May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆலமரத்தில் ஊஞ்சல் ஆடிய கண்ணாயிரம்/ நகைச்சுவை சிறுகதை

1 min read

Swing game on the banyan tree by kannayiram / story by thabasukumar

26/7/2021
மோகினியை விரட்ட பவுர்ணமி பூஜையில் கலந்து கொள்ள நள்ளிரவில் கண்ணாயிரம் கோடாங்கி, மோட்டார் சைக்கிள் வாலிபர் சென்றனர். அப்போது ஒத்தையடி பாதையில் சென்றபோது நல்லபாம்பு வழிமறித்தது. அதை கோடாங்கி கம்பால் தாக்கிய நேரத்தில் கம்பை பாம்பு சுற்றியது. உடனே கண்ணாயிரம், கோடாங்கி, வாலிபர் மூவரும் பயந்து ஓடினர். சிறிது தூரம் ஓடியபின் அவர்கள் நின்று யோசித்தார்கள். அருகில் விறகு கட்டை குவியல் கிடந்தது. கோடாங்கி அதில் ஒன்றை எடுத்தார். கண்ணாயிரமும் சரி போலாம் ஒரு விற்கு கட்டையை எடுத்து சுற்றினார்.
பொங்கல் பானையைதலையில் சுமந்த வாலிபர் கண்ணாயிரத்தை பார்த்து அண்ணே எனக்கு ஒரு விறகு கட்டை கொடுங்க என்று கேட்டான். இவன் தயவு நமக்கு வேண்டியது இருக்கு. அதனால் ஒருகட்டை எடுத்து கொடுப்போம் என்று ஒரு விறகு கட்டையை எடுத்து கொடுத்தார்.
அந்த வாலிபர் பானையை தலையில் ஒருகையில் பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் விற்கு கட்டையை ஊன்றியபடி நடந்தார். கோடாங்கி முன்செல்ல மற்றவர்கள் பின்னால் நடந்தார்கள்.
கண்ணாயிரத்துக்கு முள் குத்தி கால் வலித்தாலும் சமாளித்த படி நடந்தார். ஆற்றங்கரை இன்னும் எவ்வளவு தூரம் என்று கண்ணாயிரம் கேட்டார். இன்னும் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் என்றார் கோடாங்கி.
நிலா வெளிச்சம் அதிகமாக இருந்தாலும் கோடாங்கி தீபந்தத்தை ஏந்தியபடி நடந்தார். ஆந்தை அலறும் சத்தம் கேட்டது. கண்ணாயிரம் மெல்ல நடுங்கினார். வாலிபரை தனக்கு பின்னால் வருமாறு கூறிவிட்டு கோடாங்கி யின் அருகில் நடந்து வந்தார். அடுத்து நரி ஊளையிட்டது. ஏன் இந்த நரி தூங்காதா என்று கண்ணாயிரம் கேட்டார். அதுக்கிட்ட போய் யார் கேட்கிறது என்று வாலிபர் சொன்னார்.
தம்பி பயம் வராமல் இருக்கணுமுன்னா பாட்டுபாடிக்கிட்டு போகணும்ன்னு சொல்வார்கள். நீ ஒரு பாட்டு பாடு என்றார் கண்ணாயிரம். நான் படவில்லை என்றார் வாலிபர்.
அப்போது ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன் என்ற பாடல் எதிரொலித்தது. அந்த பாடலை கேட்டதும் கண்ணாயிரம் கால்கள் நடுங்கியது. கோடாங்கி அந்த குரல்கள் திசையை நோக்கினார்.
வாயில் சுருட்டை புகைப்படி தலை முடியை விரித்து போட்டபடி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். இடுப்பில் சின்ன கோவணம் மட்டும் இருந்தது. கண்ணாயிரம் கண்களை மூடிக்கொண்டார். கோடாங்கி பயப்படாமல் ஒதுங்கி நின்றார். பாட்டு பாடி வந்தவர் சுருட்டை உற்சாகமாக இழுத்தபடி வந்தவர் திடீரென்று நின்றார்.
கண்ணாயிரத்தை பார்த்து பலத்த குரலில் சிரித்தார். பின்னர் கண்ணாயிரம் கன்னத்தில் ஓங்கி ஒரு அடி கொடுத்து விட்டு சிரித்தபடியே சென்றார். கண்ணாயிரத்துக்கு தலை சுற்றியது. கோடாங்கி கோபத்துடன் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன். காதல் தோல்வி. இறந்து போன காதலியை நினைச்சு பாடுறான்.
சரி உன்னை ஏன் அடிச்சான் தெரியலையே அவனை பார்த்து சிரிச்சியா என்று கோடாங்கி கேட்டார்.
நான் கண்ணை நல்லா மூடிக்கிட்டேன்என்று பரிதாபமாக கண்ணாயிரம் சொன்னார்.
கண்ணை மூடிட்டா அவனுக்கு பிடிக்காது போலிருக்குது என்றார் கோடாங்கி.
கண்ணாயிரம் வலிதாங்க முடியல அய்யோ என்று முணங்கினார். அதை பார்த்து வாலிபர் சிரித்தார். கண்ணாயிரம் அண்ணே இனி பாட்டு கேட்பீங்களா என்று நக்கலடித்தான்.
டேய் கேலி பண்ணாதேடா என்று கண்ணாயிரம் கெஞ்சிக்கேட்டார்.
சரி அண்ண இனி நான் பாடட்டுமா என்று கேட்டான். வேண்டாம் வேண்டாம் யாராவது வந்து என் கன்னத்தில் அடிப்பாங்க என்று சொன்னார் கண்ணாயிரம்.
சிரித்து பேசிக்கிட்டே நடந்தார்கள்.
கண்ணாயிரம் மெல்ல கோடாங்கியிடம் நாம நேர் வழியிலேதானே போறோம் என்று கேட்டார். அவர் இல்லை நாம குறுக்குவழியிலே போகிறோம் என்றார்.
கண்ணாயிரம் அய்யோ குறுக்கு வழியிலே போடக்கூடாது ன்னு என் மனைவி சொல்லியிருக்கா என்றார்.
கோடாங்கி கோபத்தில் யோவ் அது வாழ்க்கையில் குறுக்கே போடக்கூடாது. காட்டில் குறுக்கே போகலாம் என்றார்.
கண்ணாயிரம் அப்படியா எனக்கு அது தெரியாம போச்சு என்று இழுத்தார்.
எனக்கு இப்ப தண்ணீதாகமாக இருக்கு என்றார்.
இருக்கட்டும் ஆற்றுக்கு போன பிறகுதான் தண்ணீர் குடிக்க முடியும் என்று கோடாங்கி சொன்னார். ஆத்துலேயா ஏற்கனவே அதில் இறங்கி தண்ணி குடிச்சுட்டு சிக்கலா போச்சு என்றார்.
சரி, பூஜையில் தேங்காய் உடைக்கும் போது தேங்காய் தண்ணீர் தர்றேன் என்றார். கண்ணாயிரத்துக்கு நாக்கில் எச்சில் ஊறியது. மகிழ்ச்சியாக நடந்து வந்தார்.
சிறிது நேரத்தில் ஆற்றங்கரை பகுதி வந்தது. ஆற்றில் தண்ணீர் வேகமாக ஓடியது. ஆற்றங்கரை பக்கத்தில் உள்ள ஆலமரத்தை நோக்கிசென்றார் கோடாங்கி சென்றார். கண்ணாயிரமும் சரிபோலாம் என்று அவர் பின்னால் வேகமாக சென்றார். ஆலமரத்தின் ஏராளமான விழுதுகள் தொங்கின. அதை பார்த்தும் கண்ணாயிரம் உற்சாகமாய். குதித்தார். ஓடிப்போய் ஒருவிழுதை பிடித்துஆடினார்.
கோடாங்கி ஆலமரத்தின் அடியில் தனது பையை வைத்தார். பையிலிருந்து இரண்டு தேங்காயை எடுத்தார். துணி சுற்றப்பட்ட செம்பை எடுத்தார். ஒரு வாழை இலையை விரித்தார். அதில் வாழைபழம் வைத்தார். மல்லிகை பூவை ஒரு ஓரத்தில் வைத்தார். அதன் வாசம் கம கம என்று அடித்தது. அந்த வாசத்தில் மயங்கிய கண்ணாயிரம் ஆலமரத்தின் பெரிய விழுதை பிடித்து வேகமாக ஊஞ்சல் ஆடினார்.
மோட்டார் சைக்கிள் வாலிபர் பொங்கல் பானையை தலையில் இருந்து இறக்கிவைத்துவிட்டு அப்பாட என்று பெருமூச்சுவிட்டார்.
கண்ணாயிரம் உற்சாகமாக ஊஞ்சல் ஆடுவதை பார்த்து கண்ணாயிரம் அண்ண ரொம்ப சூப்பர் என்றான். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. வேகமாக ஊஞ்சல் ஆடினார். அப்போது மோட்டார் சைக்கிள் வாலிபர் திடீரென்று ஆகாயத்தில் தட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டேன். குகூகுகூ என்று பாடினார். அதை கேட்ட கண்ணாயிரம் டேய் பேய் பாட்டு போடாதே எனக்கு பயமா இருக்கு என்று அலறினார். வாலிபர் பாட்டை நிறுத்தவில்லை. கண்ணாயிரம் ஆலமரவிழுதை விட்டு பொத்தென்று கீழே விழுந்தார். மூச்சு பேச்சில்லை.

  • வே. தபசுக்குமார். புதுவை

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.