“தலிபான்கள் என்னை தேடிவந்து கொன்றுவிடுவார்கள்” முதல் பெண் மேயர் பேட்டி
1 min read
“The Taliban will come looking for me and kill me” First female mayor interview
17/8/2021
ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை தலிபான் கைப்பற்றியுள்ள நிலையில், காபூலில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தினருடன் உள்ள அந்நாட்டின் முதல் பெண் மேயர் சரீபா கபாரி (வயது27). “அவர்கள் வந்து என்னைப் போன்றவர்களை கொல்வார்கள் என காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
சிறுமிகளுக்கு எதிரான அடக்குமுறை
ஆப்கானிஸ்தானில் 2001 வரை தலிபான்கள் ஆண்ட போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக அடக்குமுறைகள் கட்டவழித்து விடப்பட்டிருந்தன. அவர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சமூக, அரசியல் பங்கேற்பு அனைத்தும் மறுக்கப்பட்டு அடிமைகளாக வைத்திருந்தனர்.
பின்னர் 2001ல் அமெரிக்க படைகளால் தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி மலர்ந்ததும் பெண்களுக்கு மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளும் படிப்படியாக கிடைத்தன. இருப்பினும் அதனை எதிர்க்கும் வகையில் தலிபான்கள் அவ்வப்போது பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வெறியாட்டம் ஆடினர்.
பெண் மேயர் அச்சம்
இந்நிலையில் ஒட்டுமொத்த ஆப்கனும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனால் ஆப்கன் அரசு நிர்வாகத்தில் பங்கேற்ற பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
பிரிட்னின் ஐ நியூஸ்க்கு ஆப்கனின் முதல் பெண் மேயர் சரீபா கபாரி அளித்த பேட்டியில், “அவர்கள் வருவதற்காக நான் இங்கே காத்திருக்கிறேன். எனக்கோ என் குடும்பத்துக்கோ உதவ யாரும் இல்லை. குடும்பத்தினருடனும், கணவருடனும் அமர்ந்துள்ளேன். என்னைப் போன்றவர்களை தேடி வந்து கொல்வார்கள். என் குடும்பத்தை விட்டு என்னால் செல்ல முடியாது. அப்படியே போனாலும் எங்கே செல்வது.” என குரல் உடைந்த நிலையில் பேசியுள்ளார்.
தலிபான்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த போதே, அரசியலில் ஈடுபடும் பெண்களை கொல்வோம் என பலமுறை எச்சரித்துள்ளனர். இருப்பினும் சரீபா, 2018ல் ஆப்கனின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். வார்தாக் மாகாணத்திலுள்ள மைதான் சாஹர் நகர மேயராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை மூன்று முறை தலிபான்கள் கொல்ல முயற்சித்தனர். அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
ஆனால் கடந்த நவம்பரில் சரீபாவின் தந்தையும், முன்னாள் ராணுவ வீரருமான அப்துல் வாசி கபாரி சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதே சரீபா “என்னை தலிபான்கள் தேடி வந்தாலும் நான் இறக்க அஞ்சமாட்டேன்” என கூறியிருந்தார்.