மக்களவையில் பாதுகாப்பு துறையினர் போராட்டம் நடத்த தடை செய்யும் மசோதா தாக்கல்
1 min read
The Lok Sabha has tabled a bill banning security forces from staging protests
22.7.2021
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே இன்று அத்தியாவசிய பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் வேலை நிறுத்தம், போராட்டம் நடத்த தடை விதிக்கும் புதிய மசோதாவை பாதுகாப்புத் துறை இணை மந்திரி அஜய் பட் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தொழில்துறை. ராணுவ தளவாட வழங்கலில் தன்னாட்சி, பொறுப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக அத்தகைய தொழிற்சாலைகளை நூறு சதவீதம் அரசுக்கு சொந்தமான கார்ப்பரேட் நிறுவனம் அல்லது நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் அதனை ஒரு நிறுவனமாக்க அரசு முடிவு செய்தது.
இந்த முடிவுக்கு எதிராக, ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளன. வருகிற 26-ந் முதல் வேலை நிறுத்தம் ஆரம்பமாக உள்ளது.
மசோதா
இந்த நிலையில் தான் நாடாளுமன்ற மக்களவையில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை மசோதா 2021 என்ற புதிய மசோதாவை பாதுகாப்புத் துறை இணை மந்திரி அஜய் பட் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.
இச்சட்டம் அத்தியாவசிய பாதுகாப்பு சேவை துறையில் வேலை நிறுத்தத்தை தடை செய்யும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.
மேலும் வேலை நிறுத்தம், போராட்டம் போன்றவற்றில் இத்துறையினர் ஈடுபட்டால் பணி நீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத வேலைநிறுத்தங்கள், அதைத் தூண்டுதல் மற்றும் அதற்கு நிதியுதவி வழங்குதல் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கவும் இம்மசோதா அதிகாரமளிக்கிறது.