May 2, 2024

Seithi Saral

Tamil News Channel

செமையா இருக்கு- இது தமிழா?/ முத்துமணி

1 min read

“sema” Is it Tamil word/ Muthumani

1.7.2021

ஐயா சட்டை புதுசா? தீபாவளி டிரஸ்ஸா.? டிரஸ் செம ஐயா. என் புதுச் சட்டையைப் பார்த்ததும் இப்படி மாணவன் ஒருவன் கருத்து சொன்னான்.
படம் பாத்தியாடா? செம படம்டா.. சினிமா பார்த்துவிட்டு இப்படி தன் நண்பனிடம் விமர்சிக்கும் நண்பன்.

சார் நமது வணக்கம் தமிழா குரூப் செமையா போய்க்கிட்டு இருக்கு. இப்படிப் பாராட்டும் படித்த மனிதர் ஒருவர்.

இன்றைய மொழி வழக்கில் பேசுகிறபோது இந்தச் செமை என்னும் சொல் எல்லோர் வாயிலும் தவறாமல் வந்து போகிறது.

இச்சொல்லின் பொருள்தான் என்ன? இச்சொல் பயன்படும் இடத்தைப் பார்த்தால், நன்றாக இருக்கிறது மிக நன்றாக இருக்கிறது. சிறப்பாக இருக்கிறது.. என்னும் பொருள்களைத் தருவது போல் தெரிகிறது அல்லவா?.

ஆனால் இச்சொல் நம் இலக்கியங்கள் எவற்றிலும் இடம் பெறவில்லையே. அப்படியானால் இச்சொல் வழக்கு அண்மையில்தான் நம் பேச்சு வழக்கில் ஏற்பட்டிருக்கக் கூடும். இது ஒரு புது வரவு என்று சிந்திக்கும்போது… மூளை வழக்கம் போல குறுகுறுத்தது.
இது எங்கேயோ கேள்விப்பட்ட சொல்லாக இருக்கிறதே. இச்சொல்லோடு நமக்குத் தொடர்பு இருப்பது போல தெரிகிறதே…

சற்றுச் சிந்தித்தபின்தான் பிடிக்க முடிந்தது.ஓ!. செம்மை என்னும் சொல்தான் இடையில் இருக்கும் ஒற்று(ம்) மறைந்து ‘செமை’ என்று மாறி இருக்கிறது என்று தோன்றியது.

செம்மை என்றால்.. சிறப்பானது, சரியானது …பொருத்தமானது என்றெல்லாம் பொருள் கொள்ளலாம் அல்லவா?… ஆங்கிலத்தில் சூப்பர்.. என்கிறார்களே வியந்துபோய் அத்தகு வியப்போடு சொல்லும்போது செம்மை எளிமையாகி ஓரெழுத்து கெட்டு அழகு பட்டு!; செமை என்று ஆகியிருக்கிறது.

‘செமை’ என்று மாறிய சொல்… நாட்பட நாட்பட பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் “செம’ என்றே மாறிவிட்டது… பார்த்தவுடன் ‘செம’ என்று சொன்னால்.. ஏற்கனவே சுமந்து கொண்டுதான் இருக்கிறேன். இன்னும் எதைச் சுமக்க என்று.. பதில் சொல்லத் தோன்றுகிறது. ஏனெனில் அக்காலப் பேச்சுவழக்கில் செம என்று சொன்னால் இதைச் சுமந்து செல் என்ற பொருளில் பயன்படுத்தி வந்திருக்கிறோம்…

‘செம’ என்னும் சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக ‘மொக்கை’.. என்று சொல்லிவந்த இளந்தமிழர்… மொக்கை என்னும் சொல்லுக்குப் பொருள் புரிவதற்கு முன்னே அதையும் ‘மொக்க’ என்று மாற்றிப் பயன்படுத்தி வருகிறார்கள். மொக்கப் படம் என்றால் அத்தனைச் சிறப்பான படமன்று என்பது பொருள்.. டேய் இது மொக்க ஃபோன் என்றால்,நான் எதிர்பார்த்ததுபோல் சிறப்பான அம்சங்கள் இல்லாத ஃபோன்இது என நாம் பொருள் எடுத்துக் கொள்ள வேண்டும்…

இதுபோன்று வேறு சில இடங்களில் நன்றாக இல்லை. லட்சணமாக நல்ல நிறம் இல்லை…அல்லது அசிங்கமாக இருக்கிறது .அல்லது எதிர்பார்த்தது போல் இல்லை என்பதைக் குறிக்க இன்றைய இளைஞர் பலரும் ‘சப்பை’ எனும் சொல்லைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.. இச்சொற்கள் எல்லாம் எங்கிருந்து வந்தன? எந்த இலக்கியத்தில் இவை இருக்கின்றன? சங்ககாலச் சொற்களா? வள்ளுவர் இச்சொற்களை ப் பயன்படுத்தியிருக்கிறாரா? கம்பராமாயணத்தில் இச்சொற்கள் இருக்கறனவா? என்று தேடிப்பார்த்தால் எங்கும் இல்லை. இன்றைய இளைஞர் மொழி ஆராய்ச்சியின் பயனாகப் புதிய சொல்லாக்கம் செய்திருக்கிறார்கள் என்கறெண்ணி மகிழலாமா? அல்லது இது என்ன கூத்து என்று எண்ணி வருந்த லாமா? இவற்றைச் சொற்கள் என்று சொல்லலாமா.!. என்பதும் புரியவில்லை. இது போன்ற சொற்கள் குறித்து ஆய்வு கலந்தாய்வு விவாதம் மேற்கொள்ளுமாறு இன்னும் இது போன்ற சொற்கள் என்ன என்ன இருக்கின்றன?.. என்பது போன்ற ஒரு ஆய்வரங்கம் மேற்செல்லட்டும் நம்முடைய குழுவில் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

-தமிழ் முத்துமணி.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.