May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை விரும்பிய மோகினி/ நகைச்சுவை சிறுகதை/ தபசுகுமார்

1 min read

Mohini loved Kannayiram / comedy story / Thabasukumar

3.7.2021
கள்ள நோட்டு டிப்டாப் வாலிபர் கழுத்தை அறுத்து துண்டாக்குவது போல் கண்ணாயிரம் கனவு கண்டார். நள்ளிரவில் வந்த குடுகுடுப்பைக்காரனும் கண்ணாயிரம் உயிருக்கு ஆபத்து பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு போனான். இதனால் கோடாங்கியை பார்த்து பரிகாரம் கேட்கணுமுன்னு கண்ணாயிரம் மனைவி நினைத்தார். இரவில் கண்ணாயிரம் தூங்காமல் தவித்தார். விடிந்தது. கண்ணாயிரம் மனைவி எழுந்து பக்கத்து வீட்டு பெண்களிடம் இரவு குடுகுடுப்பைக்காரன் வந்தான்.. உங்கள் வீட்டில் எதுவும் சொன்னானா என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், நல்லகாலம் பிறக்குது, நல்ல காலம் பிறக்குது என்றுதானே சொன்னான். வேறு ஒண்ணும் செல்லவில்லை என்றனர்.
கண்ணாயிரம் மனைவி, அப்படியா… எங்க வீட்டில் மட்டும் ஏன் இந்த வீட்டு கொம்பனுக்கு ஆபத்து என்று சொன்னான். ஒண்ணும் புரியலையே என்று புலம்பினார்.
அப்போது ஒரு பெண் நீ ஒண்ணும்பயப்படாதே.. கோடாங்கியை கூப்பிட்டு வந்து பரிகாரபூஜை செய் எல்லாம் சரியாயிடும். போனவாரம் எங்க வீட்டு முன் குடுகுடுப்பைக்காரன் இப்படிதான் வந்து சொன்னான். நாங்க கோடாங்கியை கூப்பிட்டு வந்து பூஜைபோட்டொம். தாயத்து கட்டிவிட்டுபோனார். இப்போ எந்த பிரச்சினையும் இல்ல, என்றார்.
கண்ணாயிரம் மனைவி அப்படியா… நானும் பார்க்கிறேன் என்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் என்னக்கா.. கோடாங்கியை கூட்டிட்டு வரணுமா, நீங்க பேசியதை கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். காலையிலே போய் அவரை கூட்டிட்டு வரணும். இல்லைன்னா வேற யாரும் கூட்டிட்டு போயிடப்போறாங்க என்றார். உடனே கண்ணாயிரம் மனைவி… சரி தம்பி அவரை உடனே கூட்டிக்கிட்டு வா. என்று கூறினார். அந்த வாலிபரும் வேகமாக பாய்ந்து சென்றார்.
கண்ணாயிரம் எழுந்து இன்னைக்கு என்ன நடக்கப்போகுதோ என்று பயந்து வாசல் அருகே வந்தார். அவரது மனைவி, ஏங்க போய் உடனே குளிச்சுட்டு வாங்க… கோடாங்கி வந்துருவாரு. குறி கேட்கணும் என்று கூறினார்.
கண்ணாயிரம்.. ஏய் இதெல்லாம் எதுக்கு… அவன் வேற பயம்காட்டுவான். என்றார் பதட்டத்துடன்.
போங்க.. போங்க.. தாயத்து தருவார் பயம் எல்லாம்போயிரும்.. மச, மசன்னு நிக்காதீங்க என்றுவிரட்டினார்.
கண்ணாயிரம் கண்களை கசக்கியபடி குளிக்க சென்றார். அவர் மனைவி வாசலுக்கு வீட்டுக்கும் நடந்தபடி இருந்தார்.
சிறிது நேரத்தில் கையில் உடுக்கையுடன் கோடாங்கி கண்ணாயிரம் வீட்டு முன் வந்து மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கினார்.
ஆய்… ஊ.. சக்தி. மகமாயி….ஜக்கம்மா… காப்பாத்துமா பிள்ளைகளை… டன். டண்…டண் டண் என்று ஆவேசமாக உடுக்கை அடித்தார். அந்த சத்தம் கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். குளிக்க போன கண்ணாயிரம் இந்த சத்தம் கேட்டு அரண்டு போனார்.
உடுக்கையை இந்த அடி அடிக்கிறாரே… உள்ள வந்து என்ன பண்ணுவாரோ தெரியல நல்லா குளிச்சுட்டு போவோம் என்று தண்ணீரை உடம்பில் ஊற்றினார்.
கண்ணாயிரம் மனைவி வெளியே நின்ற கோடாங்கியை பார்த்தார்.
அய் கோடாங்கி வந்துட்டார். ஏங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க… என்று கத்தினார்.
கண்ணாயிரம் உள்ளே இருந்தபடி சோப்பு
போடல… என்றார்.
ஏங்க இப்ப போயி சோப்பு, கீப்புன்னுக்கிட்டு.. சோப்பு எல்லாம் போடாதீங்க.. போட்டாலும் அப்படிதான் இருப்பீங்க.. போடாட்டாலும் அப்படிதான் இருப்பீங்க.. சீக்கிரம் வாங்க என்றார். சரி, சரி என்றபடி ஒரு பாட்டை முணுமுணுத்தபடி குளித்தார். அங்கே என்ன சத்தம்.. என்று அவர் மனைவி அதட்டினார். கண்ணாயிரம் குளிக்கேம்மா என்றார்.
சீக்கிரம் வாங்க. என்று சொன்ன அவர் மனைவி கோடாங்கியை வீட்டில் உட்கார சொன்னார். அவர் உடுக்கையை ஓங்கி அடித்தபடி.. உள்ளே வந்தார். இந்த வீட்டு கொம்பனை எங்கே ம்… இந்த வீட்டுக்குள்ள ஒரு காத்து கறுப்பு வந்திருக்கு.. அதை விரட்டணும்.ம்..பரிகாரம் செய்யணும் தாயே பரிகாரம் செய்யணும்… ம்.. என்று சொல்லி படி உடுக்கையை ஓங்கி அடித்தார்.
கண்ணாயிரம் மனைவி, பரிகாரம் என்ன செய்யணும் சொல்லுங்க என்றார். தாயே, உன்னிடம் ஆயிரம், இரண்டாயிரம் கேட்கலை. எளிய பரிகாரம்.. நாலு வெத்தலை, நாலு பாக்கு, சூடம் சாம்பிராணி, இரண்டு தேங்கா, இரண்டு பிடி அரிசி., தட்சணை இரு நூறு ரூபா.. என்றார்.
கண்ணாயிரம் மனைவி கணக்கு போட்டு பார்த்தார். ம்… யோசிக்காதே தாயே, பணக்காரங்கன்னா பத்தாயிரம் செலவாகும்.. கஷ்டப்பட்டவங்க என்கிறதாலே குறைச்சு சொல்லியிருக்கேன்.. என்றார் கோடாங்கி.
கண்ணாயிரம் மனைவி, ஏங்க அவ்வளவுக்கு எங்களிடம் பணம் இல்லை என்று இழுத்தார்.
சரி, அரிசியை ஒரு படியாக்கிக்க, ஒரு தேங்கா வாங்கு, எனக்கு கூட நீ ஒண்ணும் தரவேண்டாம். காத்து கறுப்பு விரட்டணும் நீங்க நல்லா இருக்கணும். அதுதான் என் விருப்பம் என்றார் கோடாங்கி.
கண்ணாயிரம் மனைவி சரி என்றார். அருகில் நின்ற வாலிபர் ஒருவர், அக்கா.. நீங்க கவலைப்படாதீங்க.. ஒரு நூறு ரூபாய் எடுங்க.. கடையில் போய் பூஜை பொருள் வாங்கிட்டு வர்றேன் என்றான்.
கண்ணாயிரம் மனைவி எழுந்து சென்று கடுகு டப்பா திறந்து நூறு ரூபாயை எடுத்து அந்த வாலிபரிடம் கொடுத்தார்.
அவர் வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று பூஜை பொருட்கள்வாங்கி வந்தார். ஒரு வாழை இலை வேணும்.. என்றார் கோடாங்கி. அந்த வாலிபர் மீண்டும் மார்க்கெட்டுக்கு சென்று இலை வாங்கி வந்தார். பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தன. கண்ணாயிரம் மனைவி ஒருபடி அரிசி கொண்டு வந்து கொடுத்தார். இரண்டு செம்பில் சுத்தமான தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். இரண்டு எவர்சில்வர் செம்பில் தண்ணீர் கொண்டு வந்தார்.
கோடாங்கி தரையில் வாழை இலையை விரித்தார். லேசாக தண்ணீர் தெளித்தார். அரிசியில்ஒரு பிடி எடுத்து இலையின் ஒரு ஓரத்தில் வைத்தார். பின்னர் உடுக்கையை எடுத்து ஊ…. ஊ…. சக்தி என்று சத்தமிட்டபடி உடுக்கையை அடித்தார். எங்கே கொம்பன் என்று ஆவேசமாக கேட்டார். இதோ வந்துருவாரு…. ஏங்க.. சீக்கிரம் வாங்க.. அங்கே என்ன பண்ணுறீங்க என்று சத்தம் போட்டார். கண்ணாயிரம்.. டிரசை மாத்திக்கிட்டு வர்றேன். என்றார்.
என்ன டிரஸ்சு…அப்படியே வாங்க என்றார் அவரது மனைவி.
அதை கேட்டதும் கண்ணாயிரம் ஏய்.. நிறைய பேர் வந்திருக்காங்க.. வேட்டி உடுக்காம வந்தா நல்லாயிருக்காது..இதோ வேட்டி உடுத்திட்டு வந்திடுறேன் என்றார்.
அவரது மனைவி தலையில் அடித்து கொண்டார். அட… சீக்கிரம் வாங்க.. என்றார்.
கண்ணாயிரம் வேட்டி உடுத்து சட்டை போட்டு கழுத்தில் துண்டை கட்டியபடி உள்ளறையிலிருந்து வெளியே வந்தார். எல்லோரும் கூடியிருப்பதை பார்த்து வணக்கம், வணக்கம் என்றார்.
எல்லோரும் அவரை ஒருமாதிரி பார்த்தார்கள். கண்ணாயிரம் விழித்தார். கோடாங்கியும் அவரை ஒருமாதிரி பார்த்தார். ஓய். உட்காருமய்யா.. என்றார்.
கோடாங்கியின் முரட்டு தோற்றம், முறுக்கியமீசை, கரடுமுரடான குரல் கண்ணாயிரத்தை பயமுறுத்தியது. கோடாங்கி முன் கண்ணாயிரம் அமர்ந்தார். அவரை கூர்ந்து பார்த்தார் அவர். கண்ணாயிரம் மனைவியிடம் என்னம்மா பிரச்சினை என்று கேட்டார்.
அதுவா.. நைட்டு தூக்கத்தில் உளறுராறு. என் கழுத்தை வெட்டிட்டான், என் கழுத்தை வெட்டிட்டானு கதறுறாறு.. என்னசெய்யுறது என்று தெரியலைன்னு கண்ணை கசக்கினார்.
நீ கவலைப்படாதே தாயே நான்பாத்துக்கிறேன் என்றார் கோடாங்கி.
கண்ணாயிரம் தன்மனைவியிடம் ஒண்ணும் சொல்லாதே என்று கண்களால் சைகையில் கூறினார்.
சும்மா.. இருங்க… என்று அவர் மனைவி எச்சரித்தார். இதை கவனித்த கோடாங்கி.. ம்… சக்தி மகமாயி..என்று உரத்த குரலில் சொன்னார்.
வாழை இலையில் வெற்றிலை, பாக்கு எடுத்துவைத்தார். சூடத்தை கொளுத்தினார். கண்ணாயிரம் முகத்தை பார்த்து ஏதோ காத்து கருப்பு அடிச்சிருக்கு.. அதான் முகம் இருண்டிருக்கு.. என்று கூறியபடி செம்பு தண்ணீரை எடுத்து கண்ணாயிரம் முகத்தில் ஓங்கி அடித்தார். கண்ணாயிரம் கையினால் முகத்தை துடைக்க முயன்றார். அடுத்து கோடாங்கி அடித்த உடுக்கை சத்தத்தில் பயந்துபோய் கைகட்டி அமைதியாகிவிட்டார்.
கோடாங்கி அரிவாளை வாங்கி தேங்காயை உடைத்தார். அந்த தண்ணீரை செம்பில் ஊற்றினார். கண்ணாயிரத்துக்கு தேங்காய் தண்ணீர் குடிக்க ஆசை.. ஆனால் கேட்க பயம்.. அமைதியாக நாக்கால் உதட்டை தடவிகொண்டார். கோடாங்கி உடைத்ததேங்காயை வாழை இலையில் வைத்தார். தேங்காய் உடைக்கும் போது ஒரு சிறு சில்லு கண்ணாயிரம் முன் தெறித்து விழுந்தது. அதை எடுத்து வாய் பக்கம் கொண்டு போனார். மனைவி முறைத்துப் பார்க்கவே அந்த துண்டு தேங்காயை கிழே போட்டுவிட்டார்.
கோடாங்கி மீண்டும் உடுக்கையை ஓங்கி அடித்தார். மகமாயி…மாரி…. ஜக்கம்மா தாயே என்று பாடினார். பின்னர் தன் இடுப்பில் உள்ள பையிலிருந்து சோழிகளை எடுத்து உருட்டினார். ம்.. இரண்டும் இரண்டும் நாலு. நாலும் இரண்டும் ஆறு என்று ஏதோ கணக்கு போட்டார்.
கண்ணாயிரத்தை பார்த்து காட்டுபகுதிக்கு போனீயா.. என்று கேட்டார்.
உடனே. கண்ணாயிரம்… என்ன காட்டு பகுதிக்கு போனீயா என்று திருப்பி கேட்டார்.
கோடாங்கி கோபத்துடன்.. காட்டுபகுதிக்கு போனீயா என்று மீண்டும் கேட்டார்.
காட்டுக்கு போனேன் என்று சொன்னால் மனைவி திட்டுவார் என்று நினைத்து பதில் செல்லாமல் இருந்தார்.
இதை அறிந்த அவர் மனைவி, சும்மா சொல்லுங்க.. நான் ஒண்ணும் சொல்லமாட்டேன் என்றார். உடனே கண்ணாயிரம்… ம்.. என்று தலையை அசைத்தார். கோடாங்கி அடுத்த பாயிண்டுக்கு வந்தார். காட்டு பகுதியிலே ஆற்றை தாண்டினாயா என்று கேட்டார். கண்ணாயிரம் மெல்ல ஆத்தை எப்படி தாண்டமுடியும். ஆத்து தண்ணீரில் நடந்து அந்த பக்கம் வந்தேன்.. என்று சொல்லி சிரித்தார்.
ம். சிரிக்காதே…சின்ன வயதிலேயே ஏதாவது பெண்ணை விரும்பினாயா.. என்று கோடாங்கி அதட்டிக்கேட்டார்.
கண்ணாயிரம்… அய்அய்யோ.. அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல.. நான் சும்மாவே பயந்தவன்..என்னை பயம் காட்டாதீங்க..என்றுகண்களை கசக்கினார்.
கோடாங்கி முறைத்தார்.ம்.. ஒரு கன்னிய கண்ணில் காட்டுதே.. உண்மையை சொல் என்றார். கண்ணாயிரம். இல்லை என்று மறுத்தார்.
கோடாங்கி ம்.. இல்லைங்கிறீயா…. என்று சோழியை மீண்டும் உருட்டினார். எல்லாம் கவிழ்ந்து கிடந்தன. அதை பார்த்துவிட்டு உடுக்கையை அடித்தார்.. ம்.. யார்.. நீ உண்மையை சொல்லு என்று செம்பு தண்ணீருக்குள் பார்த்தபடி கேட்டார்… ம்.. முகம்.. தெரியுது.. கன்னிப்பொண்ணு… அழுகுது.. என்றார்.
ஏன் அழுகுற..அப்பாவியை ஏன் தூங்கவிடாமா..கழுத்தை பிடிச்சி நெரிக்கிற..அவர்தான் உன்னை விரும்பலைங்கிறாரே.. பிறகு ஏன் அவரை பின் தொடருர…என்றார்.
செம்பு அருகே காதை வைத்து.. பதில் சொல்…என்ன அவர் விரும்பலை.. நீதான் அவரை விரும்பினாயா.. என்ன சொல்லுற என்று கேட்டார்.
என்ன.. அவரது தலையின் சுருள் முடி, அரும்புமீசை, பால்வடியும் முகம் இதைப்பார்த்து நீயே விரும்பினாயா.. சரி, அவருக்கு திருமணம் ஆயிட்டே பிறகு ஏன் அவரை விரட்டுறே.. என்ன இருபது வருடத்துக்கு முன்னே அவர் அழகா இருந்தாரா.. என்ன சொல்லுற.. அவரையே திருமணம் செய்யணும்னு நினைச்சியா.. பிறகு என்ன ஆச்சி… ஆத்துல குளிக்க போனீயா.. வெள்ளம் அடிச்சுட்டு போயி… இறந்துட்டியா.. அப்புறம். அவர் ஆத்தைகடந்து போனபோது அவர்பின்னாலே வீட்டுக்கு வந்திட்டியா என்று கேட்டார்.
கண்ணாயிரத்தை பார்த்து இவருக்கு மோகினி பிடிச்சிருக்கு.. அதுதான் கழுத்தை நெரிக்குது.. அதை விரட்டணுமுன்னா கொஞ்சம் செலவாகும்.. அந்த பெண்ணு மூழ்கிய ஆத்துல கோழி வெட்டி பொங்கல் வைக்கணும். மல்லிகைபூ, லட்டு, அல்வா, சிலேபி வைத்து பூஐ வைக்கணும் என்றார், கோடாங்கி.
கண்ணாயிரம் விழித்தார். ஆத்தை கடந்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று மனதில் நினைத்தார்.
அவரது மனைவி, இந்த பூஜை எப்போ நடத்தணும். அந்த மோகினிக்கிட்டே இருந்து என் கணவரை மீட்டு கொடுங்க.. என்று கண்ஙலங்கினார்.
அதை பார்த்து தாயே, கலங்காதே, வருகிற பவுர்ணமி நாளில் இரவு பன்னிரெண்டுமணிக்கு அந்த ஆத்துக்கு நான், கண்ணாயிரம், இன்னொருவாலிபர் ஆக மூன்றுபேரு போகணும் என்றார்.
பூஜையில் கண்ணாயிரம் இடுப்புல ஒரு துண்டு மட்டும் கட்டிக்கலாம். சவுக்காலே அடிப்பேன்.. உங்களை அல்ல. உங்கள் மேலே இருக்கிற மோகினியை அடிப்பேன்.. நீங்க அழக்கூடாது. சத்தம் போடக்கூடாது. சத்தம்கேட்டா மோகினி போகாது. புரியுதா என்று கோடாங்கி கேட்டார்.
கண்ணாயிரம் ம் கண் சிவந்தது.
ஏங்க..இந்த பவுர்ணமி பூஜைக்கு எனக்கு பதிலா ஒரு டூப்பை அனுப்பலாமா.. என்னால் சவுக்கடியை தாங்கமுடியாது. இருட்டில மோகினிக்கு அடையாளம் தெரியவாபோகுது என்று கண்ணாயிரம் யோசனை சொன்னார்.
அனைவரும் அவரை எரித்துவிடுவதுபோல் பார்த்தனர்

  • வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.