கேரளாவில் நிபா வைரசுக்கு சிறுவன் பலி; தமிழக எல்லையில் கண்காணிப்பு
1 min read
Boy dies of Nipah virus in Kerala; Surveillance at the Tamil Nadu border
5/9/2021
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். இதையடுத்து, அங்கு ஒன்றிய குழு விரைந்துள்ளது. கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நிபா வைரஸ்
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த 12 வயது சிறுவன், நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கடந்த 3-ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவன் இன்று காலை அவன் உயிரிழந்தான். இதையடுத்து, கேரளாவிற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை ஒன்றிய அரசு அனுப்பி வைத்து உள்ளது.
இது தொடர்பாக கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:
நடவடிக்கை
சூழ்நிலையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதனால், யாரும் பீதி அடைய தேவையில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கையுடன் அனைவரும் இருக்க வேண்டும்.
இதுவரை சிறுவன் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை.
நான் கோழிக்கோடு சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காணிப்பு
கடந்த 2018 முதல், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே கொரோனா பாதிப்பால் திணறி வரும் கேரளாவிற்கு, புதிதாக நிபா வைரஸ் பாதிப்பும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தும்படி சுகாதார அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.