நடமாடும் வாகனம்/ முத்துமணி
1 min read
Mobile vehicle By Muthu mani
16.8.2021
ஊரடங்கு நேரத்தில் நாள்தோறும் தமிழுக்கு ஒரு சோதனை வந்துவிடுமோ என்னவோ.??. காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வந்த வண்டியில் பின்வருமாறு கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறான்..
‘நடமாடும் காய்கறி வாகனம்’
படித்ததும் கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை.
இது நடமாடும் காய்கறி வாகனம் என்றால், நடமாடாத காய்கறி வாகனம் என ஒன்று இருக்கிறதா? அது எங்கே இருக்கிறது?
ஓஹோ..நடமாடும் காய்கறிக் கடை’ என்று எழுத நினைத்து, தவறாக இப்படி எழுதி வைத்திருக்கவேண்டும்.
அது சரி .நடமாடினால்தானே, அது வாகனம்… நிறுத்தி முடக்கிவைத்தாலும், மீண்டும் இயக்கும்போது அது நடமாடத்தானே செய்யும். நடமாடும் ஆற்றல் இல்லாத ஒன்றை வாகனம் என்று சொல்ல இயலாதே. ஊனமுற்ற வாகனம் என்று ஏதும் உண்டா? அல்லது காய்கறிக் கடையில் போய்,’ நடமாடாக் காய்கறி வாகனம்!!! ‘என்று எழுத முடியுமா.?. இப்படி எல்லாம் சிந்திக்கத் தோன்றியது… குறுகுறுக்கும் மூளை.
ஒருவேளை,’ நடமாடும் காய்கறி வண்டி’
என்று அவன் எழுதியிருந்தாலும் நம் புத்தி தப்புதானே சொல்லும். ‘நடமாடும் காய்கறிக் கடை’ என்றோ ‘காய்கறி வாகனம்’ என்ற எழுதினால் போதுமே.
அது சரி. வாகனம் என்ற சொல் சரியானதுதானா? அல்லது வண்டி என்று எழுத வேண்டுமா?
வாகனமா? வண்டியா?
..
மாடு இழுப்பதனால் விசையுற்று ஓடும் வண்டி மாட்டு வண்டி. கால்களால் மிதிப்பதால் விசை பெற்று ஓடுவது மிதிவண்டி. மிதிவண்டி என்று சிறுவயதில் எழுதியபோது, ஆசிரியர் அதுவும் தப்பு என்று சொன்னதாக நினைவு..
புதிதாக வந்த தமிழாசிரியர் எதையும் தமிழிலேயே, தூய தமிழிலேயே பேசவும் எழுதவும் செய்வார். அவர் சைக்கிளுக்கு ஒரு பெயர் சொன்னார் பாருங்கள்…
ஈருருளி..
அப்போது நாங்கள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தோம் எங்கள் ஊரில் ஈருள்ளி என்றால் வெங்காயத்தைக் குறிக்கும்..
சைக்கிளைப் போய் ஈருள்ளி என்று சொல்லிக்கொண்டு, இவர் என்னடா புது வாத்தியார்???. ஒன்றுமே தெரியவில்லை.
பின்னாளில் தமிழ் படித்த பிறகு புரிந்தது. அவர் கண்டுபிடித்த சொல் அல்லது உருவாக்கிய சொல் எப்படிப் பிறந்தது?
bicycle…. சைக்கிள் என்றால் உருளை
bi என்றால் இரண்டு. இந்த இரு சொற்களையும் சேர்த்தால், இரண்டு +உருளை. இரு+உருளை…ஈருருளை…. ஆனால் உருண்டு போகிறது அல்லவா? அதனால் உருளக்கூடிய பொருள் உரருளி என்று மாற்றம் பெற்று ஈருருளி ஆனது…
வண்டி வாகனம் உருளி
எதைப் பயன்படுத்துவது?
வாகனம், வண்டி, உந்து ஊர்தி…
மாட்டு வண்டி இச்சொல் கேட்கும்போது நன்றாக இருக்கிறது. மாட்டு உந்து.. மாட்டு வாகனம்??? பொருத்தமாகத் தெரியவில்லை.
மிதிவண்டி சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது… அப்படியானால் bus உருவத்தில் பெரிதாக இருப்பதால், பெரிய வண்டி அல்லது பேர் வண்டி… இரண்டுமே கேட்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கிறது…
பேருந்து… ஆம்…இப்போது ஒரு புதிய சொல் கிடைத்திருக்கிறது. அதுதான். உந்து
பெரிதாக இருப்பதால் பேருந்து. மகிழ்ச்சியாக இனிமையாக தனிமையாக பயணம் செய்ய உதவுவது pleasure car மகிழுந்து…இன்னூர்தி…
சரக்கு ஏற்றிச் செல்வதால் சரக்குந்து பழுவுந்து..lorry.
Train… புகைவண்டி என்று சொன்ன காலம் மறைந்து…… தொடருந்து என்று பெயர் பெற்றது.
ஆகாய விமானம் மறைந்து வானூர்தி வந்தது.
இதில் வாகனம் என்ற சொல் குறிப்பாகக் கவனிக்கத்தக்கது.. ஆங்கிலத்தில் Wagon
எதிலிருந்து எது வந்தது என்று தெரியாவிட்டாலும் வாகனம் என்பது தமிழ்ச்சொல்லன்று என்பது உண்மை..
மாட்டு வாகனம் என்று சொன்னவுடன்… கோவிலில் திருவிழா நேரங்களில் அம்மன் வீதி உலா செல்ல பயன்படுத்தும் பல்வேறு வாகனங்களுள் காளை வாகனம் நினைவுக்கு வந்துவிடும்…. மாடு இழுத்துச் செல்லும் வண்டி நினைவுக்கு வராது.
சிம்ம வாகனம் மயில்வாகனம்… சிம்ம வாகினி.
மயில்வாகனன் என்னும் பெயரைத் தமிழ்ப் படுத்தும்போது, மயில் ஊர்தியான் என்று கூறுவதுண்டு.. அதையே மயிலேறி என முருகனைக் குறிக்கும் பெயராக சூடிக் கொள்வது உண்டு.
சொர்க்க ரதம், அமரர் ஊர்தி..
நோயுற்றோரை (துயரர்) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவும் வண்டி
துயரர் ஊர்தி… இறந்த உடலை வீட்டிற்கோ காட்டிற்கோ கொண்டு செல்லும் வண்டி
அமரர் ஊர்தி…
ஊர்ந்து செல்லும் வலிமை உள்ளது ஊர்தி.. நல்ல காரணப்பெயர் அல்லவா?
இவற்றுள் ரதம் வடசொல் என்பது பார்த்தவுடன் தெரியும். ரதம் கஜம் துரகம் பதாதி… நாற்படை.. ரதம் என்பது.. குறிப்பாகத் தேர் எனும் பொருள்தான் குறிக்கும் Car.
வண்டி.. cart.. vehicle… வண்டி எனும் இச் சொல் தமிழ்ச்சொல் அன்று அது வடசொல் என்று அறிக.
சிறுவயதில் கோவில் திருவிழாவில் நான்கு சக்கரங்களுடன் கூடிய வண்டி ஒன்று வரும் சப்பரம் ஏற்றிச்செல்ல… அதைச் சகடா வண்டி யாரோ சொல்லி தந்தார்கள். பிறகு அது சகடம் அல்லது சகடை.. என்றும் அதன் பொருள் வண்டி என்பதும் புரிந்தது. அத்துடன் வண்டி என்பதை சேர்த்து கூறக் கூடாது என்பதெல்லாம் இலக்கணம் பிறகு தெரிந்தது. மேலும் சகடம் சகடை என்பதும் தமிழ்ச் சொற்கள் அல்ல..
அதனால்தான் வள்ளுவர்,’ பீலிபெய் சாகாடும்.’.. என்று எழுதினார்..
சாகரம் முதலில் வரக்கூடாது என்பதற்காக.
சரி வண்டி வாகனம் சகடம் ஊர்தி உந்து இவற்றுள் எச்சொல்ல் பொருத்தமானது இச்சொல் சரியானது.. இவற்றுள் ஊர்தி உண்டு இரண்டும் தமிழ்ச் சொற்கள்.. இவற்றை எந்த இடத்தில் பொருத்தமாக இருக்கிறதோ அங்கே பொருத்திச் சொல்ல வேண்டும் என்பதுதான் தெளிவு.
வானூர்தி
நகரப்பேருந்து
மிதியுந்து
இன்னூர்தி
நடமாடும் காய்கறிக்கடை என்று… அவன் எழுதி வைத்திருந்தால் இவ்வளவு பேச வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது…
-தமிழ் முத்து மணி