகாகவி காளிதாஸ் படம் பாக்கலியோ.. அதுல சிவாஜி கணேசன் தல மட்டும் பேசுமே… உனக்கு தெரியாதா?
என்ன என்ன என்னமோ உளருதீங்க..
ஓ.. நான் உளருதேன்… ஆமா… நான் உளருதேன். இல்ல.. இல்ல.. நான் கனவுல கண்டத சொல்றேன்… அது கனவு.. கனவு.. அதை மறந்துட்டேன் என்றார்.
இப்போ சொல்லுறேன் அந்த கள்ள நோட்டு பயலை நினைச்சுதான் கனவு கண்டு பயந்தேன். நிச்சயமா எனக்கு மோகினியையும் தெரியாது ராகினியையும் தெரியாது. என்றார் கண்ணாயிரம்.
அவரது மனைவி கோபத்துடன் அது யாரு ராகினி..
புதுசா இருக்கு சொல்லுங்க என்றார்.
அது ஒரு எதுகை மோனைக்காக சொன்னேன். மற்றபடி ஒண்ணும் இல்லை என்று கூறினார். அப்படியா. கோடாங்கி உங்கள் மேல உள்ள கோபத்தில் சொல்லுறாருன்னு வைச்சுக்குங்க. குடுகுடுப்பைக்காரனும் உங்கள் பெயரை சொல்லி உங்கள் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னானே அது எப்படி.. என்று மடக்கினார்.
ஆமா..என்பெயர் அவருக்கு எப்படி தெரிஞ்சது…அதுதான் எனக்கு சந்தேகமா இருக்கும்மா என்றார் கண்ணாயிரம்.
ஆனால் அவர் மனைவி கேட்கவில்லை. நான் நம்ப மாட்டேன்.. நம்ம வீட்டிலே மூலையில் செம்புல வைச்சிருக்கிற தண்ணீர் குறையுதா என்று நாளைக்கு காலையிலே பார்ப்போம். அப்புறம் முடிவு பண்ணிக்கலாம் என்றார்.
அடடா.. இது என்ன சோதனையா போச்சு. சரி…. பார்த்துக்கலாம். என்றார் கண்ணாயிரம்.

தண்ணீகுறைஞ்சுதன்னா. காத்து கருப்பு இருக்குன்னு அர்த்தம்.. நீங்க பவுர்ணமி பூஜைக்கு போகணும் சரியா என்று அவரது மனைவி கேட்டார்.
கண்ணாயிரம் தலையை அசைத்தார். ஒரே தலைவலியாக இருக்கு.. என்றார் கண்ணாயிரம். எல்லாம் அந்த காத்து கறுப்பு வேலையாகத்தான் இருக்கும். காபி போட்டு கொண்டு வர்றேன் என்றார் அவரது மனைவி. உடனே கண்ணாயிரம்.. ஆவி பறக்க காப்பி கொண்டு வா என்று சொல்லி சிரித்தார். என்ன ஆவியா..காப்பியிலேயா…என்று நடுங்கியபடி அவர் மனைவி கேட்டார்.
பயப்படாதே.. சூடா காபி கொண்டு வா. அதைத்தான் நான் அப்படி சொன்னேன்.. என்றார் கண்ணாயிரம். அவர் மனைவி சமையல் அறைக்கு சென்று சூடா காபி போட்டு செம்பில் கொண்டு வந்தார். அதை டம்ளரில் ஊத்தினார். ஆவி பறந்தது. கண்ணாயிரம் பார்த்தார். இதோ பார் ஆவி பறக்குது.. ஆவிய விரட்டட்டுமா என்று கூறியபடி காபியை மற்றொருடம்ளரில் ஆற்றினார். ஆவி பறப்பது நின்றது. நான் ஆவியை விரட்டிட்டேன் என்று சிரித்தபடி கூறினார்.
கண்ணாயிரம் மனைவி முறைத்தபடி இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. கனவு கண்டா பயந்து நடுங்கிறீங்க என்றார்.
அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. என்றபடி காபியை குடித்தார். ஆவி உள்ளே போயிடக்கூடாதுன்னுதான் காபியை ஆத்தி குடிச்சேன் என்றுகண்ணாயிரம் சொன்னார்.
அவர் மனைவி அதை ரசிக்கவில்லை என்பதை அவரது முகம் காட்டியது.
உடனே கண்ணாயிரம்.. டாபிக் மாற்றினார். ஆமா.. இந்த மாசம் கேபிள் கட்டணம் என்னைக்கு கட்டணும் என்று கேட்டார். இன்னும் இரண்டு நாள் இருக்கு எதுக்கு கேட்கிறீங்க என்றார் அவரது மனைவி. அதற்கு கண்ணாயிரம் டிவி பாக்காம வேஸ்டா ஏன் கட்டணும். இரண்டு நாளா நல்லா டிவி பாத்துருவோம் என்றார் கண்ணாயிரம்.
உடனே அவர் மனைவி, நீங்கதான் டிவியில் நியூஸ் பாத்துட்டு அப்பாட.. அம்மாடின்னு.. கத்துவீங்க என்றார்.
கண்ணாயிரம் சிரித்தபடி, கொஞ்சநாளைக்கு நியூஸ் போடாதே.. நல்லா காதுக்கு இனிமையான பாட்டு போடு.. என்றார். கண்ணாயிரம் மனைவி… யப்பா இப்போதாவது பாட்டு கேட்டீங்கள என்று உற்சாகத்துடன் டிவியை ஆன் செய்தார்..
பழைய பாட்டா போடு.. இனிமையாக இருக்கும் என்றார் கண்ணாயிரம். அவர் மனைவி அந்த சேனலை திருப்பினார். ஒரு பாட்டு வந்தது. பாலக்காட்டில் பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா. என்ற பாட்டு வந்தது. கண்ணாயிரம் ரசித்தார். என்ன பாட்டு, என்ன பாட்டு என்றார்.
அந்த பாட்டு முடிந்ததும் யாருக்காக.. இது யாருக்காக… இந்த மாளிகை.. வசந்த மாளிகை என்ற பாட்டு ஒளிபரப்பானது. அடடா. என்ன நடிப்பு. என்ன நடிப்பு பாத்துக்கிட்டு இருக்கலாம் என்றார்.
அடுத்த பாடல் விளம்பர இடைவேளைக்கு பிறகு ஒளிபரப்பானது. காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன் என்ற பாடல் ஒலித்தது. என்ன ஆச்சு சோகப்பாடல் போடுறாங்க. சேனலை மாத்து என்றார். அவர் அடுத்த சேனல் வைத்தார். அதில் வேறுமாதிரியான பாட்டு வந்தது. நானே வருவேன்.. நீயும். வருவாய். வருவாய். என்று ஒலித்தது. வெள்ளை உடையில் ஒருபெண் பாடிய படி வந்தார். ஒரே புகை மூட்டம்.. கண்ணாயிரம் கண்களை கசக்கினார். அதில் வந்த காட்சியை மெய் மறந்து பார்த்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அந்த பாடல் முடிந்ததும் சிறிது நேரத்தில் அடுத்த பாடல் ஒளிபரப்பானது. மன்னவனே அழலாமா, கண்ணீரை விடலாமா, என்னுயிராய் நீ இருக்க, உன்னுயிராய் நான் இருக்க என்று பாடல் ஒலித்தது. வெள்ளை உடையில் வானத்தில் பறந்தபடி ஒரு கே.ஆர்.விஜயா பாடினார். கண்ணாயிரம் கண்ணீரை துடைத்துகொண்டார். என்ன அருமையான பாடல்.. நெஞ்சை உருக்குது என்றார் கண்ணாயிரம்.
இந்த பாடலை கேட்டா பயமா இல்லையா என்று அவர் மனைவி கேட்டார்.
கண்ணாயிரம். பயம் இல்லையே.. ஆவிகள் வெள்ளை டிரஸ்சில்தான் வருமா.. அது அழுக்காகிடாது.. எந்த சோப்பில் துவைப்பாங்க.. என்று அப்பாவியாக கேட்டார். அவரது மனைவி கோபத்தில் டிவியை ஆப்பண்ணினார்.

என்ன டிவியை ஆப்பண்ணிட்டா. மோகினி பாட்டாவருதுன்னுபாத்தாயா.. நல்லாயிருக்குல்ல என்றார் கண்ணாயிரம்.
இருக்கும்.. இருக்கும். நைட்டு அதையே நினைச்சிட்டு கழுத்தை அமுக்குது காலை அமுக்குதுன்னு கத்துவீங்க.. பேசாம இருங்க என்றார் அவர் மனைவி.
கண்ணாயிரம் பதில் சொல்லவில்லை.
பயப்படுகிறேன் என்று சொன்னாலும் தப்பு பயப்படமாட்டேன் என்று சொன்னாலும் தப்பு. என்ன செய்யிறது. என்று யோசிித்தபடி இருந்தார்.
அப்போது வாசலில் கண்ணாயிரம் அண்ணே, கண்ணாயிரம் அண்ண என்று ஒரு பெண்குரல் கேட்டது. கண்ணாயிரம் எழுந்துவெளியே சென்றார். அவரது மனைவியும் பின்தொடர்ந்து வந்தார். கண்ணாயிரம் அந்த பெண்ணை பார்த்து யாரு நீ என்ன வேணும்.. என்று கேட்டார்.
அதற்கு அவர். நான் வடக்கு தெரு ராகினி..
இந்த பேரை கேட்டதும் கண்ணாயிரம் மனைவிக்கு தூக்கி வாறிப்போட்டது. அப்பலத்தானே மோகினி.. ராகினின்னு அடுக்குமொழியில வந்துதுன்னு சொன்னாரு… இப்போ ராகினி உண்மையிலே வந்து நின்கிற… இந்த மனுசன நம்பவா… சந்தேபப்படா ஒரே குழப்பமா இருக்கே.. என்று நினைத்துக்கொண்டார்.
அதற்கள் அந்த ராகினி.. எங்க வீட்டு பசு மாட்டை நாலு நாளா காணம்.கொஞ்சம் கண்டுபிடிச்சு கொடுங்க ளேன் என்றார்.
அதெல்லாம் முடியாது என்றார் கண்ணாயிரம். உடனே.. அந்த பெண் கோபத்துடன்.. கழுதை ன்னா கண்டுபிடிச்சு கொடுப்பீங்க. பசுமாட்டை கண்டுபிடிச்சு கொடுங்க மாட்டீங்களா.. ஒரு பெண் சொன்னால் செய்ய மாட்டீங்களா என்று கத்தினார்.
கண்ணாயிரம் அது இல்ல போலீசில் கம்ப்ளைன்ட் கொடுங்க.. அவங்க கண்டுபிடிப்பாங்க என்றார்.
அதற்கு அந்தப் பெண், என்னைப் பார் கோகம் வருதுன்னு பஞ்சகல்யாணி போர்டை நீங்கதான் மாட்டியிருக்கீங்க.. நீங்கதான் கண்டுபிடிச்சு கொடுப்பீங்க. அப்படின்னு ஊருல சொன்னாங்க என்று கூறினார்.
கண்ணாயிரம் மனைவி உள்ளே புகுந்து ஏம்மா.. கழுதையை மீட்க போயிட்டு வந்து அவர் படாத பாடுபடுறாறு. நீ வேற மாட்டை காணமுன்னுவந்து சொல்லுற..பேசாம போலீஸ் நிலையத்தில போய் சொல்லுங்க. என்று விரட்டினார்.
அதற்கு அந்த பெண் அதை சொல்ல நீயாரு..கண்ணாயிரம் சொல்லட்டும் நான் போறேன் என்று சொன்னாள்.
கண்ணாயிரம் உடனே ஏம்மா. இருக்கிற பிரச்சினை போதாதுன்னு நீ வேற.. ராகினின்னு வந்து நிக்கிற… மோகினி.. ராகினி.. ரெண்டும் பிரச்சினைதான்… போ.. போ… போலீசில் சொல்லு அவங்க சொன்னால்.. பார்க்கிறேன். போஎன்றார்.
அந்த பெண் சத்தம் போட்டு க் கொண்டு சென்றாள்.
கண்ணாயிரம் மனைவி அவரை முறைத்தார்.
ஏங்க கொஞ்சநேரத்துக்கு முன்பு மோகினியையும் தெரியாது. ராகினியையும் தெரியாதுன்னு சொன்னீங்க. இப்ப ராகினியே தேடிவந்திருக்கு என்ன சமாசாரம். என்று கேட்டார்.
அது யாருன்னு எனக்கு தெரியாது என்றார் கண்ணாயிரம். அப்படியா.. அப்படியே இருக்கட்டும் என்றார் அவரது மனைவி
. கண்ணாயிரம். என்ன செய்வது என்று தெரியாமல் கன்னத்தில் தடவிய படி அமர்ந்திருந்திருந்தார். நேரம் கடந்தது. இரவு பத்து மணி ஆகியது. சாப்பிட்டுவிட்டு படுக்க தயாரானார். வீட்டின் முன் அறையில்.. அவர் கழற்றி போட்டிருந்த. செருப்பை தேடினார். காணவில்லை. யாரும் அடிச்சிட்டு போயிட்டா னா.. என்று புலம்பினார். மனைவியிடம் கேட்டார்.
தூங்கும் பத்து கட்டில் பக்கத்திலே செருப்பை போட்டா காத்து கருப்பு எதுவும் தூக்கத்தில் வந்து ஒண்ணும் செய்யாதுன்னு சொன்னாங்க.அந்த தைரியத்தில் இருந்தேன். இப்ப நான் என்ன பண்ணுவேன்.. என்று கண்ணீர் விட்டார். உடனே அவரது மனைவி என் செருப்பு இருக்கே.. அதை கட்டில் பக்கம் போடுங்க. என்றார். கண்ணாயிரம் அய்யோ. ஆண்கள் கட்டில் பக்கம் பெண்கள் செருப்பை போடலாமா.. தெரியலையே என்று இழுத்தார். உடனே அவரது மனைவி, விளக்குமாறு போடலாம். எதுவும் உங்கள் பக்கம் வராது என்றார். அப்படியா சரி என்றார் கண்ணாயிரம். அவரது மனைவி இரண்டு விளக்குமாறை கண்ணாயிரம் கட்டில் அருகே போட்டார்.
ஏங்க இரும்பையும் பக்கத்துல வைச்சிக்கிடலாம். கிச்சன்ல ஒரு அருவா இருக்கு அதை எடுத்து தலைமாட்டுல வச்சிக்கிடுங்..என்றார் கண்ணாயிரம் மனைவி.
அய்யோ அருவாளா… கனவுல எவனாவது வந்து இந்த அருவாள எடுத்து கழுத்த வெட்டிட்டா… வேண்டாம் வேண்டாம்..
என்ன புலம்புறீங்க.. கனவு… கனவு…
கண்ணாயிரம் வெடுக்கென்ன போர்வையைபோர்த்தி படைத்தார். அப்போது வெளியே ஒலிபெருக்கியில். வெண்மேகமே.. வெண்மேகமே.. என்ற பேய் பாடல் காற்றில் மிதந்து வந்தது. கண்ணாயிரம் காதை இறுக்க பொத்திக்கொண்டார்.
-புதுவை தபசுகுமார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.