May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

1 min read

Increased water supply in Courtallam Falls

29.8.2021-

குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றால சீசன்

குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, மாதங்கள் சீசன் காலங்களாக கருதப்படும். இந்த காலங்களில் குற்றாலத்தில் குளிர்ந்த காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும். குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
குற்றாலத்தில் ஏற்படும் குளிர்ச்சியான, இதமான சூழ்நிலையை அனுபவிக்கவும், அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளிக்கவும் நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த சீசன் காலங்களில் குற்றாலத்திற்கு வருகை தருவார்கள்.

குளிக்க தடை

ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் தமிழக அரசு குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு சீசனை முன்னிட்டு பொதுமக்கள் குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டும் அதே நிலை நீடிப்பதால் குற்றாலம் சீசனை அனுபவிக்க பொதுமக்கள் அனுமதிக்கப் படவில்லை.

அருவிகளில் தண்ணீர்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை, உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஆனாலும் அனைத்து அருவிகளிலும் குளிக்க அரசு தடை விதித்துள்ளதால் அனைத்து அருவிகளுக்கும் செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அருவிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அதிக அளவில் கொட்டிய நிலையிலும் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

தற்போது தமிழக அரசு கொரோணா வைரஸ் பரவல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று பொது மக்கள், வியாபாரிகள், சுற்றுலாப்பயணிகள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி தமிழக அரசு உடனடியாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க விரைவில் அனுமதி அளிக்கும் என்று அனைத்து தரப்பு மக்களும் ஆவலோடு எதிர்நோக்கி உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.